முக்கியமான நாட்டு நடப்புகள் குறித்து நாள்தோறும் ஆதியின் பதில்களை படியுங்கள் – ஆதி.கோபண்ணா
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றிருக்கிறதே ?
இந்தியாவின் வகுப்புவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பா.ஜ.க., ஆகிய அமைப்புகள் நீண்ட நெடுங்காலமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை தொடர்ந்து கோரிக்கையாக எழுப்பி வந்தன. அதில் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.க.விற்கு இருக்கிற பெரும்பான்மை பலத்தில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் மூலமாக நிறைவேற்றி வருகிறது.
மக்களிடையே அன்பை போதிக்கும் கடவுளாக கருதப்பட்ட ராமபிரானுக்கு கோயில் கட்டுவதில் அனைவருமே விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால், பாபர் மசூதியை இடித்து, கலவரம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குப் பிறகு அந்த இடத்தில் அன்பை போதித்த ராமபிரானுக்கு கோயில் கட்டுவதை உண்மையான ராம பக்தர்கள் விரும்புவார்களா என்று தெரியவில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் கோயில் கட்டியதற்கான ஆதாரம் இல்லை. 500 ஆண்டுகாலமாக இருக்கிற பாபர் மசூதியை இடித்தது சட்டப்படி குற்றம். ஆனால், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இன்று ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட 20 கோடி சிறுபான்மை இஸ்லாமியர்களை மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவரும் போற்றிப் பாராட்டுவார்கள்.
கோயம்பேடு சந்தை கடந்த மே மாதம் முதல் திறக்கப்படாமல் இருக்கிறதே ?
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 லட்சத்து 50 ஆயிரம் மொத்தம் மற்றும் சில்லரை வியாபார வணிகர்கள் தொழில் செய்து வருகின்றனர். ஏறத்தாழ 20 ஆயிரம் மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகள் உள்ளன. சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசை, மாதவரம் பகுதிகளுக்கு மாற்றப்பட்டதில் பல்வேறு சிரமங்களை வணிகர்கள் எதிர்கொண்டனர். நூற்றுக்கணக்கான டன் காய்கறிகள், பூக்கள் அழுகி நாசமாகிற நிலை ஏற்பட்டது. ஏறத்தாழ 50 ஆயிரம் குடும்பங்கள் நம்பியுள்ள கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்கவில்லை எனில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிவுடன் ஏற்று உடனடியாக கோயம்பேடு சந்தையை திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தி.மு. கழக சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா.ஜ.க.வில் சேரப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளதே ?
அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்த இவர், தற்போது பா.ஜ.க.வில் சேருவதில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே, பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேதாரண்யம் வேதரத்தினம், ஆற்காடு சீனிவாசன் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி விட்டார்கள். நயினார் நாகேந்திரன் மனஉளைச்சலுடன் எந்த கட்சியில் சேருவது என்று முடிவெடுக்காமல் குழம்பிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வில் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிற நேரத்தில் அக்கட்சியில் சேரும் கு.க. செல்வத்தின் எதிர்காலம் கேள்விற்குறியாகவே இருக்கும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதின் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரே ?
பண்பாளர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெற வேண்டுமென வாழ்த்துகிறோம். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தேனி முருகேசன், நெல்லை சங்கரபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மௌலானா ஆகியோர் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் அரியலூரில் தொடங்கி வைத்துள்ளாரே ?
காங்கிரஸ் பேரியக்கத்தில் தலைவர் கே.எஸ். அழகிரி தொடக்கி வைத்த உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக அமைய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் உறுப்பினர் படிவங்களையும், அடையாள அட்டைகளையும் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்று வருகின்றனர். இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை உறுதி செய்கிற வகையில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர் கீழானூர் ராஜேந்திரன் பொன். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழியை படிப்பது தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு நல்லது என்று மிகுந்த கவலையோடு தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் கூறியிருக்கிறாரே ?
புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழியை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இருமொழி தான் ஏற்கப்படும் என்று பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கூறிவிட்டன. இதற்குப் பிறகும் மூன்றாவது மொழியாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் படிக்கலாம் என்று கூறுகிறார். பல மொழிகளை படித்து தமிழர்கள் பன்மொழிப் புலவர்களாக மாற வேண்டும் என்று முருகன் விரும்புகிறாரா ? மேலும் நாம் மூன்றாவது மொழியை படித்தால் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்வார்கள் என முருகன் கூறுவது காதில் பூ சுற்றுகிற வேலையாகும். எதைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ, அந்த மொழியைத் தான் மாணவர்கள் படிப்பார்கள். எனவே, மூன்றாவது மொழி குறித்து பா.ஜ.க. பேசுவதை தமிழ்நாட்டில் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பொருளாதாரப் பேரழிவிலிருந்து எப்போது மீள்வது ?
பொருளாதாரப் பேரழிவிலிருந்து இந்தியாவை மீட்பதை விட, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் தான் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் இந்த நிலையில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் நடத்தியிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள முன்னேறிய 12 மாநிலங்களில் மொத்த கொரோனா பாதிப்பில் 85 சதவிகிதத்தினர் அடங்குவார்கள். இதில் 40 சதவிகிதத்தினர் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. கொரோனா நோய்ப் பரவலை தடுக்காமல் பொருளாதாரப் பேரழிவில் இருந்து இந்திய மக்களை காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி என்ன தந்திரம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவரை பா.ஜ.க. அரசின் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே, பொருளாதாரப் பேரழிவிலிருந்து இந்தியா மீள்வது எப்போது என்று எவராலும் உறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடுத்திருக்கிறாரே ?
இவ்வழக்கில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது ? இதில் உறுதி செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் ? பலியானோர் எத்தனை பேர் ? போன்ற தகவல்களை தமிழக சுகாதாரத்துறை முழுமையாக வெளியிடவில்லை. இதனை நாள்தோறும் வெளியிட வேண்டுமென்றும், இதில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம்.