1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவு கூறுகின்ற வகையில் நவம்பர் 2009 தேசிய முரசு இதழில் வெளிவந்த கட்டுரையை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம். உலக வரலாற்றில் சாதனைகளை புரிந்த வங்கதேச விடுதலை குறித்து 50 வது ஆண்டு பொன்விழா நேரத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களை போற்றுகின்ற வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கிறது. இதனை காங்கிரஸ் நண்பர்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். – ஆ.கோபண்ணா
லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்தது. இந்தப் போரில் ரஷ்யா தலையிட்டு ‘தாஷ்கண்ட் ஒப்பந்த’த்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போரில், இந்தியாவின் வெற்றி, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிமீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில் மாரடைப்பால் லால்பகதூர் சாஸ்திரி காலமானார்.
இதையடுத்து இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி பொறுப்பேற்றார். பாகிஸ்தான் ராணுவத்தில், கிழக்குப் பாகிஸ்தானியரின் பங்கு மிகக்குறைவாக இருந்தது. மத்திய அரசு பணிகளில் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 84 சதவிகிதத்தினரும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 16 சதவிகிதத்தினரும் இருந்தனர். அதேபோல, ராணுவத்தில் 90 சதவிகிதத்தினர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில், கிழக்குப் பாகிஸ்தானில் விளைந்த சனல் மூலமாக 70 சதவிகித் வருமானம் கிடைத்து வந்தது. 1950இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.288 ஆகவும் மேற்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் ரூ.357 ஆகவும் இருந்தது. ஆனால், 1970இல் கிழக்குப் பாகிஸ்தானில் தனிநபர் வருமாளம் ரூ. 331 அளவுக்குத் தான் உயர்ந்தது. ஆனால் மேற்குப் பாகிஸ்தான் மக்களின் தனிநபர் வருமானம் அதிகமாக உயர்ந்திருந்தது. இந்த வகையில், கிழக்குப் பாகிஸ்தான் மக்களைச் சுரண்டுவதன் மூலமாக, ராணுவ அரசுதான் மேற்குப் பாகிஸ்தான் மக்களைக் காப்பாற்றி வந்தது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் ஆயுப்கானின் ஆட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை, அந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே அந்த நாட்டுமக்கள் கருதினர். இந்தத் தோல்விக்குக் காரணம் ஆயுப்கான் தான் என்று நம்பினர். அங்கு ஏற்பட்ட விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றன மக்களை வாட்டிவதைத்தன ராணுவ ஆட்சியில் அதிருப்தியடைந்த மக்கள், கொந்தளிப்பான மனநிலையில் இருந்தனர், ‘பாகிஸ்தான் மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும்’ என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. இத்தகைய உணர்வு மேற்குப் பாகிஸ்தானில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பாகிஸ்தான் முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். பாகிஸ்தான் முழுவதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்தனர்.
பாகிஸ்தான் பிரிவினையை மகாத்மா காந்தி உள்ளிட்ட அளைத்துத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி ஆட்சி செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமில்லாத பூகோள நிலப்பரப்பைப் பிரிவினையின் மூலம் அந்த நாடு பெற்றது. இந்தியாவிற்கு மேற்கில் ஒரு பகுதியும். கிழக்கில் ஒரு பகுதியும் என 1500 மைல்கள் இடைவெளியில் அந்த நாடு உருவானது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் கிழக்குப் பாகிஸ்தானிலும், 40 சதவிகிதம் பேர் மேற்குப் பாகிஸ்தானிலும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மக்கள் தொகை விகிதாச்சாரத்தைமீறி அரசு நிர்வாகத்திலும் ராணுவத்திலும் மேற்குப் பாகிஸ்தானியர் ஆதிக்கம் செலுத்தியதை வங்காள முஸ்லிம்களான கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களாக இருந்தாலும், இவர்கள் தாய்மொழி வங்காளமாகும். மேற்குப் பாகிஸ்தானியரின் தாய்மொழியான உருதுமொழியை ஆட்சி மொழியாகக் கிழக்குப் பாகிஸ்தானியர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில், 17.1.1971இல் நடைபெற்ற பொதுத் தேர்தலைக் கிழக்குப் பாகிஸ்தானியர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பாகக் கருதினர். ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் கிழக்குப் பாகிஸ்தானில் போட்டியிட்ட அவாமி லீக் கட்சி, அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.
