ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சபாநாயகர் முடிவின் மீது நீதிமன்றம் குறுக்கிட முடியுமா? என்ற சட்ட ரீதியான கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தில் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். (ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது).
கடந்த 13 ஆம் தேதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்திருந்தார். இதில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனையடுத்து, கூட்டத்தில் கலந்து கொள்ளாத சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா பரிந்துரைத்தார். அதனடிப்படையில், இது குறித்து விளக்கம் கேட்டு, சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு சபாநாயகரை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றமும் ஏற்றது.
சபாநாயகர் முடிவு எடுப்பதை ஒரு வாரம் தள்ளிப் போடுவது பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் எடுக்கும் முடிவில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சபாநாயகரே அதிகாரமிக்கவர். கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகரின் நடவடிக்கையோ அல்லது முடிவுகளோ நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டது அல்ல என்று கட்சி தாவல் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சபாநாயகரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டதே என கடந்த 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையே ஒன்றும் இல்லாமல் போனது.
சபாநாயகரின் முடிவுகள் ஆய்வுக்குட்பட்டது என்றால், சபாநாயகர் கட்சி சாராதவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால், எதார்த்தத்தில் நிலைமை அப்படி இல்லையே. சபாநாயகர்கள் அனைவரும் கட்சி சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள்.
ராஜஸ்தான் விவகாரம் குறித்து மக்களவையின் முன்னாள் பொதுச் செயலர் டிடி. ஆச்சார்யா கூறும்போது, ”சபாநாயகர் முடிவு எடுக்கும் முன்பு, அதில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது. சபாநாயகரின் முடிவை வேண்டுமானால் நீதிமன்றம் மறுஆய்வு செய்யலாம். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது.
ராஜஸ்தான் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்யும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது கட்சி தாவல் நடவடிக்கைக்கு தடை விதிப்பதை போன்றது. இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த கட்டத்தில் நீதிமன்ற தலையீடு முற்றிலும் தடுக்கப்படவேண்டும். இந்த வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். மேலும், தான் அனுப்பிய நோட்டீசுக்கு, நீதிமன்றத்திடம் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, ”கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, அதிமுகவின் 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இது அப்பட்டமாக கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய வழக்காகும்.
இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பிய தமிழ்நாடு சபாநாயகர், 11 எம்எல்ஏக்கள் பதில் அளித்த பிறகு, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த போது, சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்தன.
ஆனால், இதே போன்ற வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தலையிட்டுள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 11 எம்எல்ஏக்கள் விசயத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பதற்குள், தமிழக சட்டப்பேரவையின் காலமும் நிறைவு பெற்றுவிடும். இதுபோன்ற நிகழ்வுகளில் நீதிமன்றம் குறுக்கிடாமல் இருப்பது , கட்சி தாவல் தடை சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போக வழிவகுக்கும்” என்றனர்.