தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சொத்துக்கள் குறித்து துக்ளக் குருமூர்த்தி அவதூறுகளை பரப்பி வருகிறாரே ?
அவதூறு பரப்புவதை தொழிலாகக் கொண்டவர் வேறு எதை செய்ய முடியும் ? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை என்பது 1954 இல் கே. காமராஜ், இந்து கே. சீனிவாசன் ஆகியோரை நிறுவன அறங்காவலர்களாக கொண்டு தொடங்கப்பட்டது. 1958 இல் நோக்கங்களும், குறிக்கோள்களும் பதிவு செய்து வெளியிடப்பட்டன. அறக்கட்டளையில் இருந்து இந்து கே. சீனிவாசன் விலகிய பிறகு அறங்காவலர்களாக காமராஜர், எம். பக்தவச்சலம், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோரைக் கொண்டு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. ஏறத்தாழ 60 ஆண்டுகளாக வருமான வரித்துறையின் வரிச் சலுகைகளைப் பெற்று ஆண்டுதோரும் கணக்குகளை தணிக்கை செய்து சமர்ப்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகிற அறக்கட்டளையை, களங்கப்படுத்துகிற முயற்சியில் குருமூர்த்தி வெற்றி பெற முடியாது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை மூலம் ஏழை, எளியவர்களுக்கு கல்வி பயில உதவித் தொகை, மருத்துவ செலவிற்கான உதவித் தொகை போன்ற சமூகநலக் காரியங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு, தலைவர் கே.எஸ். அழகிரி ரூபாய் 10 லட்சம் நிதியுதவியை இந்த அறக்கட்டளையின் மூலமாகத் தான் வழங்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் அரசியலில் எத்தகைய தூய்மையை பின்பற்றினாரோ, அதற்கு சற்றும் குறையாமல் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை அவர் வகுத்த பாதையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு இவ்வளவு பெரிய சொத்து இருக்கிறதே என்கிற பொறாமை உணர்வு கொண்டவர்கள் காழ்ப்புணர்ச்சியோடு அவதூறுகளை கூறி வருவதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய அவதூறு பிரச்சாரத்தை தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் முறியடித்து காட்டுவோம்.
தனியார் சட்டப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்பட்ட சான்றிதழில் தந்தை பெயரோடு, தாயின் பெயரும் இடம் பெற வேண்டும் என்று கோரிய மாணவிக்கு வெற்றி கிடைத்திருக்கிறதே ?
கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ,- மாணவியரின் வெற்றிக்கு இக்காலங்களில் தந்தையை விட தாயின் பங்கு அதிகரித்து வருவதை எவரும் மறுக்க முடியாது. அந்த வகையில் தந்தையின் பெயரோடு தாயின் பெயரையும் சான்றிதழில் இணைப்பது வரவேற்புக்குரியது. இதை பல்கலைக் கழக மானியக்குழு அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
சமீபகாலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியல் வளர்க்கப்பட்டு வருகிறதே ?
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு வகுப்புவாத சக்திகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. கந்தசஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் இழிவான பிரச்சாரம் செய்ததை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் பரப்புரை மேற்கொள்வதை கடவுள் மறுப்பாளர்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் கடவுள் நம்பிக்கை புண்படுகிற வகையில் செயல்படுவது வகுப்புவாத சக்திகளுக்கு வலுசேர்க்கவே உதவும்.
தந்தை பெரியாரின் சிலை களங்கப்படுத்தப்பட்டுள்ளதே ?
தமிழ்ச் சமுதாயத்திற்காக தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். தமிழர்களுக்கு சுயமரியாதையையும், சமூகநீதியையும் பெற்றுத் தந்தவர். அவரை இழிவுபடுத்துவதை நன்றியுள்ள தமிழர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் தமிழ்ச் சமுதாயத்தினர் அனைவரும் ஜாதி, மத பேதங்களை கடந்து ஓரணியில் திரள வேண்டிய நிலை ஏற்படும் என வகுப்புவாத சக்திகளை எச்சரிக்க விரும்புகிறோம்.
பம்பு செட்டுகளுக்கு சூரியஒளி மின்சாரம் வழங்கும் மத்திய, – மாநில அரசுகளின் திட்டம் விவசாயிகளுக்கு பயன் தருமா ?
விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு சூரியஒளி மின்சாரம் வழங்குவதாக இருந்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று முதலில் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததன் விளைவாக அந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியஒளி மின்சார பம்பு செட்டுகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதில், மாநில அரசு 40 சதவிகிதம், மத்திய அரசு 30 சதவிகிதம், விவசாயிகள் 30 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டியிருக்கிறது. 7.5 குதிரை சக்தி கொண்ட சூரிய ஒளி பம்பு செட்டுகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 33 ஆயிரம் செலவாகிறது. இதில் விவசாயிகள் ரூபாய் 1 லட்சம் செலவு செய்ய வேண்டும். விவசாயிகளால் இந்த செலவை செய்ய முடியுமா ? இந்நிலையில் ரூபாய் 1 லட்சம் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சூரியஒளி மின்சாரம் பம்பு செட் திட்டம் தோல்வியில் தான் முடியும்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அனைவரும் பயன்படுத்துகிற சானிடைசருக்கு ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டிருக்கிறதே ?
கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொள்வதாக கூறுகிற அதே வேளையில், மக்கள் அதிகம் பயன்படுத்துகிற சானிடைசருக்கு ஜி.எஸ்.டி. 12 சதவிகிதமாக இருந்தது, தற்போது 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதான் பா.ஜ.க.வின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையா ?
தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு ரூபாய் 20 ஆயிரம் கோடி என்று புலம்பியிருக்கிறாரே ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் சொத்து மதிப்பு குறித்து பா.ஜ.க.வினர் கவலைப்படுவது ஏன் ? பா.ஜ.க.வினரின் தலைமை அலுவலகமான 5 கிரவுண்ட் பரப்பளவு கொண்ட முக்தா சீனிவாசன் வீட்டை பா.ஜ.க.வினர் எப்படி வாங்கினார்கள் ? எங்கே பேச்சுவார்த்தை நடந்தது ? 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மூன்றரை கோடி ரூபாய்க்கு எத்தகைய உத்திகளை கையாண்டு வாங்கினார்கள் என்ற விவரத்தையும், அதனால் முக்தா சீனிவாசனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலையும் முற்றிலும் அறிந்தவர்கள் நிறைய பேர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர். பா.ஜ.க. தலைவரின் அவதூறு தமிழக காங்கிரஸ் கட்சியினரிடமோ, தமிழக மக்களிடமோ எடுபடாது.
எடப்பாடி ஆட்சியின் சாதனை என்ன ?
ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே நாளில் ரூபாய் 180 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் ஏழை, எளிய அன்றாடம் காய்ச்சிகள் மதுவை வாங்கி குடித்து தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டது தான் சாதனை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை அன்னை சோனியா காந்தி நியமித்தது குறித்து குருமூர்த்தி விமர்சனம் செய்திருக்கிறாரே ?
குருமூர்த்தியின் விமர்சனத்திற்கு மிகச் சரியான பதிலை தலைவர் அழகிரி கூறியிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தான் மோதிலால் வோரா, சி.ஆர். கேசவன் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இது அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் செய்யப்பட்டிருக்கிறது. ஏதோவொரு வகையில் காங்கிரஸ் கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட குருமூர்த்தி இத்தகைய ஆதாரமற்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு ஊடகங்களில் ஓரிரு நாட்கள் வெளிச்சம் பெற்று வருகிறார். அவதூறு பிரச்சாரத்தின் மூலம் விளம்பர வெளிச்சம் பெற்ற குருமூர்த்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒளிமயமான எதிர்காலத்தோடு காங்கிரசில் பவனி வர வேண்டிய சச்சின் பைலட் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டுள்ளாரே ?
விமான ஒட்டியாக இருந்த ராஜேஷ் பைலட் 1979 இல் அன்னை இந்திரா காந்தியை சந்தித்து 1980 இல் ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை பெற்றவர் ராஜேஷ் பைலட். கடந்த 2000 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் மரணமடைந்த பிறகு 23 வயதில் அரசியலில் நுழைந்தவர் சச்சின் பைலட். தமது 27 ஆவது வயதில் மக்களவை உறுப்பினராகவும், 32 ஆவது வயதில் மத்திய அமைச்சராகவும், 37 ஆவது வயதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், 41 ஆவது வயதில் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராகவும் தொடர்ந்து படிப்படியாக பல பொறுப்புகளை பெற்றுக் கொண்டு வந்தார். இவரைப் போல, அரசியலில் வளர்ந்தவர்கள் எவரையும் இந்திய அரசியலில் ஒப்பிட முடியாது. இத்தகைய பொறுப்புகள் அனைத்தையும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றுத் தான் சச்சின் பைலட் அரசியல் வளர்ச்சி வேகமாக அடைந்தது.
ஆனால், இளம் வயதைச் சேர்ந்த சச்சின் பைலட் முதலமைச்சராக வேண்டுமென்று பேராசைப்பட்டு பா.ஜ.க.வுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதன் விளைவாக அரசியல் எதிர்காலத்தை இழந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார். தம்மிடம் இருக்கும் 20-க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக ஹரியானா மாநிலத்தில் இருந்து தற்போது கர்நாடக மாநிலத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் சச்சின் பைலட் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையை ஏற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே மொத்தமுள்ள 200 சட்டமன்ற உறுப்பினர்களில், 109 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை முதலமைச்சர் கெலாட் பெற்றிருக்கிறார். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பை செய்த பா.ஜ.க.வின் முகத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கரியை பூசப்போகிறார்கள்.
டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பா.ஜ.க. அரசு போதிய நிதி ஒதுக்காதது ஏன் ?
கடந்த மார்ச் மாதம் தான் கொரோனா தொற்று நோயை பேரிடர் என்ற வகையில் பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதிக்கு மத்திய அரசு 2019-20 இல் ரூபாய் 17,210 கோடி ஒதுக்கியது. ஆனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நிலையில் 2020-21 ஆம் ஆண்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு ரூபாய் 22 ஆயிரத்து 70 கோடி தான் ஒதுக்கியது. ஏறத்தாழ 5 ஆயிரம் கோடி ரூபாய் தான் அதிகம் ஒதுக்கியிருக்கிறது இதை வைத்துக் கொண்டு 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவை ஒழிக்க முடியுமா ?
சிறப்பு.
நன்றி
Environmental Impact Assesment 2020 -2021 பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் .காங்கிரஸ் தலைமை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடவேண்டும்.
Thanks,
Dominic Rengit Singh.