அதேபோல தேசிய பார்விமெண்ட் தேர்தலில், மொத்தம் இருந்த 313 இடங்களில், 167 இடங்களில் அவாமி லீக் வெற்றி பெற்றது. மேற்குப் பாகிஸ்தானில் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 122 இடங்களில் போட்டியிட்டு 82 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற அரசியல் கட்சிகள் 58 இடங்களில் வெற்றி பெற்றன. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், முஜிபூர் ரஹ்மானே அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துப் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். இதைப் பூட்டோவும் ராணுவ ஆட்சியும் ஏற்க விரும்பவில்லை. அதேபோல, கிழக்குப் பாகிஸ்தான் மாகாண சட்டசபைத் தேர்தலில் ஷேக் முஜிபூர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மொத்த இடங்களான 310 தொகுதிகளில் போட்டியிட்டு, 298 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு முதலமைச்சராகும் வாய்ப்பு அவாமி லீக் கட்சிக்குத்தான் இருந்தது.
பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த முஜிபூர் ரஹ்மான், ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் முயற்சிகளை எதிர்த்துக் கிழக்குப் பாகிஸ்தானில் கடுமையான கலவரம் வெடித்தது. இதை அடக்குவதற்குப் பாகிஸ்தான் ராணுவம் பெருமளவில் கிழக்குப் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. முஜிபூர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். பிறகு, மேற்குப் பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு, கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் பயங்கரமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்துக் கிழக்கு வங்க இளைஞர்கள், ஆயுதமேந்தி ‘முக்தி பாஹிணி’ என்ற அமைப்பினை உருவாக்கிப் போர்புரியத் தொடங்கினர். எனவே, கிழக்குப் பாகிஸ்தாளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இந்த உள்நாட்டுப் போரில் இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் முஜிபூர் ரஹ்மானுக்கே இருந்தது. தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் வெற்றிபெற்ற கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல், அடக்கி ஒடுக்கும் ஜனநாயக விரோதச் செயலை இந்தியா கடுமையாகக் கண்டித்தது.
கிழக்குப் பாகிஸ்தானில் ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள், அகதிகளாக ஆயிரக்கணக்கில் நாள்தோறும் இந்தியாவுக்கு வரத்தொடங்கினர். இவர்களை மனிதாபிமானத்துடன் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது. இப்படி அகதியாக வந்தவர்கள் ஒருகோடி பேருக்கும் அதிகமாக இருந்ததால், இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது கிழக்குப் பாகிஸ்தானில் ஆயுதமேந்திப் போராடிய முக்தி பாஹிணி படையினர், கிழக்குப் பாகிஸ்தானைச் ‘சுதந்திரமான பங்களாதேஷ்’ நாடாகப் பிரகடனம் செய்தனர். கிழக்குப் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமைக்கப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக இந்தியா தன்னுடைய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் கொடுத்தன. ஆனால் இது, வேறு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், பல மாதங்கள்வரை பிரதமர் இந்திராகாந்தி பொறுமையைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால் அதே நேரத்தில், ஒருகோடி அகதிகளைப் பராமரிக்க வேண்டிய பெருஞ் சுமை இந்தியாவிற்கு இருப்பதையும் இந்திரா காந்தி உணர்ந்திருந்தார்.
‘கிழக்குப் பாகிஸ்தானில் நடைபெறுகிற மனிதப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு உலகம் சும்மா இருக்கக்கூடாது’ என்றும் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அபிப்பிராயத்தைத் திரட்டுவதற்காக இந்திராகாந்தி 20 நாட்கள் உலகநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிற சர்வாதிகார ஆட்சியின் நடைமுறைகளை எதிர்கொள்வதற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று அமைதி, நட்புறவு ஒப்பந்தத்தில் இந்திராகாந்தி கையெழுத்திட்டார். இது, இந்திராகாந்தியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் படையெடுப்பு நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா பெற்றது.
