பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை தி.மு.கழகம் அறிவாலயத்தில் சிறப்பாக கொண்டாடியிருக்கிறதே?
பெருந்தலைவர் காமராஜர் பெருமைகளை ‘ ஏற்றிப் போற்றுவோம்’ ; என்று தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ‘;உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் முரசொலியில் எழுதிய கடிதம் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கடிதத்தில் பெருந்தலைவர் காமராஜரை, தந்தைப் பெரியார் ‘ பச்சைத் தமிழர்’;என்றும், பேரறிஞர் அண்ணா ‘ குணாளா குலக் கொழுந்தே’ என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ‘ சிறப்பான முதலமைச்சர்’ என்றும் பாராட்டி நினைவுச் சின்னங்கள் எழுப்பியதையும் பட்டியலிட்டு புகழ்மாலை சூட்டியிருக்கிறார்.
அதேபோல, பெருந்தலைவர் மறைவுக்கு 40 நாட்களுக்கு முன்பு, உடல்நலம் குன்றிய நிலையில் தமது திருமணத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மணமேடைக்கருகில் அவர் வருவதற்கான தனி வழியை கலைஞர் அமைத்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார். கலைஞர் வழியில் தளபதி இன்று பெருந்தலைவருக்கு புகழ்மாலை சூட்டியிருக்கிறார். இதன்மூலம் மாற்றுக்கட்சி தலைவர்களை மதிக்கும் பண்பு பளிச்சிடுவது தமிழகத்தில் மங்கி விட்ட ஆரோக்கியமான நாகரீகமான அரசியலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இதற்காக தி.மு.கழகத் தலைமைக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறதே?
சமீபத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற போது தமிழகத்திற்கு ஜுன் மாதத்தில் 9 டிஎம்சியும், ஜுலை மாதத்திற்கு 32 டிஎம்சியும் வழங்கப்படாமல் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை தான் ஜுன் 12 ஆம் தேதி மேட்டுர் அணையில் காவிரி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி அடி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும். அதை பெற்றுத்தருகிற பொறுப்பு காவிரி ஒழுங்காற்றுக்
குழுவிற்கு இருக்கிறது.
காவிரி நீரை திறந்து விடுகிற முடிவை காவிரி ஒழுங்காற்றுக் குழு எடுக்காமல் கர்நாடக அரசு எடுக்கிற நிலை நீடிக்கிற வரை காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. ஏற்கனவே காவிரியில் தமிழக உரிமையை பறித்த பா.ஜ.க.விடமிருந்து உரிமைகளை மீட்டெடுக்க எடப்பாடி அரசுக்குதுணிவு இருக்கிறதா?
இந்தியப் பொதுத்துறைகளில் மிகப்பெரிய பங்கு வகிக்கிற ரயில்வே துறையை தனியார் மயமாக்குகிற முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறதே?
இந்திய ரயில்வே என்பது பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கி அனைத்து மக்களையும் இணைக்கிற துறையாகும். ஒருநாளைக்கு 2.5 கோடி பயணிகளும், ஆண்டுக்கு ஏறத்தாழ 92 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, சரக்கு ரயிலின் மூலம் பொருள்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இணைப்புக் கொண்ட துறையாக இந்திய ரயில்வே விளங்குகிறது. மேலும் அதிக
வேலைவாய்ப்புகளை வழங்குகிற வகையில் உலகத்தின் 7 வது இடத்தில் இந்திய ரயில்வே விளங்குகிறது. அதன்படி 1.5 கோடி அதில் வேலை செய்கின்றனர். இத்தகைய துறையில் ஏப்ரல் 2023 முதல் 151 தனியார் ரயில்கள் இயக்க 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 16 தனியார் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கின்ற உரிமை தனியார் துறையிடம் தாரை வார்க்கப் பட்டிருக்கின்றது. நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால், கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு குறைவான கட்டணம் விதிக்கப்படுகிற அதே நேரத்தில், அதிக லாபம் ஈட்டுகிற ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப வேண்டுமென்று தொழில் முனைவோர்கள் விரும்புவது நிறைவேறுமா?
