ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வலியுறுத்தி ஆளுநர் மாளிகையின் முன்பாக முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா செய்திருக்கிறார்களே?
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் 109 காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிற காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தை கூட்ட பா.ஜ.க. ஆளுநர் தயாராக இல்லை. அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்த சச்சின் பைலட் ஆதரவு 19 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்ற காங்கிரஸ் கொறடா கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் சபாநாயகர் முடிவு எடுப்பதற்கு தடை விதித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் தடையை நீக்க முன் வரவில்லை. இந்நிலையில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கெலாட் ஆளுநர் மாளிகை முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தர்ணா நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தொடங்கி மத்திய பிரதேசத்தில் நடைமுறைப்படுத்திய ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை ராஜஸ்தானில் நிகழத்த பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆளுநர் சதித் திட்டம் தீட்டுகிறார். பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுப்பதன் மூலம் அங்கே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. ‘பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று பாரதி பாடியதற்கேற்ப, மோடி ஆட்சி செய்கிறார்; ஜனநாயகம் நாள்தோறும் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த நீதிமன்றங்கள் முன்வராதது மிகுந்த வேதனையை தருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது ஏன்?
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் மிரர் அக்கவுண்ட் தொடங்கி அதன் மூலமே விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற முறையை கைவிட்டு மீண்டும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலமே கடன் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி நடைபெற்று வரும் இந்த சமயத்தில் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் விவசாயிகளுக்கு உரம் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டிருக்கிறது. இதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
குறு, சிறு தொழில்களின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு ஏற்க முன் வருமா?
குறுந்தொழிலுக்கு ரூபாய் 25 லட்சமும், சிறு தொழிலுக்கு ரூபாய் 5 கோடியும் முதலீடாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது ரூபாய் 50 கோடி வரையிலான உற்பத்தியை சிறு தொழிலாகவும், ரூபாய் 250 கோடி உற்பத்தி செய்யும் நிறுவனங்களை நடுத்தர நிறுவனங்கள் என்றும் புதிதாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. கள நிலவரத்திற்கு எதிரான இத்தகைய அறிவிப்புகள் குறு,சிறு, நடுத்தர தொழில்களின் அடையாளங்களை முற்றிலும் அழித்துவிடும். குறுந்தொழில்களுக்கு ரூபாய் ஒரு கோடி முதலீடு, சிறு தொழிலுக்கு ரூபாய் 5 கோடி முதலீடு, நடுத்தர தொழிலுக்கு ரூபாய் 25 லட்சம் முதலீடு என மறுவரையறை செய்ய வேண்டுமென கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுத்தியுள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நலிந்த நிலையில் இருக்கும் போது பா.ஜ.க. அரசின் அறிவிப்பு மேலும் கடுமையான பாதிப்புகளையே உருவாக்கும். தொழில் முனைவோரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா?
கொரோனா நோயாளிகளை கையாள்வதில் தமிழக சுகாதாரத் துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா என்கிற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது ஏன்?
ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் மரணமடைந்த 444 பேரின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத் துறை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கேள்வியை எழுப்பியிருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி மாயமானது குறித்த வழக்கில் நீதிமன்றம் இக்கேள்வியை கேட்டிருக்கிறது. இதுகுறித்து நீதிபதிகள், ‘தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெல்லாம் அழைத்து செல்லப்படுகிறார்கள்? எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்? என்ற பதிவேடு பராமரிக்கப் படுகிறதா?’ என்று சரமாரியாக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றம் நடைபெறவில்லை. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் கட்சி செவிமடுக்க தயாராக இல்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றங்கள் தீர்வு காண்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
குவைத் இந்தியர்கள் தாயகம் திரும்ப அனுப்பப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதே?
உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, அரபு நாடுகளில் வேலை வாய்ப்புகளில் தாய் நாட்டிற்கே முன்னுரிமை கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இச்சூழலில் குவைத் நாட்டிலிருந்து ஏராளமான தமிழர்கள் வேலையை விட்டு தமிழகம் திரும்ப வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. குவைத்திலுள்ள 30 லட்சம் வெளிநாட்டினரில் 8 லட்சம் இந்தியர்களை வீட்டுக்கு அனுப்ப குவைத் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே மண்ணின் மைந்தர்களுக்கு தான் வேலை என்கிற சூழலில் குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் இத்தகைய நிலையேற்படுவது வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிற இந்தியாவில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்திருக்கின்றன?
நில அளவை கட்டணத்தை 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?
நிலம் எல்லை நிர்ணயிக்கும் தொகையை ரூபாய் 50 லிருந்து ரூபாய் 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிலம் உட்பிரிவு செய்வதற்கு 10 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி தவிக்கும் போது தமிழக அரசு சந்தடி சாக்கில் இத்தகைய அதிரடி உத்தரவின் மூலம் விளம்பரம் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. இதை விட எடப்பாடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு வேறு சான்று தேவையோ?
சுபசுர குடிநீர், கசாயம், நிலவேம்பு விற்பனை செய்யும் தமிழக அரசின் டாம்ப்கால் மருந்து விற்பனை நிலையத்தை மூடியது நியாயமா?
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க மத்திய அரசு ஆயுஷ் துறை பரிந்துரை செய்த மருந்துகளை விற்பனை செய்து வந்த சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்திலுள்ள டாம்ப்கால் மருந்து விற்பனை நிலையத்தை மூடியிருப்பது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் கொடுமைப்படுத்துவதாகும். கொரானா தொற்று காலத்தில் நோய் ஒழிப்புக்கு மருந்துகளை வழங்குகிற டாம்ப்கால் விற்பனை நிலையத்தை மூடியதற்கு என்ன காரணம்? இது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் விளக்கம் கூறுவார்களா? தனியார் மருந்து கடைகளுக்கு அதிக லாபம் ஈட்ட இந்தக் கடை மூடப்பட்டதா? என சிலர் எழுப்புகிற கேள்வியில் நியாயம் இல்லை என்று மறுக்க முடியுமா?
வனத்துறை விசாரணையில் விவசாயி மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதே?
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார் குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் முத்து. இவர் ஒரு விவசாயி. இவர் வயலில் முள்வேலி அமைத்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் இவரை கடந்த புதன் கிழமை இரவு 11.30 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு பிறகு, உடல்நலம் சரியில்லை என்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற பிறகு அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் குறித்து அவரது மகள், ‘வனக்காவலர்களின் சித்திரவதையினால் இறந்ததாக’ குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து மனித உரிமை ஆணையம் தலைமை வனத்துறை பாதுகாப்பு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
தமிழகத்தில் சாத்தான்குளம் போன்ற காவல் நிலைய மரணங்கள் தொடர்வது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய அவல நிலை நீடித்தால் காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை கண்டாலே மக்கள் அஞ்சி பதுங்குகிற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
திரு கோபன்னாஅவர்களின் தேசிய முரசு பணி நன்கு தொடரட்டும் மாமு சிவகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் அரியலூர்
திரு கோபண்ணாவின்
ராஜஸ்தான் சட்டமன்ற அவலம் குறித்த
பதிவு காங்கிரஸ் மற்றும்
ஜனநாயக பற்றாலர்களுக்கான
சுருக்க விளக்கம்.