காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியை சகோதரர் ராகுல்காந்திக்கு கூறியிருக்கிறாரே ?
தலைவர் ராகுல்காந்திக்கு சகோதரி பிரியங்கா அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘உங்களை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். உங்களைப் போன்றவர் சகோதரராக கிடைத்தது, நான் பெற்ற அதிர்ஷ்டம். எல்லா நல்லது, கெட்டதுகளிலும் ராகுல்காந்தியுடன் நான் இருந்துள்ளேன். உண்மை, பொறுமையுடன் வாழ்க்கையை வாழும் கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரியங்காவின் அனுபவம் பேசுகிறது.
நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல், பிரியங்கா ஆகியோர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். பிரதமர்களாக இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தியும் இருந்தாலும் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை தாங்கிக் கொள்கிற மனநிலையை இவர்கள் பெற்றதன் மூலம் இந்திய அரசியலில் பேராண்மைமிக்க இளைய தலைமுறை தலைவர்களாக இவர்களை மக்கள் கருதுகிறார்கள், நேசிக்கிறார்கள். இந்தியாவோடு இரண்டறக் கலந்த இந்திய தேசிய காங்கிரசை இவர்கள் தான் வழிநடத்த வேண்டுமென்று லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, இந்திய மக்களும் விரும்புகிறார்கள். இந்தியாவை பாசிசப் பாதையில் அழைத்துச் செல்லும் நரேந்திர மோடியை வீழ்த்துகிற ஆற்றல் தலைவர் ராகுல்காந்திக்கு இருப்பதை எவரும் மறுத்திட இயலாது. எனவே தான், சமீபகாலமாக தலைவர் ராகுல் அவர்களே வருக, காங்கிரஸ் தலைமையை ஏற்பீர், இந்தியாவை வகுப்புவாத சக்திகளிடம் இருந்து காத்திடுவீர் என்கிற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்பார்ப்பை நிறைவு செய்கிற பொறுப்பும், கடமையும் ராகுல்காந்திக்கு இருக்கிறது. அதை காலம் தாழ்த்துவது கட்சிக்கு நல்லதல்ல, நாட்டிற்கு நல்லதல்ல. இதுவே 50 ஆண்டுகால முழுநேர காங்கிரஸ் ஊழியரின் விருப்பமாகும்.
ராஜஸ்தான் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதே ?
காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இளம் தலைமுறையைச் சார்ந்த சிந்தியா, பைலட் போன்றவர்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று விரும்பியவர். அவரது விருப்பத்தின்படி இவர்களுக்கு பதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் முதலமைச்சர் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மிகுந்த கவலையை தரக்கூடியதாகும். சமீபத்தில் புதிய மாநில காங்கிரஸ் தலைவராக கோவிந்த் சிங் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் தலைவர் என்ற முறையில் சச்சின் பைலட் வாழ்த்து கூறியது மிகுந்த வரவேற்புக்குரியதாகும். அதேபோல, வருகிற 14 ஆம் தேதி நடைபெறுகிற சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களாக கலந்து கொள்வோம் என்று சச்சின் பைலட் ஆதரவாளர் கூறியிருப்பது ஒற்றுமை ஏற்படுவது உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்தியாவில் இரண்டு சிந்தனைகள் உண்டு. ஒன்று, மதச்சார்பின்மை. மற்றொன்று வகுப்புவாதம். மதச்சார்பின்மை சிந்தனையை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் இருப்பவர்கள் நேர் எதிரான சிந்தனை கொண்ட பா.ஜ.க.வின் வகுப்புவாதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி எவராவது ஏற்றுக் கொண்டால் அவர்கள் காங்கிரசின் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பதவி ஆசை பிடித்த சந்தர்ப்பவாதிகளாகவே இருப்பார்கள். அந்த பட்டியலில் சிந்தியா சேர்ந்திருந்தாலும், சச்சின் பைலட் சேர மாட்டார் என்று இன்னும் நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அயோத்தியில் நடைபெறுகிற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் அழைக்கப்பட்டிருக்கிறார்களே ?
பா.ஜ.க.வில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆசீர்வாதம் இல்லாமல் எதுவுமே நடக்காது. ஆனால், பாபர் மசூதி இடிப்பிற்காகவே ரத யாத்திரை நடத்திய எல்.கே. அத்வானிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அழைப்பு அனுப்பப்பட்ட உமாபாரதி பங்கேற்கப் போவதில்லை என கூறியிருக்கிறார். அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை தூர்தர்ஷன் செய்து வருகிறது. இதன்மூலம் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக தூர்தர்ஷன் செயல்படுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் சிறுபான்மை சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ள ஆறாத வடுவை மேலும் காயப்படுத்தவே செய்யும். இதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்படப் போவதில்லை. அரசியலில் மதத்தை கலந்து வாக்கு வங்கியை விரிவுபடுத்துவது தான் பா.ஜ.க.வின் நோக்கம். அதை நிறைவேற்றுவதற்கு எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் என்பதற்கு அயோத்தி அடிக்கல் நாட்டு விழா சரியான உதாரணமாகும்.
மாணவர்களுக்கு முட்டையும், சானிட்டரி நேப்கினும் வழங்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே ?
