காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து குறித்து பா.ஜ.க. வழக்கு தொடரப் போவதாக ஒரு நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளதே?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை 1996 இல் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையைப் பொறுத்தவரை விதிமுறைகளுக்கு உட்பட்டு எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை பா.ஜ.க. முடிவு செய்ய முடியாது. அதுகுறித்து அறக்கட்டளை தான் முடிவு செய்யும். அதுகுறித்து கேள்வி எழுப்புவதற்கு பா.ஜ.க.விற்கு எந்த உரிமையும் இல்லை.
அப்படி கேள்வி எழுப்புகிற போது முக்தா சீனிவாசனுக்கு சொந்தமான 5 கிரவுண்ட் பரப்பளவுள்ள ரூபாய் 35 கோடி மதிப்புள்ள சொத்தை ரூபாய் மூன்றரை கோடிக்கு வாங்கியது குறித்து விசாரிக்க வேண்டுமென நாங்களும் கோர முடியும். ஆனால், ஓர் அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் தலையிடுவது அரசியல் அநாகரீகம். எங்களைப் பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. பா.ஜ.க.வின் மிரட்டலை எப்படி முறியடிக்க வேண்டும் என்பது எங்கள் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களுக்கு தெரியும்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மனைவியும், மகளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களே ?
சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ. ராதாகிருஷ்ணன் எந்த பொறுப்பை கொடுத்தாலும் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். கடந்த காலத்தில் சுனாமி நிவாரணப் பணிகளில் தனி முத்திரை பதித்தவர். கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக தீவிரமாக செயல்பட்ட அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே ?
மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 23 ஆம் தேதி பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அதுமுதற்கொண்டு இதுவரை தமிழகத்தில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்தவர்கள் 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 பேர். குணமடைந்தவர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர். இதுவரை 2551 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 87 ஆயிரத்து 235. நேற்று சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் 1298 பேர். சிகிச்சை பெறுபவர்கள் 15 ஆயிரத்து 127 பேர். இதில் சென்னை மண்டலத்தில் பாதிப்பு குறைந்தாலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 9424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து மதுரையில் 8357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது.
இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 486 பேர். இதில் குணமடைந்தவர்கள் 5 லட்சத்து 53 ஆயிரத்து 602 பேர். நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 12,427 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா உயிரிழப்பு 2.46 சதவிகிதமாக உள்ளது. பொதுவாக கொரோனா தொற்றை ஒழிப்பதில் மத்திய – மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவு இல்லாததால் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலை நீடித்தால் வருகிற மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று இந்திய அறிவியல் கழகம் அபாய சங்கு ஊதியுள்ளது.
புதுச்சேரி அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே ?
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பட்ஜெட் கூட்டம் நடத்தக் கூடாது என்பதற்கு போட்ட முட்டுக்கட்டைகளை மீறி முதலமைச்சர் வி. நாராயணசாமி ரூபாய் 9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிவிப்பில் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரண்பேடியின் பல்வேறு தடைகள், குறுக்கீடுகள் போன்றவற்றை மீறி புதுச்சேரி காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக பீடுநடை போட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரத்திற்கு எதிராக ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருவது ஏன் ?
காவிரிப் படுகை விவசாயிகளுக்கு வேண்டிய நீரை இலவசமாக பெற்று விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கி வருகிறார்கள். ஆனால், அந்த வசதி இல்லாதவர்கள் கிணறு வெட்டி, தண்ணீரை கண்டுபிடித்து மின்சார பம்புசெட்டுகள் அமைத்து விவசாயம் செய்யும் போது மாதந்தோறும் மின்கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருந்தது. இந்த கடுமையான சுமையை போக்குவதற்காக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராட்டம் நடத்தி, விவசாயிகள் உயிரை பலிகொடுத்து இலவச மின்சாரம் என்கிற உரிமையை பெற்றுள்ளனர். இதன்மூலம் விவசாயிகளிடையே சமநிலைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் என்பது உரிமையே தவிர, சலுகை அல்ல.
தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகளும், 4.5 லட்சத்திற்கும் அதிகமான கைத்தறிகளும் உள்ளன. கைத்தறிகளுக்கு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டுகளும், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தி.மு. கழக தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை பறிப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசை மத்திய பா.ஜ.க. அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. இலவச மின்சாரத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டத்தின் விளைவாக இலவச மின்சார பறிப்பு முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும், பிரபல ரவுடி விகாஸ் துபே ஜாமீனில் வெளியே வந்தது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளதே ?
இந்தியாவிலேயே குஜராத் பாணி என்கவுண்டர்கள் அதிகம் நடைபெறுவது உத்தரபிரதேச மாநிலத்தில் தான். முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சிக்காலத்தில் இதுவரை 6126 போலீஸ் என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட விகாஸ் துபே மீது 64 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், உத்தரப்பிரதேச காவல்துறையினரின் ஆதரவோடு அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளினால் தான் விகாஸ் துபே போன்றவர்களின் சட்டவிரோத செயல்கள் தடுக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இவரை கைது செய்து விசாரணை செய்தால் இவருக்கும், அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகிவிடும் என்கிற காரணத்தால் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்று கடும் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த என்கவுண்டர் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. விரைவில் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அ.தி.மு.க. தழுவும் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுத்திருக்கிறாரே ?
