சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்கிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறதே ?
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியமாக 26.12 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒரே விலை என்ற அடிப்படையில் முடிவு செய்திருக்கிறது. நடப்பு மாதத்தில் 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.594 ஆக உள்ளது. இந்த விலையானது மானிய சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் ஆகிய இரண்டிற்குமான ஒரே விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மானிய சிலிண்டர் வாடிக்கையாளர்களின் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுவது இல்லை. விலையை ஒன்றாக வைத்ததன் மூலம் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறத
மத்திய அரசின் மானிய ரத்து முடிவால் 26.12 கோடி வாடிக்கையாளர்களில் 18 கோடி பேருக்கு மானியம் இனிமேல் கிடைக்காது. குறைந்த ஆண்டு வருமானம் பெறக் கூடிய 8 கோடி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு மானியத்திற்கு என ஒதுக்கப்பட்டதில் ரூபாய் 20 ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய போக்கு காரணமாக 18 கோடி சமையல் எரிவாயு மானியம் பெறுகிற குடும்பங்கள் குறிப்பாக, பெண்கள் பாதிக்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் போராட வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆந்திர மாநில அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியை தெலுங்கு மொழி வழியில் இருந்து ஆங்கில மொழி வழி கல்விமுறைக்கு மாற்றியதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே ?
ஆந்திர மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி முறையை பயில்வதிலும், அதன்மூலம் சிறப்பான வாய்ப்புகள் பெறுவதையுமே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் ஆந்திர அரசு இந்த முற்போக்கான கொள்கை முடிவை எடுத்திருக்கிறது’ என கூறப்பட்டிருந்தது.
பொதுவாக, தாய்மொழி வழிக் கல்வி தான் மிகச் சிறந்தது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழகத்தில் ஒரு காலத்தில் தமிழ் மொழி வழிக் கல்வி தான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை இருந்தது. ஆனால், கல்லூரி புதுமுக வகுப்பில் ஆங்கில வழி கல்விமுறை புகுத்தப்பட்டது. அதேபோல, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளும் ஆங்கில வழி கல்வி மூலமாகவே போதிக்கப்பட்டது. ஏறத்தாழ 11 ஆண்டுகாலம் தமிழ் வழியில் படித்து விட்டு, திடீரென கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஆங்கில வழிக் கல்வி புகுத்தியதன் விளைவாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் எண்ணிலடங்காதவை. அவர்களுடைய எதிர்காலம் என்பது ஆங்கில மொழியின் அடிப்படையில் தான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் ஆங்கில மொழி கல்வியில் சிறப்பாக பயில முடியாத காரணத்தினால் அடைந்த பாதிப்புகளுக்கு அளவே இல்லை. அதனால் தான் தமிழகத்தில் தமிழ் வழி பாடத் திட்டத்தில் சேர்த்திட பெற்றோர் விரும்புவதில்லை.
பெரும்பாலான மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்ப்பதற்கு காரணமே ஆங்கில மொழி வழிக் கல்வி படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று கருதுகிறார்கள். இத்தகைய எதார்த்த நிலையை புதிய கல்விக் கொள்கையை தயாரித்தவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை பார்க்கிற போது மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. எனவே, எதார்த்தத்திற்கும், வாழ்க்கை நடைமுறைக்கும் தொடர்பில்லாமல் கல்வி முறை இருப்பது குறித்து ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ., டி. ராஜாசிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறதே ?
இந்தியாவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதை தேசிய முரசு டாட் காம் தமிழாக்கம் செய்து வெளியிட்டது. அக்கட்டுரையில் ராஜாசிங் பற்றிய குறிப்பும் இருந்தது. அந்த அடிப்படையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முகநூல் நிறுவனத்திடம் புகார் கூறியது. அது தொடர்பாக நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக ராஜா சிங்கிற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்திருக்கிறது. அதேபோல, அபாயகரமானவர்கள் பட்டியலில் ராஜாசிங் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அவமானம் பா.ஜ.க.விற்கு இருக்க முடியாது.