பாகிஸ்தானின் ராணுவத் தளவாடத் தேவையின் பெரும் பகுதியை அமெரிக்காவும் கணிசமான பகுதியைச் சீனாவும் வழங்கிப் பூர்த்திசெய்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா ராணுவத் தலையீடு செய்தால், அமெரிக்காவும் சீனாவும் அதன் உதவிக்கு வரக்கூடும். இதையெல்லாம் எதிர்பார்த்தே இந்திராகாந்தி சோவியத் யூனியனோடு நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வங்க தேசப் பிரச்சினையில் உலகத்தின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் பிரதமர் இந்திராகாந்தி மத்திய அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். குறிப்பாக, சர்தார் ஸ்வரன் சிங், கே.சி.பந்த், ஒய்.பி.சவான், ஜெகஜீவன்ராம் ஆகியோர் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சரான கிஸ்ஸிங்கர் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். ‘முஜிபுர் ரஹ்மானை விடுதலை செய்வதும், கிழக்குப் பாகிஸ்தான் பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காண்பதுமே நிலைமையைக் கட்டுப்படுத்தும் என்று கிஸ்ஸிங்கரிடம் இந்திரா காந்தி எடுத்துச் சொன்னார். கிழக்கு வங்க மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் நிலை உருவாகுமென்றும் இந்திராகாந்தி வாதிட்டார். அதேசமயம், எந்த நேரத்திலும் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் இந்திராகாந்தி ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் திடீரென்று இந்திய விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் இந்திராகாந்தி கல்கத்தாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். செய்தி கிடைத்தவுடன் பேச்சை முடித்துக் கொண்டு டெல்லிக்கு இந்திய ராணுவ விமானத்தில் பயணமானார். போர் விமானங்கள் பாதுகாப்பளிக்க விமானத்தில் டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டு, பாகிஸ்தான்மீது போர் தொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய ராணுவம் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் புகுந்தது.
இந்தியாவின் கவனத்தை மேற்குப் பக்கம் திருப்ப, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையைத் தாக்கியது. அந்தத் தாக்குதல் இந்தியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. இந்தியப் படை, கிளர்ச்சிக்காரர்களின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தானின் தலைநகரான டாக்காவை நோக்கி முன்னேறியது. அமெரிக்கா – இந்தியாவிற்குக் கொடுத்துவந்த பொருளாதார ராணுவ உதவி அனைத்தையும் நிறுத்திக்கொண்டது. அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஏழாவது கடற்படை (7th Fleet), இந்தியப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் சிட்டகாங் அருகே வங்காள விரிகுடாவில் முகாமிட்டது. அமெரிக்கா ஏழாவது கடற்படையின் அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, டாக்கா நகர் நோக்கி முன்னேறும்படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. சோவியத் யூனியனின் கடற்படை இந்தியாவிற்கு உதவியளிப்பதற்காக வங்காள விரிகுடாவிற்கு விரைந்தது. சோவியத் அமைச்சர் ஒருவர், டெல்லிக்குப் பறந்து வந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தார். சீன – அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பளிக்கும் வாக்குறுதியைச் சோவியத் யூனியன் பகிரங்கமாக அறிவித்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் மேனக்ஷா தலைமை தாங்கினார். பிரதமர் இந்திராவும், மேனக்ஷவும் அடிக்கடி சந்தித்து போர் வியூகங்களை நடத்தினர். 13 நாளே நடந்த இந்த போரில் பாக்கிஸ்தான் படைகள் சுற்றிவளைக்கப்பட்டன. சரணாகதி அடைவதற்கு அவர்களுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் நாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணாகதி அடைந்தார்கள். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் போர் வீரர்களும் பல்லாயிரக்கணக்கில் போர்க் கைதிகளாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்திராகாந்தியின் ராஜதந்திரத்தாலும் ராணுவ நடவடிக்கையாலும் பங்காளதேஷ் {வங்கதேசம்) என்கிற புதிய நாடு உதயமாயிற்று| அதிபர் யாஹியாகான் ராஜினாமா செய்தார். எஞ்சியிருந்த மேற்குப் பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பைப் பூட்டோ ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தான், ‘பங்காளதேஷ்’ என்கிற ‘சுதந்திர தேசமாக உருப்பெற்றது.” உணர்ச்சி மட்டும் ஒரு தேசத்தை உருவாக்கப் போதுமானதன்று என்கிற உண்மை மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிருபிக்கப்பட்டது மதவெறியால் உருவான நாடு ஒன்று வன்முறைக்குப் பலியாகி, சுதந்திரம் பெற்ற 24 ஆண்டுகளில் இரண்டு தேசங்களாகப் பிளவுபட்டது! ஜின்னாவின் ராஜதந்திர படுதோல்விக்குப் பங்களாதேஷின் உதயம் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.