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச முட்டை, நாப்கின் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிற நிலையில் தான் எடப்பாடி ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லாத காரணத்தால் முட்டை வழங்க முடியவில்லை என்று கூறுகிற காரணத்தை ஏற்க முடியாது. பிரச்சினைக்கு காரணம் சொல்வதை விட தீர்வை சொல்லுங்கள் என்ற காமராஜரின் கருத்தின்படி, ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுக்கு முட்டையை பிரச்சினை இல்லாமல் எப்படி வழங்குவது ? என்பது குறித்து ஆலோசனை செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அப்படி முடியாது என்றால் டாஸ்மாக்கை ஏன் மூடக் கூடாது என்று தமிழக அரசிற்கு உணர்த்துகிற வகையில் நீதிமன்றம் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாகும். சமீபகாலமாக தமிழ்நாட்டில் நடக்கிற நல்ல காரியங்கள் நீதிமன்றம் மூலமாகவே நடப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பொதுநல வழக்கை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் சுதா தொடுத்திருப்பதற்காக மனதார பாராட்டுகிறோம்.
சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ், ஐ.ஏ.எஸ். சொத்து குவித்துள்ளதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதே ?
முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், இன்னாள் வணிகவரித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள பீலா ராஜேஷ், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு மிகமிக நெருக்கமானவராக இருந்தார். சுகாதாரத்துறை அமைச்சரை விட, சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் நாள்தோறும் தொலைக்காட்சிகளில் விதவிதமான உடைகளுடன் ஜொலித்துக் கொண்டிருந்தார். விளம்பரத்தின் உச்சிக்கே சென்ற அவர், பின்பு கீழே விழ வேண்டிய நிலை ஏற்பட்டது
இதைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான சொகுசு பங்களா கட்டியிருப்பது குறித்து நக்கீரன் இதழ் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டது. அந்த வீட்டை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இத்தகைய ஆடம்பர பங்களாவை எப்படி கட்ட முடிகிறது ? அந்தப் பகுதியில் இவர் மட்டுமல்ல, பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆடம்பர பங்களாக்கள் கட்டியிருப்பது அனைவரது கண்ணையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் வருமான வரித்துறையின் கழுகுப் பார்வையில் படுகிற போது விசாரணைகள் நடக்கத்தானே செய்யும் ?
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறதே ?
சமீபத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் பயன்படுத்தியதால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக 230 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. துப்பாக்கி கலாச்சாரம் பரவினால் யாருடைய உயிரையும் இன்றைய காவல்துறையால் காப்பாற்ற முடியாது. காவல்துறையினருடைய நன்மதிப்பு சீரழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுகுறித்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுகிறார்களோ இல்லையோ, நீதிமன்றம் தலையிடுவது வரவேற்புக்குரியது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே ?
நடப்பாண்டில் மூன்றில் ஒருபங்கு கழிந்து விட்ட நிலையில் கொரோனா பாதிப்பு நிலையில் கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 1 லட்சம் கோடியில் ரூபாய் 48,500 கோடி இதுவரை செலவழிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 8 மாதங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படப் போகிறது. மேலும் ஆண்டுக்கு 100 நாள் என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. நகரங்களில் வேலை வாய்ப்பு இழந்த கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு திரும்பச் சென்றதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிற ஒரே திட்டம் இதுவாகத் தான் இருக்க முடியும். அதனால் கிராமப்புற மக்களிடையே பஞ்சம், பட்டினியை போக்க 100 நாள் திட்டத்திற்கு மேலும் அதிக நிதியை மத்திய பா.ஜ.க. அரசு ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பா.ஜ.க. அரசு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. கொரோனா கொடுமையில் சிக்கியுள்ள இந்தச் சூழலில் பாரபட்சத்தை தவிர்த்து அதிக நிதியை பா.ஜ.க. அரசு ஒதுக்க வேண்டும்.
கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாரே ?
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அறிக்கை மூலமாக எதிர்ப்பை தெரிவிப்பதை விட அமைச்சரவை கூட்டத்தை கூட்டி தீர்மானமாக நிறைவேற்றினால், அந்த எதிர்ப்பு அதிகாரப்பூர்வமாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே புதிய கல்விக் கொள்கையை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினரின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றவில்லை எனில் எடப்பாடியின் எதிர்ப்பு வெறும் கண் துடைப்பு நாடகமாகவே இருக்கும்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர் முருகன் கடவுள் முருகனை கையில் எடுக்க விரிவான திட்டம் வகுத்து செயல்படுகிறாரே ?
கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்த கருப்பர் கூட்டத்தின் நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, சிறுபான்மை சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்திய எச். ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பலர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவிவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அ.இ.அ.தி.மு.க. அரசு ,தமிழக பா.ஜ.க.வை பகைத்துக் கொண்டாலும் மோடி அரசை பகைத்துக் கொள்ள தயாராக இல்லை.
தமிழகத்தை பாதிக்கிற மத்திய அரசின் திட்டங்களான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு கொள்கை, நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்காத பா.ஜ.க., கந்தசஷ்டி கவசத்தை வைத்து கட்சியை வளர்க்கலாம் என்று நினைப்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஏற்காத பா.ஜ.க., தமிழ்க் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது ?
தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கொண்டாடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளதே ?
தமிழக காங்கிரஸ் கட்சியின் நகைச்சுவை பேச்சாளராக, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராக, பிரச்சார பீரங்கியாக தமிழகம் முழுவதும் வலம் வந்தவர் தியாகி சின்ன அண்ணாமலை. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். பதிப்பகத் துறையில் தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகத்தை தொடங்கி பல பதிப்பாளர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். எழுத்தாளர், இலக்கியவாதி, திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார். அதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்.
தலைவர் கேஎஸ் அழகிரி அவர்களின் பதில் நெத்தியடி .அடிமை டயர்நக்கிகளுக்கு காங்கிரஸ்தான் இந்நாட்டின் மக்களின் பாதுகாவலர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்