இனிய நண்பர்களே,
வணக்கம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முழுநேர ஊழியராக பணியாற்றி அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வாழ்த்துகளோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் துணைத் தலைவராக, ஊடகத்துறை தலைவராக உயர் பொறுப்புகளைப் பெற்று பணியாற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில் இருந்து 1989 தேர்தல் முதல் விலகி, தொடர்ந்து நாள்தோறும் கட்சிப் பணியாற்றுவதில் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.
காங்கிரஸ் கட்சியில் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடையாது. என்னை பெற்று, வளர்த்து, எம்.ஏ., பி.எல்., வரை படிக்க வைத்து, வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்து வைத்து, 91 ஆண்டுகள் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, மறைந்த எனது தந்தை ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் இந்து முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை இந்நாளில் செய்து வருகிறேன். ஆனாலும், என் தந்தையின் நினைவுகள் மறக்க முடியாத ஒன்றாகும்.
அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, தொழுப்பேட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புறகால் கிராமம் எனது சொந்த ஊர். எனது தந்தையின் சிறுவயதிலேயே அவரது தந்தை காலமானதால், தாய்மாமன் ஊரான கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரில் வளர்ந்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 18 வயது நிரம்பிய அவர், தனது சொந்த ஊரான புறகால் கிராமத்திற்கு திரும்பி விட்டார். பிறகு திருமணமும் செய்து கொண்டார்.
பரம்பரை இசும்பு உரிமையின் அடிப்படையில் மணியக்காரர் பணியில் சேர்ந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்பதவியை பறிக்கிற வரை கீழ்அத்திவாக்கம், களத்தூர் என்ற இரு பெரிய கிராமங்களின் மணியக்காரராக இருந்தார். மன்னராட்சி ஒழிந்தாலும் கிராமங்களில் மணியக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருந்தது. மன்னரைப் போல அதிகாரம் செலுத்த முடியாவிட்டாலும் மணியக்காரரான என் தந்தைக்கு அந்த இரண்டு கிராமங்கள் மட்டுமல்லாமல் சுற்றியிருந்த கிராமங்களிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.
இத்தகைய அரசியல் பின்னணியுள்ள என் தந்தை ஒரு முழு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது திருமணத்திற்கு முன்பு 2 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்த அவர், தமது இறுதி காலத்தில் 80 ஏக்கர் நிலமும், 10 பம்ப் செட்டுகளும் சம்பாதித்தது தான் அவரது ‘அபார’ வளர்ச்சி. அவர் வாழ்ந்த பெரும்பகுதியை அரசு மற்றும் வங்கிக் கடனை சமாளிப்பதிலேயே செலவழிக்க வேண்டியிருந்தது. இறுதிகட்டத்தில் குறிப்பிட்ட சில சொத்துகளை விற்று கடனை அடைத்து விடுதலையானார்.
சென்னைக்கு அடிக்கடி செல்கிற பழக்கம் கொண்டிருந்த அவர், சென்னை தியாகராய நகர், சாரி தெருவில் 1950களில் 3 கிரவுண்ட் நிலத்தை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். (தற்போதுள்ள மலபார் கோல்ட் ஹவுசுக்கு அருகில்). அங்கே ஒரு சிறிய வீடு கட்டினார். கிராமப்புறத்தில் வாழ்ந்த என் தந்தை, தமது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் நன்றாக படிக்க வேண்டும், தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
பிறகு ஒருசில ஆண்டுகளில் ஒருவரின் ஆலோசனையை கேட்டு இந்த சாரி தெரு வீட்டை விற்றால் ரூபாய் 20 ஆயிரம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நமது பக்கத்து கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருகிறது என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு சென்னையில் உள்ள வீட்டை விற்றார். (இன்றைய அதன் மதிப்பு ரூபாய் 10 கோடி). அதற்குப் பிறகு, கிராமத்தில் நிலத்தை வாங்கிய அவரால், கடைசி வரை சென்னையில் எந்தவொரு சொத்தையும் வாங்க முடியவில்லை.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் பொறுப்பு வகிக்காமல் செல்வாக்கோடு இருந்தார். 1957, 1962, 1967, 1971, 1977, 1980 ஆகிய பொதுத் தேர்தல்களில் அரசு மணியக்காரராக இருந்தும் காங்கிரஸ் கொடி கட்டிய காரில் பயணித்து சுற்றியிருந்த 20 கிராமங்களில் மக்கள் செல்வாக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிப்பார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சர் எம். பக்தவச்சலம், மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன், செய்யூர் வி.கே. ராமசாமி முதலியார், தமிழக அமைச்சாக இருந்த பி.ஆர். பரமேஸ்வரன் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அச்சரப்பாக்கம் ஒன்றிய பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பு என் தந்தையிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதும், உணவு அருந்துவதும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வுகளாகும். தேர்தல் நேரங்களில் எண்ணற்ற காங்கிரஸ் கட்சியினருக்கு நேரம், காலம் பாராமல் என் தாயார் உள்ளிட்டவர்கள்
கடுமையாக பணியாற்றி உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறுவது அடிக்கடி நடைபெறுவதை பார்த்திருக்கிறேன். இவற்றையெல்லாம் நான்கு சகோதரர்களோடு பிறந்த நான், சிறுவயது முதற்கொண்டு ஈடுபாட்டுடன் கவனித்து வருவேன்.