தெலங்கானா மாநில சட்டமன்ற உறுப்பினரான டி. ராஜாசிங் தமது முகநூல் பதிவில், ‘முஸ்லீம்கள் அனைவரும் துரோகிகள். ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் சுட்டுத் தள்ள வேண்டும்’ என்று கூறி, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கிற வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவும் முகநூலில் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிற வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது பதிவுகளுக்கு முகநூல் நிறுவனம் தடை விதிக்க வேண்டும். அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தமிழகத்தின் அமைதி சீர்குலைந்து விடும் என்பதை முதலமைச்சர் எடப்பாடி சிந்திக்க வேண்டும்.
சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு என அனைத்து நாளேடுகளிலும் பிரதானமாக செய்தி வெளிவந்துள்ளதே ?
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. ஆனால், சசிகலாவும், மற்றவர்களும் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளிவருகிற செய்தியை நாளேடுகள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன என தெரியவில்லை. இந்திய விடுதலைக்காக செக்கிழுத்த வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாள் செப்டம்பர் 5. அவரைப் பற்றி ஒரு நாளேடு தவிர மற்ற எதிலும் எந்த குறிப்பும் இல்லை. ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரின் விடுதலை குறித்து இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவது எந்த வகை பத்திரிகை தர்மம் ?
கடன் தவணை செலுத்துபவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே ?
வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாத தவணையை கொரோனாவால் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதைமீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடமிருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதில் மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டித்திருக்கிறது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அதை வலுவிழக்கக் செய்யக் கூடாது, வங்கிக் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது, சில தளர்வுகளை அளிக்கலாமே தவிர, விவசாயக் கடன் உள்ளிட்டவற்றிற்கு தவணைக்கு அவகாசம் வழங்க முடியுமே தவிர, வட்டியை தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை’ என்று கூறியது செய்தியாக வெளிவந்துள்ளது. கொரோனாவினால் மக்களும், தொழில் நிறுவனங்களும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிற வேளையில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடனுக்கான வட்டி செலுத்துவதை தள்ளி வைக்க முடியுமே தவிர, தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறியது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு நிவாரணங்களை வழங்கலாம். கொரோனா என்பது எவரும் எதிர்பார்க்காதது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இதுவரை அதில் 36 சதவிகிதமான ரூபாய் 1.11 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளின் கடுமையான நிபந்தனை காரணமாக மீதி நிவாரணத் தொகையை பெற முடியவில்லை. கொரோனா நோயை விட கொடுமையான அணுகுமுறையை மத்திய நிதியமைச்சகம் கையாண்டு வருவதால் அனைத்து தொழில்களும் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை குற்றச்சாட்டாக கூறியும், மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியதற்காக டாக்டர் கஃபீல்கானை பணியில் இருந்து யோகி ஆதித்யநாத் அரசு தற்காலிக நீக்கம் செய்திருக்கிறதே ?
டாக்டர் கஃபீல்கான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி யோகி ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பேச்சில் எந்தவிதமான தேசவிரோதமான கருத்துக்களும் இல்லை என்று கூறி, 7 மாதத்திற்கு பிறகு அலகாபாத் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இது பேச்சுரிமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
ஏற்கனவே கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணி செய்த அவரை உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கியது. தற்போது சிறையில் இருந்து விடுதலை பெற்ற அவர், பணியில் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இல்லையெனில், உயர்நீதிமன்றத்தை நாடுவதென முடிவு செய்திருக்கிறார்.
உத்தரபிரதேச பா.ஜ.க. அரசால் பழிவாங்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான் அவர்களது தாய், மனைவி ஆகியோரிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், டாக்டர் கஃபீல்கானோடு நீங்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகை புரிந்தால் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கூறுகிறேன் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்று டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது ஜெய்பூரில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பாதுகாப்பில் தங்கி உள்ளார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்கிற நிலையில் பிரியங்கா காந்தி இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஏறத்தாழ 2.5 கோடி இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் பா.ஜ.க. அரசில் டாக்டர் கஃபீல்கான் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால், நமது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? ஆனால், நீதியும், நியாயமும் டாக்டர் கஃபீல்கான் பக்கம் இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.