ஆகஸ்ட் 5.
ஜம்மு காஷ்மீர் மக்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தினம்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது பிரிவை நீக்கியதோடு, மாநில அந்தஸ்துடன் இருந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தனர்.
அதோடு நின்றுவிடவில்லை…
அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் வீட்டுக் காவலிலும் சிறையிலும் அடைத்தது மத்திய அரசு.
ஓராண்டாக அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஓராண்டில் ஜம்மு காஷ்மீரில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மை நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை 32 பொதுமக்களும், 143 தீவிரவாதிகளும், 54 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தானின் அமைதி ஒப்பந்த மீறல்கள் கடந்த ஆண்டை விட தற்போது 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக டிஜிபி தில்பக் சிங் உறுதி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இது கனவாகவே உள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், கடந்த ஓராண்டில் ஜம்மு காஷ்மீரில் எவ்வித வளர்ச்சியும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், முன்னாள் முதலமைச்சர்கள் பாருக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது பரூக் அப்துல்லாவும், ஒமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மெஹ்பூபா முப்தி தொடர்ந்து வீட்டுச் சிறையில் உள்ளார்.
விடுதலையான பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு கடந்த ஜுலை 26 ஆம் தேதி ஒமர் அப்துல்லா அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட எதையும் தமது கட்சி ஏற்காது என்று அறிவித்தார். எனினும் பெரும்பாலான தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பிரிவினைவாதிகளின் கரத்தை வலுப்படுத்துவதாக அமைந்துவிட்டதாகவும், காஷ்மீரில் இந்திய ஆதரவு என்ற நிலையை அரசு தகர்த்துவிட்டதாகவும் தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் இம்ரான் நபி தர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு பாதுகாப்பை காரணம் காட்டி, தன்னிச்சையாக பல சட்டங்களை மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் அரசும் பிறப்பிப்பதாக அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மொஹம்மது யூசுப் தரிகாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் குடியேற்ற சட்டத்தை அரசு செயல்படுத்தியபோது, பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மக்கள் அச்சமடைந்தனர். தங்களது வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும், வெளியாட்கள் தங்கள் பகுதிக்குள் புகுந்து வணிகத்தை ஆக்ரமித்துக் கொள்வார்கள் என்றும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஓராண்டில்…
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 88 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
- 6 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2019 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 144 குழந்தைகள் கைது
- முதல்முறையாக கனிம வளம் வெளியாருக்கு ஏலம் விடப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரில் 2020 ஜுலை மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் விகிதம் 17.9 சதவீதமாக இருந்தது. படித்த இளைஞர்கள் தேசிய சராசரியைவிட இரு மடங்கு வேலை வாய்ப்பின்றி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் லடாக் யூனியன் பிரதேசத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், ஓராண்டு நிறைவு கொண்டாத்துக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஓராண்டாக முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், என்ன வெற்றி கிடைத்துவிட்டது என இந்த கொண்டாட்டம்? என்று தெரியவில்லை.
ஆகஸ்ட் 5…
தவறுகளின் நினைவுச் சின்னம் என்று மட்டும் ஜம்மு காஷ்மீர் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு அந்நாள் ஒரு கருப்பு நாளே!
Worth reading…but painful…