” சமுதாயத்தில் சோசலிச கட்டமைப்புக்கு உட்பட்டு நமது திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில், அதிகார உச்சியில் இருக்கும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக, ஏழை நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு குழுவினர் மற்றும் மண்டலங்களில் நிலவும் சமமற்ற நிலையை குறைக்க வேண்டும்….”
– வங்கிகள் தேசியமயமாக்கல் குறித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்த கருத்துதான் இது.
கடந்த 1969 ஆம் ஆண்டு 14 வங்கிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார். இந்த மாபெரும் சீர்திருத்தம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த 50 ஆண்டுகளில் வங்கிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதை, வங்கி கடன் மோசடிகளும், முறைகேடுகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 50 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பலன் தந்துள்ளதா? இல்லை, பொருளாதார ரீதியில் பலன் தந்துள்ளதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
உலக சந்தை முதலாளித்துவமயமான நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு தனியார் வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு காலக்கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை ஓரம் கட்டிவிட்டு, தனியார் வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கின. இது குறித்தும் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
1947 – ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வங்கித்துறை திவாலாகிக் கொண்டிருந்தது. அப்போது, இருளில் ஒளிரும் ஒரே ஒரு விளக்கு போல இருந்தது இம்பீரியல் வங்கி. அதுதான் இப்போது இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி 1955 – ல் தேசியமயமாக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே சில வங்கிகளோடு சேர்த்து ரிசர்வ் வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்து வந்த ரிசர்வ் வங்கி, இன்று வங்கிகளை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசு இயந்திரமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் பரந்த அளவில் கடன் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் வங்கிகள் அதனை செய்யாததால், 1961 முதல் 1967 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 10 லட்சத்து 48 ஆயிரமாக இருந்த வங்கிக் கணக்குகள் 22 ஆயிரமாக குறைந்தன.
இந்த நிலையில் தான், வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் எழுந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசின் சோசலிச லட்சியத்தை அடைவதற்காகவே, வங்கிகளை தேசியமயமாக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தை 1956 ஆம் ஆண்டு உருவாக்கியபோதே, காப்பீட்டுத்துறை தேசியமயாக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தவிர, மற்ற வங்கிகள் அனைத்தும் 1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டன.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பயனாக, விவசாயம், மற்றும் சிறு தொழில் ஆகிவயற்றுக்கான கடனுதவியை இரட்டிப்பாக்க தேசிய கடன் வழங்கும் கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு முன்பு இந்த இரு துறைகளும் கடனுதவி பெற முடியாத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
14 வங்கிகளை தேசியமயமாக்க, 1969 ஆம் ஆண்டு வங்கி முறை சட்டத்தின் படி நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதில் முக்கியமான நிபந்தனையாக, தேசிய கொள்கை மற்றும் அதன் இலக்கை அடைய பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவது அவசியம் என்று கூறப்பட்டிருந்தது.
வங்கிகள் தேசியமயமாக்கலில் இன்றுவரை பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், விவசாயம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு அது பேருதவியாக இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
இதன்மூலம், தேசிய மயமாக்கலின் பின்னணியில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் லட்சியம் நிறைவேறியிருப்பதையும் மறுக்க இயலாது.