மறைக்கப்பட்ட 444 கொரோனா மரணங்கள் அம்பலமாகியிருக்கிறதே ?
சென்னை மாநகரத்தில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை நிகழ்ந்த மரணங்கள் மறைக்கப்பட்டதாக தினகரன் உள்ளிட்ட நாளேடுகளில் பரபரப்பாக செய்தி வெளியானது. அதில், சென்னையில் கணக்கு காட்டியது 316, உண்மையில் இறப்பு 515 எனக் கூறி 199 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டதாக செய்தி அம்பலமானது. இதுகுறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்ட தினகரன் உள்ளிட்ட நாளேடுகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
இதைத் தொடர்ந்து கொரோனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை இயக்குநர் பி. வடிவேலன் தலைமையில் 11 உறுப்பினர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சென்னையில் உள்ள இடுகாடு, சுடுகாடுகளில் தகவல் சேகரித்ததோடு, 112 மருத்துவமனைகளில் ஆய்வு செய்து கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 444 என்று உறுதி செய்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், ‘மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் சரியான தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் சென்னை மாநகரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மாநில பட்டியலில் சேர்க்க முடியாமல் போய்விட்டது. அதனால் தான் இந்த பிழை ஏற்பட்டதே தவிர, வேறு உள்நோக்கம் இல்லை” என்று கூறியிருக்கிறார். இந்த தவறு அவர் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்பு நடைபெற்றது.
ஆனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி, இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக இருக்கிற தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகமிக குறைவு என்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். இதற்காகவே இத்தகைய மரணங்கள் மறைக்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு 444 பேர் மரணமடைந்ததாக உறுதி செய்ததால் தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.4 சதவிகிதத்தில் இருந்து 1.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புதைக்கப்பட்ட உண்மைகள் ஊடகங்களால் தோண்டி எடுக்கப்பட்டு, அம்பலத்திற்கு வந்துவிட்டன.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறதே ?
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க செய்த முயற்சிகள் ஒலி நாடாக்கள் மூலம் அம்பலமாகி வருகின்றன. இதற்கான விசாரணையும் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் வீடு உட்பட பல இடங்களில் மத்திய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. அவருடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த மக்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் வீடும் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தை காட்டி வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று மோடி அரசு திட்டம் தீட்டி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் அகமத் படேல் போட்டியிட்ட போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க.வினரின் பிடியில் சிக்க விடாமல் தடுப்பதற்காக கர்நாடகத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அன்றைய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் செய்திருந்தார். அதன்மூலம் அகமது படேல் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைத்தார். இதற்காக இவரை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக மோடி அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு டி.கே. சிவகுமாருடைய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அவரது பெங்களுர் மற்றும் தில்லியில் உள்ள வீடுகளில் சோதனையிட்டது. அப்போது புதுதில்லியில் உள்ள டி.கே. சிவகுமார் வீட்டில் ரூபாய் 8 கோடி கைப்பற்றியதாக செய்திகளை வெளியிட்டார்கள். ஆனால், வருமான வரித்துறை கைப்பற்றியதோ, ரூபாய் 4 லட்சம் தான் என்று சமீபத்தில் டி.கே. சிவகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இத்தகைய பழிவாங்கும் உத்திகளை கையாண்டு தான் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, முதலில் கர்நாடகத்திலும் பிறகு மத்தியபிரதேசத்திலும் ஆட்சியை கவிழ்த்தார்கள். தற்போது ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், மோடியின் வித்தை கெலாட்டிடம் பலிக்காது.
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வது ஏன் ?
கொரோனா பாதிப்பினாலும், பொது ஊரடங்கினாலும் இந்தியாவின் பொருளாதாரமே பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பவுன் தங்கம் ரூபாய் 38,184 ஆக உயர்ந்திருக்கிறது. மார்ச் 24 பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை பவுனுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
1964 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 63.25 ஆக இருந்தது. 2020 இல் ரூபாய் 47,700 ஆக பலமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உலக நாடுகளில் தங்கம் கொள்முதல் செய்வதில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 974 டன் தங்கம் இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.
தங்க கடத்தல்களில் உலகத்திலேயே அதிகம் சம்மந்தப்பட்ட நாடாகவும் இந்தியா விளங்குகிறது. தங்க கடத்தல் செய்திகள் வராத நாளே இல்லை. ஏறத்தாழ ஆண்டுக்கு 150 டன்கள் முதல் 200 டன்கள் வரை இந்தியாவிற்குள் தங்கம் கடத்தி வரப்படுகிறது. ஆனால், தற்போது 300 முதல் 400 டன்கள் வரை தங்கம் கடத்தல் அதிகரித்திருக்கிறது.
