கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்க தாமதம் ஆவதால், பாடப் பகுதிகளை குறைக்கும் நடவடிக்கையில் பல மாநில கல்வித்துறைகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், மத்திய அரசும், கர்நாடக அரசும் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, வரலாற்றை அழிக்கும் தங்கள் நீண்டநாள் எண்ணத்தை செயல்படுத்தியுள்ளன.
இதன்படி, திப்பு சுல்தான், ஹைதர் அலி மற்றும் இந்திய அரசியல் சாசனம் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை 2020-21 ஆம் ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 120 ஆக குறைக்கப்பட்டு, 30 சதவீத பாடங்களை கர்நாடக கல்வித்துறை நீக்கியுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த திப்பு சுல்தான், ஹைதர் அலி, மைசூருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல், 10 ஆம் வகுப்பு பாடத்திலிருந்தும் திப்பு சுல்தான், ஹைதர் அலி, ஹலகலி பேடாஸ் கிளர்ச்சி மற்றும் கிட்டூர் சென்னம்ம ராயன்னா கிளர்ச்சி ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இனி இந்த பாடங்கள் ப்ராஜெக்ட் மற்றும் சார்ட் வழியே மட்டும் கற்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடங்களை நீக்க வேண்டும் என பா.ஜ.கவினர் கடந்த 2019 ஆம் ஆண்டு வலியுறுத்தியதையடுத்து, இது குறித்து பரிசீலிக்க குழு ஒன்றை கர்நாடக அரசு அமைத்தது. ஆனால், திப்பு சுல்தானை சொல்லாமல் மைசூரு வரலாற்றை சொல்லித் தருவது இயலாத காரியம் என அரசுக்கு அந்த குழு பரிந்துரைத்தது. எனினும், கொரோனா காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாடங்களை கர்நாடக அரசு நீக்கியுள்ளது.
9 ஆம் வகுப்பு மாணவர்கள் அரசியல் சாசனம் குறித்துப் படிப்பதால், 7 ஆம் வகுப்பில் அந்த பாடம் தேவையில்லை என குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 6 ஆம் வகுப்பில் இடம்பெற்ற யேசு கிறிஸ்து மற்றும் முகமது நபி ஆகியோர் பற்றிய பாடங்களும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த பாடங்களை நீக்கியதால், உயர் படிப்புக்கு செல்லும்போது, வரலாற்றின் பின்புலத்தை மாணவர்கள் அறியாமல் போகக் கூடும் என்று எச்சரிக்கிறார் பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளிகள் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த வி.பி. நிரஞ்சன் ஆரத்யா.
செப்டம்பர் முதல் தேதியிலிருந்து பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு திட்டமிட்டு இருப்பதால், அதற்கேற்றாற் போல், பாடங்களை குறைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கர்நாடக பாடநூல் நிறுவன இயக்குனரகம் தரப்பில் கூறும்போது, திப்புசுல்தான் அல்லது ஹைதர் அலி குறித்த பாடங்களை நாங்கள் நீக்கவில்லை. நிபுணர்களின் முடிவுக்கேற்ப மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நிபுணர்களின் பணியில் நாங்கள் குறுக்கிடவுமில்லை, அவர்களை அறிவுறுத்தவும் இல்லை என்றனர்.
18 ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளராக இருந்த திப்புசுல்தான் வாழ்க்கை வரலாற்றை பாடங்களில் இருந்து நீக்குமாறு, முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதனையடுத்தே, திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி குறித்த பாடங்கள் நீக்கப்பட்டது என்பது அப்பட்டமாக தெரிகிறது. எனினும், நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் சேர்க்கப்படும் என அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இது சாத்தியமா? என்பது தான் இப்போதைய கேள்வி.
இதற்கிடையே, மத்திய அரசும் பாடத்தைக் குறைப்பதாகக் கூறி, சிபிஎஸ்சி 11 ஆம் வகுப்பில் இடம்பெற்றுள்ள கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய பகுதிகளை 2020 கல்வியாண்டுக்கான பாடத்திலிருந்து நீக்கியுள்ளது. இதுதவிர, சூழலியல் மற்றும் பரிணாமம் ஆகிய பாடங்களையும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை நீக்கியுள்ளது நாடு முழுவதும் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் வேலை இழந்து, பசி, பட்டினியால் துடித்துக் கொண்டிருக்கும் போது, வரலாற்றில் இடம்பிடித்தோர் குறித்த பாடங்களையும், பா.ஜ.க.வுக்கு பிடிக்காத கொள்கைகளையும் நீக்கியது, விஷத்தை கக்கிய செயல் என்று கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.