தமிழகத்திலிருந்து கொரோனா பொது ஊரடங்கினால் வேலை வாய்ப்பிழந்து 1.5 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். ஆனால், கடந்த 10 நாட்களில் 5 ஆயிரம் பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ளூரில் வேலைக்கு ஆள் கிடைக்காத காரணத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத்தான் பல தொழில் நிறுவனங்கள் நம்பியிருக்கின்றன. குறிப்பாக, கட்டுமானத் தொழிலில் 90 சதவீதப் பணியை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் செய்து வருகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகம் வருவதற்கு இ-பாஸ் வழங்குவதில் உள்ள கடுமையான நிலையை தமிழக அரசு தளர்த்த வேண்டுமென பல தொழில் முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கை ஏற்கப்பட்டால்தான் தமிழகத்தில் பல தொழில்கள் இயங்குகிற நிலை ஏற்படும். இந்நிலைக்கு தமிழக அரசு தீர்வு காணுமா?
சீன செயலிகள் மீதான தடை விதிப்பால் இந்தியாவிற்கு பயன் ஏற்படுமா?
இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீள்வதற்காக டிக்-டாக் உட்பட 59 சீன செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று திடீரென சுதேசி குரல்கள் ஒலிக்கின்றன. அந்நிய முதலீடுக்கு சிவப்புக்கம்பளம் விரித்தவர்கள் இப்போது சுதேசி வேஷம் போடுகிறார்கள். ஆனால். எது சாத்தியம் என்பதை ஆய்வு செய்வதற்கு எவரும் தயாராக இல்லை.
ஆனால், குறிப்பாக டிக்-டாக் உள்ளிட்ட சீன செயலிகள் மீது இந்தியா தடை விதித்திருக்கிறது. இதனால் சீனாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்று பார்த்தால் பெரிய அளவில் ஏற்படாது என தோன்றுகிறது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சந்தையில் டிக்-டாக் ஈட்டிய வருவாய் ரூபாய் 650 கோடி. ஆனால், அதே நிதியாண்டில் இந்தியச் சந்தையில் ஈட்டிய வருவாய் ரூபாய் 43 கோடி தான். அந்த வகையில் அதிக வருவாய் தரும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது சீன செயலிகள் மீதான தடை பெரிய அளவில் சீனாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. டிக்-டாக் உலகச் சந்தையில் இடம் பிடிப்பதற்கு காரணம் அதனுடைய தனித்துவ தொழில்நுட்பம்தான். அதை விட அதிக தொழில்நுட்பத்துடன் செயலிகளை இந்தியாவில் உருவாக்கினால்தான் எதையும் எதிர்கொள்ளமுடியும். மோடியின் மேக் இன் இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக அரசு மாநில அளவிலான காவலர் புகார் ஆணையத்திற்கு தலைவராக உள்துறைச் செயலாளரை நியமித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தெரிவித்திருக்கிறதே?
கடந்த 2006 ஆம் ஆண்டு மாநில காவலர் புகார் ஆணையத்தை அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் 2013
இல் தமிழ்நாடு காவலர் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு பொதுநல
வழக்கு தொடுக்கப்பட்டது. சாத்தான்குளம் படுகொலைக்குப் பிறகு காவல்துறையினர் மீதான புகாரை விசாரிப்பதற்கு தனி அமைப்பை உருவாக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தாமாக முன்வந்து ஆணையிட்டது. அதன்படி தமிழக அரசு, மாநில காவலர் புகார் ஆணையத்திற்கு உள்துறைச் செயலாளர் தலைமையில், மாவட்ட காவலர் புகார் ஆணையத்திற்கு
மாவட்ட ஆட்சித்தலைவரையும் தலைவராகக் கொண்டு ஆணை பிறப்பிக்கப்பட்து. இந்த நடவடிக்கை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தமிழக அரசு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
உச்சநீதிமன்றம் ஆணையின்படி, மாநில காவலர் புகார் ஆணையத்திற்கு ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியோ தலைமையேற்க வேண்டும்.
மாவட்ட அளவில் ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையேற்க வேண்டும். இதை நிறைவேற்றவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
சாத்தான்குளம் படுகொலைக்குப்பிறகு கூட, காவல்துறையினர் மீதான புகாரை தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள உள்துறை செயலாளரும், மாவட்ட ஆட்சி தலைவரும் தலைமையேற்று விசாரணை நடத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? சாத்தான்குளம் படுகொலைக்குப் பிறகு கூட தமிழக அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை. காவல்நிலையத்தில் கொடூரக் குற்றங்களைப் புரிகிற காவல்துறையினருக்கு துணைபோகின்ற அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுகிறார்களோ இல்லையோ, சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்கள் சரியான பாடத்தைப் புகட்டி வருகின்றன.