மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் கர்நாடக பாஜக அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமாருடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா இந்த மெகா மோசடியை அம்பலப்படுத்தினார்.
அவர் பேசும்போது, தரமற்ற மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து கர்நாடக அரசு வாங்கியுள்ளது. அதுவும் கொள்முதல் செய்வதற்கு முன்பே பணத்தை கொடுத்துள்ளனர். கொரோனாவை எதிர்கொள்வதில் கர்நாடக அரசுடன் இணைந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய ஊழலுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம் என்றார்.
இதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததையும், சித்தராமையாவும், சிவகுமாரும் செய்தியாளர்களுக்கு சுட்டிக் காட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், தெர்மல் ஸ்கேனர் கருவி ரூ. 1500 முதல் 2 ஆயிரம் வரை சந்தையில் கிடைக்கிறது. ஆனால் கர்நாடக அரசு ஒரு தெர்மல் ஸ்கேனர் வாங்க ரூ. 5,945 செலவு செய்துள்ளது. 500 மி.லி. சானிடைசர் ரூ. 80 முதல் ரூ.100 வரை கிடைக்கிறது. ஆனால், ரூ. 250 முதல் ரூ.600 வரை கொடுத்து வாங்கியுள்ளனர்.
இவ்வாறு தரமற்ற மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியதில், ரூ. 2 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும், இது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை ரூபாய் 4 லட்சம் வீதம் வாங்கியது. ஆனால், கர்நாடக பா.ஜ.க. அரசு மார்ச் 22 ஆம் தேதி வாங்கிய முதல்கட்ட வெண்டிலேட்டர்கள் ரூபாய் 5.6 லட்சத்திற்கும், இரண்டாவது கட்டமாக ரூபாய் 12.3 லட்சத்திற்கும், இறுதியாக ரூபாய் 18.2 லட்சத்திற்கும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. பாதுகாப்பு கவசங்கள் சந்தையில் ரூபாய் 330 விலையில் விற்கப்படுவதை கர்நாடக அரசு ரூபாய் 2,117க்கு வாங்கியிருக்கிறது. இந்த உபகரணங்கள் தரம் குறைந்ததாக இருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல, கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் குஜராத் மாநில பா.ஜ.க. அரசும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறது. தரம் குறைந்த உபகரணங்களை வழங்கிய நிறுவனம் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமானதாகும். குஜராத் அரசு வாங்கிய 5 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தரம் குறைந்தவை என புகார்கள் எழுந்துள்ளன. இதை வழங்கிய நிறுவனம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள ஜோதி சி.என்.சி. ஆட்டோமேஷன் லிமிடெட். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ்குமார் பிகாபாய் விரானி. இவர் தான் நரேந்திர மோடி அணிந்திருந்த சூட்டில் தங்கத்தினால் பெயர் பொறித்து வழங்கியிருந்தார். அந்த உடையோடு தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஜனவரி 2015 இல் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த உடையை வழங்கியதன் மூலம் பிரபலமான சூரத்தை சேர்ந்த விரானி தான் குஜராத் அரசுக்கு அனைத்து கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கிறார். இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக நிறைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குஜராத், கர்நாடகா பாணியில் தமிழகத்திலும் சுகாதாரத்துறை அதிக விலை கொடுத்து முக கவசங்கள் வாங்கியதில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 31.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடக்க காலமான மார்ச் மாதம் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு 14 லட்சம் மூன்றடுக்கு முக கவசங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்படி, முக கவசத்தின் விலை ரூ.9.25 என்ற விலையில் 14 லட்சம் முக கவசங்களை 1.2 கோடி ரூபாய்க்கு வாங்க சென்னை மாநகராட்சி ஒரு அனுமதி அளித்தது. இதற்கு ஜி.எஸ்.டி. ரூபாய் 6.47 லட்சம் உட்பட மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநகராட்சியின் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால், அதேநேரத்தில் மாநகராட்சி கொள்முதல் செய்த விலையை விட குறைவான விலைக்கு சுகாதாரத்துறை சார்பில் மூன்றடுக்கு முக கவசங்கள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி வாங்கிய முக கவசத்தின் விலை ரூபாய் 9.25. அதே முக கவசத்தை சுகாதாரத்துறை ரூ.7 விலைக்கு வாங்கியிருக்கிறது. இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 31.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து கூட்டுக் கொள்ளை அடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேபோல, தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததும் அம்பலமாகியிருக்கிறது. அதிக விலை கொடுத்து தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற வேளையில் அதன் பயன்பாட்டிற்குரிய வெண்டிலேட்டர்கள், முக கவசங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றில் மாநில அரசுகள் ஊழல் செய்வது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்திருப்பதை அறிந்து கடும் வேதனையில் உள்ளனர். இதற்கு உரிய நேரத்தில், சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.