கொரோனா பரவலையடுத்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் அம்பானி, அதானி தவிர அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர். வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை தான் கொடுமை. பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இதில் விபத்துகளில் சிக்கியும், உடல் நலிவுற்றும் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், 54 வயது பெர்ஜோம் பாம்டா பஹாடியா என்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் டெல்லியிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்டு, கடந்த 13 ஆம் தேதி ஜார்கண்டில் உள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
டெல்லியிலிருந்து ஜார்கண்டில் உள்ள அமர்பிதா என்ற அவரது கிராமத்துக்கு 1,200 கி.மீ நடந்தே வந்துள்ளார். இது குறித்து பஹாடியா கூறும்போது, ” இடைத்தரகர்கள் சிலர் எங்கள் கிராமத்துக்கு வந்து, நல்ல சம்பளம் வாங்கித் தருகிறோம் என்று டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். நான் உட்பட 10 பேர் அவர்களை நம்பிச் சென்றோம். 20 நாட்கள் தான் வேலை பார்த்தேன். தங்குவதற்கு இடமும் 2 வேளை சாப்பாடும் போட்டார். ஆனால், சம்பளம் தரவில்லை. மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவித்ததும், நான் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரூ.7 ஆயிரம் பணத்தையும் ஆதார் அட்டையையும் பறித்துக் கொண்டு என்னை வெளியே துரத்திவிட்டார். ஆகஸ்ட் மாதம் வரை தெருவிலேயே படுத்து உறங்கினேன். ரயிலில் செல்லக்கூடக் கையில் பணம் இல்லாததால் நடக்க ஆரம்பித்தேன். வழிநெடுகிலும் பிச்சை எடுத்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் உணவு இல்லாமல் பசியால் தவித்தேன். ரயில் பாதை வழியாகவே தொடர்ந்து நடந்தேன்.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி தன்பாத் மாவட்டம் மஹுதா ரயில் நிலையம் அருகே பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த என்னைச் சிலர் மீட்டனர். அவர்கள் எனக்கு உடையும் உணவும் வாங்கிக் கொடுத்ததோடு, சொந்த ஊருக்குத் திரும்ப அவருக்குப் பணமும் கொடுத்து உதவினர். அவர்கள் உதவியுடன் ஒருவழியாகக் கடந்த மார்ச் 13 ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.
பஹாடியா என்ற ஒருவர் மட்டுமல்ல…லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட்ட ஒரு பிரதமரால் சொந்த நாட்டு மக்கள் எவ்வளவு சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.