சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைத் திங்களில் பொங்கல் திருநாளுக்கு முன்பு அறுவடை செய்து, மாடுகளுக்கும் நிலத்துக்கும் நன்றி செலுத்தி, மாசி மற்றும் பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில் ஆற்றங்கரையில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.
இளைய வயதினருக்கும் இந்த சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என் இலக்கியம் கூறுகிறது. ‘சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன’ என்றும், ‘இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்’ என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
உழைப்பு மற்றும் கொண்டாட்டத்துடன் சித்திரை திருநாளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சித்திரை திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழு நிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும் பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.
அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் என்பதால், சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும்.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானிலை ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலப் பகுதியாகும். சூரியனை, பூமி சுற்றிவர 365 நாட்கள் 6 மணி, 11 நிமிடங்கள், 48 வினாடிகள் ஆகிறது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவாகும்.
வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இதனை உணர்த்தும் வகையில், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடியை தமிழ் புத்தாண்டில் உண்பது தமிழர்களின் வழக்கமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
வழுக்கு மரம் ஏறுவது, வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக் கூத்து ஆகியவை இன்றைக்கும் இலங்கையில் தமிழர்கள் சித்திரை முதல் நாள் அன்று கொண்டாடுகின்றனர்.
இப்படி சித்திரை மாதத்தை தமிழர்கள் இன்று வரை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதையும் தலைமுறை தலைமுறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், சமீப காலமாகத் தமிழர்கள் மீது கலாச்சார, பண்பாட்டுப் படையெடுப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது. இதனை ஜனநாயக ரீதியாக மக்கள் போராடி முறியடித்தும் வருகிறார்கள். அதோடு, தமிழர்களின் எதிரிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குரிமை மூலம் ஒதுக்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளுக்கு எதிராக இந்த ஆட்சியாளர்கள் நடத்தும் போர், மனிதநேயமற்றது என்பதை உலக நாடுகளே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்தை ஆண்டவர்களும் 10 ஆண்டுகளாக வாய் மூடி மவுனமாகிப் போனார்கள். தமிழ் மண்ணை அழிக்க முயன்றார்கள். மொழியை அழிக்க முயன்றார்கள். அதன்பின் தமிழர்களையே அழிக்க முயல்கிறார்கள். நீட், உதய் மின் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் மற்றும் 8 வழிச்சாலை என மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து, அதன்மூலம் தமிழக மக்களையும் அழிக்கும் முயற்சியில், அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பா.ஜ.க.வினர் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதைத் தமிழர்கள் அறிவார்கள்.
தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அத்துனை துன்பங்களுக்கும் இந்த தேர்தல் பதில் தரும் வகையில் மக்கள் மத்தியில் எழுச்சியைப் பார்க்க முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விடியலைத் தேடி சித்திரை திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தோம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர்களுக்கான ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் அளித்துள்ளனர். இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்கள் இழந்த உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வை சூழ்ந்திருந்த இருள் அகன்று ஒளி பிறக்க, தமிழ் புத்தாண்டை சிரம் தாழ்த்தி வரவேற்போம்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!