பயன்படுத்தப்படாத தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதில் இல்லை.
கடந்த மார்ச் மாதம் வரை, ரூ. 2 ஆயிரத்து 773 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில், ஆயிரத்து 660 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது.
தேர்தலில் கிடைக்கும் நன்கொடை விவரத்தை அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர். எனினும், நன்கொடை கொடுத்தவரின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்தவகையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.1,450 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக வந்தன. அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 60 சதவீத தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக வந்துள்ளன.
அதே நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.383 கோடி தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக கிடைத்தன.
2017-18 ஆம் நிதியாண்டில், 2018 மார்ச் வரை, 222 கோடி ரூபாய் வரையிலான தேர்தல் நன்கொடை பத்திரத்தில், 210 கோடி வரையிலான பத்திரங்கள் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளன. அதாவது, மொத்த 95 சதவீத நன்கொடை இக்கட்சிக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, 20 தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதன்படி பார்க்கும் போது, 5 கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் 587 கோடி ரூபாய் வரை நன்கொடையை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டில் 28 தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் 7 அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற்றுள்ளன.
* பா.ஜ.க. : ரூ. 1,450 கோடி
* இந்திய தேசிய காங்கிரஸ்: ரூ.383 கோடி
* பிஜு ஜனதா தளம்: ரூ. 213.50 கோடி
* தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி: ரூ. 141.50 கோடி
* திரிணாமுல் காங்கிரஸ் : ரூ.97.28 கோடி
* மதச்சார்பற்ற ஜனதா தளம்: ரூ.35.25 கோடி
* ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி: ரூ.99.84 கோடி
மொத்தமுள்ள ரூ. 2 ஆயிரத்து 551 கோடியில், ரூ.11 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு சென்றதாக கூறப்பட்டது.
இதுவரை, 2018-19 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 12 முறை 12 ஆயிரத்து 313 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 6 ஆயிரத்து, 128 கோடியாகும்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
பயன்படுத்தப்படாத தேர்தல் பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு திருப்பி விடப்படுகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பினால், இந்த சட்டத்தின் கீழ் பிரதமரின் தேசிய நிவாரண நிதி வராது என பதில் வருகிறது.
தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை பெற வேண்டும் என்றும், அரசின் பட்ஜெட் வருவாய் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் மூலமோ நன்கொடை பெறக்க கூடாது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகிறது.
அதேசமயம், அரசு பணத்தை வாங்கும் போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஏன் உட்படாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.