தங்கத்திற்கு இத்தகைய மோகம் இருக்கிற காரணத்தினால் தான் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் வெளிநாட்டு தூதரகங்கள் கூட சம்மந்தப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா நடிகை சொப்னா சுரேஷ் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கேரள அரசியலையே உலுக்கி வருகிறது. இதன்மூலம் பலர் சிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆக, ஏதோ ஒரு வழியில் தங்கத்தை விலை கொடுத்து வாங்கி, அதை ஒரு சேமிப்பான முதலீடாக மக்கள் கருதுகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பான முதலீட்டிற்கு சிறந்ததாக தங்கம் விளங்கி வருகிறது. இதனால் தான் தங்கத்தின் விலை ஏறுகிறது.
ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறைச் சேர்ந்த 31 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன் ?
கொரோனா தொற்றினாலும், பொது ஊரடங்கு காரணமாகவும் கட்டுமானத் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பணியாற்றிய 90 சதவிகித புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பிச் சென்று விட்டதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் கம்பி, மணல், கற்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறையின் ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள 31 டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் பொதுப்பணித்துறையின் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானப் பணிகள் முடங்கினாலும் இந்த தொகையை மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கு கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிரை காப்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வேறு வகைகளில் பணம் விரயம் ஆவதை தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் யார் ?
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடராஜன் சுரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் கருத்துக்கள் வெளியிடுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.
ஆனால், “கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நடராஜன் சுரேந்திரன் ஏற்கனவே வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். அதன்மூலம் மதவெறியை தூண்டுகிற வகையில் கருத்துக்களை பரப்பியவர். பயிற்சி பெறுவதற்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் இருக்கிற நாக்பூருக்கு சென்று பல மாதங்கள் தங்கியவர். இந்தப் பின்னணி கொண்டவர் தான் இன்றைக்கு கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் சார்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்” என்று நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மு. அப்பாவு ஆணித்தரமாக கூறியிருக்கிறார். மேலும் கருப்பர் கூட்டம் அமைப்பின் சார்பாக இத்தகைய கருத்துக்களை கூறி, இந்துத்வா சக்திகளை வளர்க்க வேண்டும் என்பதுதான் நடராஜன் சுரேந்திரனின் நோக்கம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஏதோ ஒரு வகையில் பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச என்கவுண்டரில் கொல்லப்பட்ட விகாஸ் துபே படுகொலை குறித்து உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறதே ?
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள விசாரணைக்குழுவின் மூலம் என்கவுண்டர் படுகொலையின் உண்மை வெளிவரும் என நம்புகிறோம். குஜராத் பாணியில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றமே முன்வந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திருப்பது உண்மையை வெளிக்கொணருவதற்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா கூறுகிறபடி உத்தரப்பிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல, ரவுடிகளின் ராஜ்ஜியம் தான்.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் செய்கிற தவறுகளை அம்பலப்படுத்துவதில் அரசியல் கட்சிகளை விட முன்னணி பங்கு வகித்து வருகிற அறப்போர் இயக்கத்தை முடக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முறையிட்டிருக்கிறாரே ?
தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயக நாட்டில் எவரையும் தடுக்கிற வகையில் ஆணை பிறப்பிக்க உரிமையில்லை” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதாக பொதுநல வழக்கு ஒன்றை அறப்போர் இயக்கமும், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் தொடுத்த வழக்கில் தான் நீதிபதிகள் அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் நிகழ்த்துகிற பல்வேறு ஊழல்கள், முறைகேடுகளை அம்பலப்படுத்துவதில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக அறப்போர் இயக்கம் மிகச் சிறப்பான பணி செய்து வருவதை எவரும் பாராட்டவே செய்வார்கள். அதை தடுக்க முயல்வது ஊழலுக்கு துணை போவதாகும்.
பொது மக்களால் அன்போடு ‘10 ரூபாய் டாக்டர்” என்று அழைக்கப்பட்ட டாக்டர் சி. மோகன் ரெட்டி இறந்து விட்டதாக செய்தி வெளிவந்துள்ளதே ?
வில்லிவாக்கம் பகுதியில் டாக்டர் சி. மோகன் ரெட்டி தம்மிடம் வரும் நோயாளிகளிடம் 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் பெறுவது கிடையாது. மோகன் மருத்துவமனையில் 30 படுக்கைகளோடு ஏழை, எளியோருக்கு சிகிச்சையை வழங்கியவர். திருமணமாகாத இவர் தமது வாழ்க்கையையே மருத்துவ தொழிலுக்காக அர்ப்பணித்தவர். புகழ் பெற்ற டாக்டர் சி.எம்.கே. ரெட்டி அவர்களின் சகோதரரான டாக்டர் சி. மோகன் ரெட்டி அவர்களின் இறப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மருத்துவர்களும், மருத்துவமனைகளும் வணிகமயமாகி, நோயாளிகளை துன்புறுத்தி கட்டணம் வசூலிக்கிற காலகட்டத்தில் டாக்டர் சி. மோகன் ரெட்டி போன்றவர்கள் வாழ்ந்ததை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரது நினைவு என்றைக்கும் போற்றப்படும். மறைந்த 10 ரூபாய் டாக்டர் டாக்டர் சி. மோகன் ரெட்டி அவர்களின் நினைவு அந்தப் பகுதி மக்களால் என்றும் நினைவு கூறப்படும்.