1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமர் ஆனதும், சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற ப.சிதம்பரத்தை, தனிப் பொறுப்புடன் கூடிய வர்த்தகத் துறை இணை அமைச்சராக நியமித்தார். நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் வர்த்தகத் துறையில் ப.சிதம்பரம் ஆற்றிய பங்கு மகத்தானது.
அவர் பொறுப்பேற்றபோது, வளர்ந்த நாடுகளோ, ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச கண்காணிப்பு நிதியம் அல்லது உலக வங்கியோ இந்தியாவுக்கு கடன் கொடுக்க முன் வராத நிலை இருந்தது. அதேபோல், நம்பிக்கை இழந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்கள் முதலீட்டை திரும்பப் பெற தொடங்கியிருந்தனர். வாரந்தோறும் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு வெளியேறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், ப.சிதம்பரம் அறிவித்த புதிய வர்த்தகக் கொள்கை, 15 நாட்களில் இறக்குமதியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது. ஏற்றுமதி- இறக்குமதி தொடர்பாக அவர் காலத்தில் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, பொருளாதார நிபுணர்களாலும், வர்த்தகத் துறையினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
கடந்த 1991 ஆம் ஆண்டு சிதம்பரம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டு அதலபாதாளத்துக்கு செல்ல இருந்த இந்தியாவை மீட்டெடுக்க உதவியது. வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த தேசத்தை, செழிப்பான பாதையில் செல்ல ப.சிதம்பரம் உந்துதலாக இருந்தார்.
தொடர்ந்து, பிரதமராக இருந்த நரசிம்மராவ் அறிவித்த புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகளும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றது.
அதன்பிறகு, உலக வங்கி கடனுதவி அளிக்க முன்வந்தது. வளர்ந்த நாடுகளும் கடனுதவி செய்ய முன்வந்தன. இதனையடுத்து, நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல தொடங்கியது. அந்நிய செலாவணி அதிகரித்ததோடு, முந்தைய காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் உறுதியளிக்கப்பட்ட ரூ. 1,000 கோடி மதிப்புள்ள தங்கமும் மீட்கப்பட்டது.
ப.சிதம்பரம் வெளியிட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கையின் நோக்கம், தாராளமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதாக அமைந்தது. மேலும், ஏற்றுமதி சக்தியை மேம்படுத்துவதாகவும், ஏற்றுமதி செயல் திறனை அதிகரிப்பதாகவும் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது. 5 ஆண்டு ஆட்சி காலம் முழுவதும் இந்த கொள்கை ஸ்திரமாக இருந்தது.
இதனால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டதோடு, பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லவும் காரணமாக இருந்தது.
அதன்பிறகு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகளில் பல அரசுகள் மாற்றம் கொண்டு வந்தன. இத்தகைய மாற்றம் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இத்தகைய சீர்திருத்தங்களுக்கான விதையை விதைத்தவர் ப.சிதம்பரம் தான்.
1991-97 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கையின் அடிப்படையில், ஏற்றுமதி மேம்பாட்டு மூலதனப் பொருட்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இயந்திரங்களை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
சிதம்பரத்தின் தொலைநோக்குப் பார்வையால் வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் பலன்களை பெற்றனர். இத்தகைய நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தை விரைந்து காப்பாற்ற ப.சிதம்பரம் முக்கிய காரணமாக இருந்தார்.
அதன்பிறகு, நிதி அமைச்சராக 8 முறை மத்திய பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் தாக்கலில் பல்வேறு மாற்றங்களை செய்து புகழ்பெற்றார். 1997-98 ஆம் ஆண்டு தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில், நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் தான், வரி செலுத்துவோரால் ‘ கனவு பட்ஜெட்’ என்று பாராட்டப்பட்டது.
பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்திக் கொண்டே, வருமான வரி குறைப்பு, கார்பரேட் வரி குறைப்பு மற்றும் கார்பரேட் வரிகளில் கூடுதல் கட்டணத்தை நீக்கியது போன்ற அவரது நடவடிக்கைகள் புரட்சிகரமானவை.
1997 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் கூறும்போது, ” 21 ஆம் நூற்றாண்டை ஆக்கிரமிக்கப் போகும் ஒரே அறிவியல், தகவல் தொழில்நுட்பம் தான். உலக அளவில் இந்தியாவை மிகப் பெரிய ஆளுமையாக காட்டப்போகும் தொழிற்துறை, தகவல் தொழில்நுட்பமாகத்தான் இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்ப பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதல் தொடர்பான புதிய கொள்கையை நாம் வகுக்க வேண்டியது அவசியமாகிறது. எலக்ட்ரானிக் ஹார்டுவேர் தொழில்நுட்ப பூங்கா திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் உற்பத்தி அதிகரிப்பும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதும் அவசியம். எனவே, உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி மூலமாக, 12 மாதங்களுக்குள் எலக்டரானிக் ஹார்டுவேர் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ப. சிதம்பரத்தின் இத்தகைய தொலைநோக்கு நடவடிக்கை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டதை யாராலும் மறுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதி அமைச்சராக திறமையுடன் பணியாற்றியதன் மூலம், தான் ஒரு சிறந்த பொருளாதார அறிஞர் என்பதையும் வெளிப்படுத்தினார்.