இந்திராகாந்தியைப் பொருத்தவரையில் இந்தச் சாதனையை ஒரு மகத்தான சாதனையாகத்தான் கருதவேண்டும் பங்களாதேஷை உருவாக்கியதன்மூலம் பாகிஸ்தானின் பலத்தை அவர் கணிசமாகக் குறைத்தார் என்பது மிகையன்று. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்கு இந்தியா பணியாது என்பதையும் உலகுக்கு நிருபித்துக் காட்டினார் அவர்! பங்களாதேஷ் விடுதலைப் போருக்குப் பிறகு, சர்வதேச அரங்கில் இந்திராவின் மரியாதை கணிசமாக உயர்ந்தது என்பதில் சந்தேக மில்லை “இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை அலட்சியப்படுத்திவிட்டு, தெற்கு ஆசியாவில் எதுவும் செய்வது சாத்தியமில்லை” என்கிற கருத்தைக் கிஸ்ஸிங்கர் பகிரங்கமாகவே வெளியிட்டார்.
“பங்களாதேஷ் போருக்குப் பிறகு இந்தியா ஒரு ராணுவ வல்லரசாக உருவாகிவிட்டது என அமெரிக்க நிபுணர்கள் அங்கீகாரம் அளித்தார்கள். அதேசமயம், இந்திய ராணுவம் மகத்தான வெற்றிகளைக் குவிக்கின்ற நிலையிலும் நிதானத்துடன் முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயல்படக் கூடியது என்பது நிருபணமாயிற்று. இந்திய ராணுவம் விரும்பியிருந்தால், லாகூரைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், அரசியல் ரீதியாக இந்திய அரசு இந்தப் பிரச்சினையினை அணுகியதால், லாகூரைக் கைப்பற்றும் நோக்கத்தை விட்டுவிடும்படி பிரதமர் சொன்ன ஆலோசளையை, இந்திய ராணுவத் தளபதிகள் தங்களின் விருப்பத்துக்கு மாறாக ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டு பங்களாதேஷின் பிரதமராளார்; விடுதலையான முஜிபுர் ரஹ்மானுக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று இந்தியக் குடியரசு தினம் புதிய உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. இந்திராகாந்தி, டாக்காவிற்குச் சென்றபோது, ஒரு வீராங்கனைக்குரிய வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, பாகிஸ்தானிய யுத்தக் கைதிகளை விடுவிப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. இந்திராகாந்தியும் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவும் சிம்லாவில் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
சிம்லா மாநாடு முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே பங்களாதேஷை ஒரு சுதந்திர நாடாகப் பாகிஸ்தான் அங்கீகரித்தது. பங்களாதேஷ் வெற்றி, இந்திராவின் அரசியல் வரலாற்றில் ஒரு புகழ்மிக்க அத்தியாயத்தைச் சேர்த்திருந்தாலும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட யுத்தத்தினாலும் 90 லட்சத்திற்கு மேற்பட்ட பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவிற்கு வந்ததாலும் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவிற்குப் பாதித்தது.
வங்கதேச வெற்றிக்கு பிறகு அன்றைய எதிர்கட்சித் தலைவர் வாஜ்பாய் அவர்களால் அன்னை இந்திரா காந்தி “துர்கா தேவி” என்று அழைக்கப்பட்டார். இந்திய மக்கள் இந்திரா காந்தியை மிகச்சிறந்த வீராங்கனையாக போற்றினர். இதன் மூலம் இந்தியாவின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. வங்கதேச வெற்றியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திராவின் புகழ் பாடுவோம்.