தமிழக பா.ஜ.க. தலைவர்களில் அடிக்கடி உண்மையை போட்டு உடைப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன். துணிவாக கருத்து கூறுகிற அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை உறுதிப்படுத்துகிற வகையில், கூட்டணி அமைக்கப் போகிற பா.ஜ.க. தலைவர் கருத்து கூறியிருப்பது மிகவும் பொறுத்தமாகும்.
கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு பேஸ்புக்கில் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறாரே ?
தமிழகத்தில் சமீபகாலமாக வகுப்புவாத சக்திகள் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் இழிவான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தோழர் ஆர். நல்லகண்ணு படத்தை ஆபாசமாக சித்தரித்து தகாத வார்த்தைகளுடன் பேஸ்புக்கில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தமிழக அரசியல்வாதிகளில் மக்களிடையே மிகுந்த நன்மதிப்பையும், போற்றுதலுக்குரிய பொதுவாழ்க்கையும் அமைத்துக் கொண்டிருக்கிற தோழர் நல்லகண்ணுவை இழிவுபடுத்துவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். இதில் சம் சம் பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறோம்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி செலவை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறதே ?
கடந்த 2017-18 முதல் 2019-20 கல்வி ஆண்டிற்கான கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படாமல் உள்ள கல்வி செலவுத் தொகையை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறுகிற உரிமை சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்களை ஏழை,எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகையாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் 2016-17 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25,000 ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த தொகை 2017-18 ஆம் ஆண்டில் 11,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28,000 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 83 லட்சத்து 16 ஆயிரத்து 237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது. இதன்மூலம் ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32,000 ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 11,000 ரூபாயாக குறைத்தது ஏனென்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 2017-18 முதல் 2019-20 ஆண்டிற்கான கல்வித் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர். மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால், அதை முழுமனதுடன் நிறைவேற்ற மத்திய – மாநில அரசுகள் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கு இது ஒரு சான்றாகும்.
கொரோனா தொற்று பொது ஊடரங்கு காரணமாக கடந்த 100 நாட்களில் சில்லரை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறதே?
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சில்லரை வர்த்தகத்தில் கடந்த 100 நாட்களில் ரூபாய் 15.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 45 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் 10 சதவிகிதம் பேர் தான் கடைகளுக்கு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 லட்சம் கோடியும், மே மற்றும் ஜூன் மாதத்தில் தலா ரூபாய் 4 லட்சம் கோடியும், ஜூலை மாதம் 20 ஆம் தேதி வரை ரூபாய் 2.5 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புகளை சில்லரை வர்த்தகத்தினர் எதிர்கொண்டு வருவது குறித்து மத்திய – மாநில அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த பாதிப்புகளில் இருந்து வர்த்தகர்கள் மீள வரிச் சலுகைகள் கூடுதல் வட்டி இல்லாமல் அபராதம் இன்றி கடன் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
வெளிநாடுகளில் இருந்து தலைநகர் தில்லியில் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் வந்தவர்கள் பல்வேறு துன்பத்தில் ஆளாகி வருகிறார்களே ?
தமிழகத்தில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 219 இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை பல மாநில அரசுகள் புறக்கணித்திருந்தாலும் தமிழ்நாடு அரசு 219 பேரையும் சிறையில் அடைத்தது. இவர்களை நீதிமன்றம் விடுவித்த பிறகும் கூட, ஆளுநர் உத்தரவின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் தலையிட்டு சென்னை சூளையில் உள்ள ஹஜ் சேவை மையத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியும், தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின்படியும் கொரோனா நோய் பரப்பியதாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இத்தகைய வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களை தங்கள் நாட்டிற்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை இரண்டு வாரத்திற்குள் எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எந்த பாவத்தையும் செய்யாத மத சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்க வந்த வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மதச்சார்பற்ற இந்தியாவில் கடும் துன்பத்திற்கு ஆளானது மிகுந்த வேதனையைத் தருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதே ?
அயோத்தியில் 450 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாபர் மசூதியை சட்டவிரோதமாக இடித்த இடத்தில் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு தான் ராமர் பிறந்தார் என்ற அடிப்படையில் அங்கு கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட இருக்கிறது. இந்த முடிவை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டது அவர்களது சகிப்புத்தன்மை மிக்க பரந்த மனப்பான்மையை காட்டுகிறது. அதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆனால், அதேநேரத்தில் உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதையொட்டி சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு வருகிற 24 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. இதில் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காணொளி காட்சி மூலமாக வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளனர். இந்நிலையில் கடந்த 28 ஆண்டுகளாக இந்த வழக்கு எவ்வித நகர்வும் இன்றி நடைபெற்று வரும் நிலையில் இப்போது இத்தகைய செய்தி வெளிவந்துள்ளது. பாபர் மசூதியை முன்னின்று இடித்தவர்களுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Very informative
Thank you!
Knowledge newspaper
Thank you!
அருமையான பக்கம்…மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்ந்த நிகழ்வுகளையும் பதிய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
கேள்வி- பதில் பதிவு சிறப்பாக உள்ளது.அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அறக்கட்டளை குறித்து நீங்கள் விளக்கமாக தெரிவித்திருந்த விளக்க பதில் அருமையாக இருந்தது. நன்றி அண்ணா…!