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை, என் தந்தையின் செல்வாக்கில் 12 முதல் 15 பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றி பெறுகிற நிலை 1980 ஆம் ஆண்டு வரை இருந்தது. அந்த வகையில் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களாக வருபவர்கள் என் தந்தையின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுபவர்களாகவே இருந்தார்கள். அதனால், என் கிராமத்தை சுற்றியிருந்த பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல வளர்ச்சிப் பணிகள் என் தந்தையின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் என் தந்தை சென்னைக்கு வரும் போதெல்லாம் பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும், பிறகு புதிய சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் ஏதாவது ஒரு அறையில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் தங்கிய அறை 205 இல் பார்வர்ட் பிளாக் தலைவர் மதுரை திரு. ஏ. அய்யண்ணன் அம்பலம், 210 அறையில் எங்கள் பகுதியை சேர்ந்த மேலவை உறுப்பினர் திரு. வி. வெங்கா மற்றும் 227 அறையில் மேலவை காங்கிரஸ் உறுப்பினரும், மிகச் சிறந்த சிந்தனையாளருமான பூதலுர் திரு. எம். ஆறுமுகசாமி ஆகியோரின் அறைகளில் ஏதாவது ஒன்றில்தான் தங்குவார். எப்பொழுது வந்தாலும் குறைந்தது ஒருவார காலம் தங்கிவிட்டு போவார். அப்படி அறை எண்.227 இல் தங்கும்போது தான் தியாகி திரு. எஸ்.ஏ. ரஹீம், திரு. ஏ.ஆர். மாரிமுத்து, திரு. தஞ்சை ராமமூர்த்தி, திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், திரு. கே. ஜெகவீரபாண்டியன் மற்றும் இன்றைய காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோருடன் 1970களில் என் தந்தைக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லோரும் அந்த அறையில் அமர்ந்து தீவிரமான அரசியல் கொள்கை பறிமாற்றங்களை விவாதங்கள் மூலம் நிகழ்த்துவார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்தே உணவு அருந்துவார்கள். அதையெல்லாம் பல நேரங்களில் கூட இருந்து உன்னிப்பாக கவனித்திருக்கிறேன்.
அதைத் தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ., படித்த போதும், சட்டக் கல்லூரியில் படித்தபோதும் வெளியில் அறை எடுத்து தங்கி தான் படித்தேன். அப்போது, பெரும்பாலான நேரங்களில் சோசலிச சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் பூதலூர் திரு. எம். ஆறுமுகசாமி அவர்கள் பேசுவதை மணிக்கணக்கில் கேட்டு அவரோடு உணவருந்தி, நாள் முழுவதையும் கழிப்பது எனது வழக்கமாகவும் இருந்தது. அத்தகைய சந்திப்புகள் தான் இன்றைக்கு என்னை அரசியல் ரீதியாக அறிவுபூர்வமாக வளர்த்திருக்கிறது.
