ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்த உணவு தானிய தொகுப்புத் திட்டம் முடிந்துவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் பசி, பட்டினியால் வாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் மனைவி, குழந்தை குட்டிகளோடு தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றார்கள். இதில் சாலை விபத்துகளில் சிக்கி 90-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கியது. இதன்மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், பொருளாதார தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்படி, 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, 8 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ உணவு தானியங்களும், ஒரு கிலோ பருப்பு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதேசமயம், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்திலிருந்து உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை.
மத்திய அரசின் கிடங்குகளில் இருந்து 80 சதவீத தானியங்களை மாநில அரசுகள் பெற்றபோதிலும், மத்திய அரசு அறிவித்த 8 லட்சம் டன் உணவு தானிய தொகுப்பில், 13 சதவீதம் மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2 கோடியே 13 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பலன் அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை முழுமையாகப் பெற்றுவிட்டன. ஆனால், இதிலிருந்து வெறும் 2 சதவீத உணவு தானியங்களை மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன.
மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் ஆறு மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களில் இருந்து 1 சதவீதத்துக்கு குறைவாகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் இருந்து, 5 சதவீதம் கூட இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.
மத்திய அரசிடம் இருந்து 100 சதவீத உணவு தானியங்களைப் பெற்று, மே மற்றும் ஜுன் மாதங்களில் 95 சதவீத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜுன் மாதத்துடன் முடிவடைந்தாலும், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதற்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக உணவு தானியங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த சூழலில், ” ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், உணவு தானியங்கள் வழங்குவது ஜுன் மாதத்துடன் முடிந்துவிட்டது. அடுத்த சில மாதங்களுக்கு எப்படி வாழப் போகிறோம் என்றே தெரியவில்லை ” என்ற சோகக் குரல், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.