களத்தில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும் நேரம் வந்துவிட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளை மீறி, உயர்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை தகர்த்து எறிவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கூட்டத்தில் இரு முறை பங்கேற்கவில்லை.
இதனையடுத்து, 19 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சியின் கொறடா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, இது குறித்து விளக்கம் கேட்டு, 19 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனை எதிர்த்து 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும், உச்ச நீதிமன்ற பரிசீலனைக்குட்பட்டது என்றும் தீர்ப்பளித்தது. இதில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
மகாராஷ்ட்ராவில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். கடைசி நேரத்தில் முதலமைச்சருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போதே குடியரசுத் தலைவர் ஆட்சி அகற்றிக்கொள்ளப்பட்டது.
கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எம்எல்ஏக், கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோதும் இதேதான் நடந்தது. பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.
பொம்மை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பேரவையில் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நபம் துகி வழக்கில் கேபினட் விருப்பப்பட்டால், பேரவையை ஆளுநர் கூட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மற்றும் ஜனநாயகத்தை தகர்த்தெறியும் வகையில் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் சாலைகளில் இறங்கி போராடவும், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்கும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கும், வழக்குரைஞர்களுக்கும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.