என் தந்தைக்கு எப்பொழுதுமே பிறருக்கு உதவி செய்கிற சேவை மனப்பான்மை உண்டு. அவருக்கு மிக நெருங்கிய நண்பரான கும்பகோணம் தியாகி எஸ்.ஏ. ரஹீம் ஒருமுறை என் தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது, ‘சிபாரிசுகளை ரெட்டியார் வலிய ஏலத்தில் எடுப்பார்’ என்று கிண்டலாக குறிப்பிடுவார். சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வருகிற அறிமுகமில்லாத ஒருவர் தனக்கு இந்த அதிகாரியிடம் வேலை நடக்க வேண்டுமென்று கூறினால், என் தந்தை உடனே அந்த அதிகாரி எனக்கு மிகவும் வேண்டியவர், நீங்கள் என்னோடு வாருங்கள் என்று சொல்லி, அந்த அதிகாரியிடம் நேரில் அழைத்துச் சென்று அந்த பணியை தனது சொந்த செலவிலேயே முடித்து கொடுக்கிற இயல்பு கொண்டவராக இருந்தார். மணியக்காரராக பணியாற்றியதால் வருவாய்த்துறையில் நிறைய தொடர்பு உள்ளவர். அமைச்சர்களால் முடியாததை அதிகாரிகள் மட்டத்திலேயே முடித்து கொடுக்கிற ஆற்றல் பெற்றவராக இருந்ததால் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார்.
என் தந்தை 18 வயதில் கதராடை அணிய ஆரம்பித்தார். 91 வயது வரை கதர் துணியைத் தவிர வேறு ஆடையை அணிந்ததில்லை. சலவை செய்த உடையை அணிவதில் மிகுந்த கவனத்தை செலுத்துவார். மிகுந்த கம்பீர உடைத் தோற்றத்தோடு மிடுக்காக வலம் வந்து கொண்டிருந்த அவர், பரவலாக பலதரப்பட்ட மக்களிடம் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றார். என் வீட்டில் நடைபெற்ற எனது திருமணம் உட்பட 3 திருமணங்கள் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஆபட்ஸ்பரி(Abbotsbury) திருமண மண்டபத்தில் தான் நடந்தது. சாதாரண விவசாய குடும்பத்தைச் சார்ந்த என் தந்தை சக்தியை மீறி பரந்த அரசியல் நட்பு, தொடர்பு காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் அந்த காலத்தில் ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில் தான் எங்கள் குடும்ப திருமணங்கள் நடைபெற்றது.
என் தந்தை வாழ்ந்த காலத்தில் அவரால் சென்னையில் சொத்து எதுவும் வாங்க முடியவில்லை. அதற்குரிய வருமானத்தை விவசாயத்தில் சம்பாதிக்க முடியவில்லை. அதைப்போலவே, எம்.ஏ., பி.எல். படித்து வழக்கறிஞராக பணிபுரிந்து சம்பாதிக்க வேண்டிய தொழிலை கைவிட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர காங்கிரஸ் ஊழியராக இருக்கிற என்னால் சென்னை நகரத்தில் என் பெயரில் குண்டுமணி சொத்து கூட இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. சொத்து சேர்க்க வேண்டுமென்று தீவிர முயற்சி எதையும் செய்ததும் இல்லை. இன்றைக்கு எனக்கு இருக்கிற ஒரே சொத்து காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் களத்தில் ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் சிறப்பாக பங்கேற்கிறார் என்ற பாராட்டுகளையும், நன்மதிப்பையும் தமிழகம் முழுவதும் பெற்றதையே பெருமையாக கருதுகிறேன். மாற்றுக் கட்சியினரின் நன்மதிப்பையும் நிரம்பவே பெற்றுள்ளேன்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் தமிழக அரசியலில் நான் வெளியிட்ட ஜவஹர்லால் நேரு, காமராஜர் உள்ளிட்ட பல நூல்கள் என் வாழ்நாளுக்கு பிறகும் எனது பெயரை நிச்சயம் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் இதைப்போல சாதிக்க வேண்டிய பணிகள் சில உள்ளன. இதுவே எனது வாழ்வின் இலக்கு!
