இனிய நண்பர்களே,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று தொடங்கப்பட்ட desiyamurasu.com இணைய இதழில் நாள்தோறும் ஆதியின் கடிதம் எழுதவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கடுமையான பணிச் சுமையின் காரணமாக ஆதியின் பதில்கள் எழுதுகிறபோது ஆதியின் கடிதம் எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால் தி.மு.கழக தலைவர் கலைஞர் அவர்கள் தமது 90 ஆவது வயதில் கூட முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு நாள் தோறும் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் 67 வயதான எனக்கு தொடர்ந்து எழுத முடியவில்லை. நாள்தோறும் ஆதியின் கடிதம் மூலமாக காங்கிரஸ் நண்பர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாட விரும்புகிறேன்.
இன்று காலையில் பத்திரிகைகளை படித்ததும் தமிழ்நாடு கலைப்பிரிவு தலைவர் அருமை நண்பர் சந்திரசேகர் கைபேசியில் தொடர்புகொண்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை வைப்பதென முதலமைச்சர் முடிவு செய்தது குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இப்பிரச்சினை குறித்து ஆதியின் கடிதம் மூலமாக கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
பொதுவாக தலைவர்களின் பெயரை சூட்டுவது தவறல்ல. நாடு விடுதலை அடைந்தவுடன் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர் சாலைகள், பூங்காக்கள் புதிய நகரங்களுக்கு சூட்டப்பட்டன. அதற்கு பிறகு டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், முத்துராமலிங்க தேவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோர் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த பின்னணியில் இப்பிரச்சினையை பார்க்கிறபோது புதிதாக பெயர்கள் சூட்டுவது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கொண்டு வந்ததாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் உண்மைக்குப் புறம்பான கருத்தை கூறியிருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முடிவால் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் ரூபாய் 14,600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்பட்டன. இன்றைய சூழலில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டுவது ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த’ கதையாகிவிடும் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பல்கலைக்கழகங்கள், மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் பெயர் சூட்டப்பட்டது. அண்ணாவின் பெயரை திண்டுக்கல் மாவட்டத்திற்கும், பெரியார் பெயரை ஈரோடு மாவட்டத்திற்கும் சூட்டப்பட்டது. அப்பொழுதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அவரை பெயரை ஏன் சூட்டவில்லை என்று சர்ச்சை எழுந்தது. அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு இருக்கிற தயக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும் போக்குவரத்து கழகத்திற்கு தலித் தலைவர் வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்ட போது அதற்கு எதிராக விருதுநகர், தேனி மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டது. மேலும் இமானுவேல், புலித்தேவன் ஆகியோர் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார் சத்தியா பெயரில் கூட போக்குவரத்துக்கழகத்துக்கு பெயர் சூட்டப்பட்டது.
பிற்காலத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபோது மோசமான விளைவுகளை உருவாக்குகிற வகையில் மாவட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்டிருந்த பெயர்களை நீக்கிவிட்டு சில சமுதாய தலைவர்களின் பெயரை சூட்டினார். இதன்மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். அதேபோல போக்குவரத்துக் கழகங்களுக்கு சமுதாயத் தலைவர்களின் பெயரை சூட்டினார். இதனால் தென் மாவட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் ஆணையை நிறைவேற்றுவதற்கு தடையாக தேர்தல் வந்த நிலையில் பெயர் சூட்டுகிற ஆணைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில், 1996 இல் கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தபோது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு கடந்த ஆட்சி காலத்தில் சூட்டப்பட்ட பெயர்களை நீக்குகின்ற முடிவை 01.01.1997 அன்று எடுத்து அறிவித்தார். இதன்மூலம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தார். தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தார்.
தற்போது முதலமைச்சர் எடப்பாடி பெயர் சூட்டுகிற அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஒரு கடிதத்தின் மூலம் பாரீஸ் என்ற பெயரை மாற்றி டாக்டர் அம்பேத்கார் பெயரையும், விமான நிலைய மெட்ரோ நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சூட்டவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை சூட்டிய பிரச்சினைகளினால் தமிழகத்தில் எப்படி ஜாதிக் கலவரம் மூண்டதோ , அதே போல மீண்டும் அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை உருவாவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி வகுத்திருக்கிறார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழகத்தில் பெயர் சூட்டும் பிரச்சினையால் புதிய கோரிக்கைகள் எழுவதற்கும், அது மறுக்கப்பட்டால் கடுமையான போராட்டங்கள் எழுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும், மத்திய அரசு தான் சூட்டியது. இதேபோல பல விமான நிலையங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் சூட்ட ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. அப்படியே பெயர் சூட்டினாலும் மக்கள் புழக்கத்திற்கு அந்த பெயர்கள் வராது. கோயம்பேடு மெட்ரோ என்று தான் கூப்பிடுவார்களே தவிர ஜெயலலிதா மெட்ரோ என்று கூப்பிடமாட்டார்கள். தமிழக மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறபோது ஏற்கனவே ஊர்பெயர்களை சுத்த தமிழ் பெயர் என மாற்றுவதாக கூறி கடும் சர்ச்சைகளில் தமிழக அரசு சிக்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அந்த முயற்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த பின்னணியில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் சூட்டுகிற முயற்சியை தமிழக முதலமைச்சர் கைவிடுவது நல்லது. இதில் கவனம் செலுத்துவதை விட கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.