எனவே, என் வாழ்வின் லட்சியம் என்று எதைக் கருதினேனோ அதை நோக்கிய எனது பயணம் 70 வயதிற்குப் பிறகும் இன்னும் வேகமாக பயணித்துக் கொண்டிருப்பேன் என்பதை என் தந்தையின் நினைவுநாளில் உறுதியோடு கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியில் இறுதி மூச்சு வரை எனது பணிகளை தொடருவேன்.
‘போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே’
என்று எனக்கு பிடித்த கவிஞர் கண்ணதாசன் வரிகளை நினைவுபடுத்தி என் தந்தையின் நினைவுநாளில் எனது மனம் திறந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகள்.
அன்பன்,
ஆ. கோபண்ணா
குறிப்பு : எனது தந்தை திரு. ஆதிராகவ ரெட்டியார் அவர்களின் மேலே உள்ள நிழற்படங்கள் மூலம் அவரது காலச்சுவடுகளை அறிந்து கொள்ளலாம்.
கட்டுரையைப் படித்ததும் எனக்குள்ளும் சில நம்பிக்கை துளிர்த்தன. இந்த 2022ஆம் ஆண்டு மிகவும் உற்சாகமும் நம்பிக்கையையும் ஊற்றெடுக்கும் என்பதில் ஐய்யமில்லை. நான் விட்டுச் சென்ற சென்னை வாழ்வும், ஒரே குடும்பமாய் நாம் இருந்த வனப்பும் மீண்டும் தொடர்ந்து இன்னும் பல நற்காரியங்கள் தங்கள் மூலம் நிறைவேறும், நிறைவேற்றுவோம் என உற்சாகம் ஊற்றொடுக்க விடியும் தை முதல் நாள் மீண்டும் நா(ம்)ன் பிறப்பெடுத்த நாளாய் எண்ணி காத்திருக்கிறேன். நாளை விடியும், நாளும் விடியும்.
Thank you Selvakumar!
இரத்தின சுருக்கமான மிக தெளிவான சிறந்த பதிவு. ஒரு மகன், தன் தந்தை பற்றிய நினைவுகளை பதிவு செய்யுவது அபூர்வம். காலத்திற்கும் இது இருக்கும்.
ரத்தின சுருக்கமான அதே நேரத்தில் மிகத்தெளிவான பதிவு. ஒரு மகனாக, தன்னுடைய தந்தையின் நினைவுகளை பகிர்வு என்பது ஆபூர்வமாகிவிட்ட இந்த நேரத்தில் இந்தப்பதிவு நிச்சயம் அவருக்குண்டான பெருமையே. விஞ்ஞானயுகத்தில் இந்த பதிவு என்றும் இருக்கும்.
பல வருடங்கள் ஆளும் கட்சியாக மத்தியில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற நபராக இருந்த தங்களின் தந்தையை போலவே கட்சிக்காக மட்டும் உழைத்து சொத்து சேர்க்காத மனிதர்களில் தாங்களும் ஒருவர் என்பது என்னுடைய எண்ணம்.
வாழ்த்துகள் சார்.
Thank you Jahir Hussain!
Man of Principles.
No like or fille with others.
Award true people who works with devotion.
Despite wrong comments on him, try to help him with open heart.
This I felt in association with TNCC vice President Shri.A.Kobanna.
Always I like him the way he handles the leaders ,party. Workers and functions without any hesitation s.
I mever seen him outbursted in any occasions.
Always calm.
He don’t have desires and never go in a wrong parh and also lead others.
I learnt lot from him.
I like him very much.
Thank you Sindhai J Sekar!
No doubt Mr A Goppanna definitely a tireless comrade…. After reading the above article I could understand the background from where this emerged…
A royal solute to him and his father 🙏🙏🙏
Thank you Vijay Anand!
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.,
தங்களின் கடிதம் மூலம் அக்கால அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் மட்டற்ற மகிழ்ச்சி. இப்பொழுது அது போல் நடக்கமா…!? நடக்க வேண்டும் என்பது எனது நியாயமான சாத்தியமற்ற ஆசை.
மேலும் இதன் மூலம் தங்களின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் கட்சியின் நடவடிக்கை பற்றியும் நமது இயக்கத்தின் பல தலைவர்களின் பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி.