மவுலானா அபுல் கலாம் ஆசாத் இந்த உலகைவிட்டுப் பிரிந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அவரது செய்தி, இந்த காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.
மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை முதல் முறை சந்தித்தபோது நான் சிறுமியாக இருந்தேன். ஈத் வாழ்த்துச் சொல்வதற்காக, டெல்லியில் கிங் எட்வர்ட் சாலையிலிருந்த ஆசாத் வீட்டுக்கு என் தந்தை அழைத்துச் சென்றார். சிகரெட் பெட்டியை பக்கத்தில் இருக்க, சோபாவில் அமர்ந்தவாறு அவரது உதிர்த்த புன்முறுவல் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள் எழுதப் போகிறோம் என்பதையும், அதற்காக வாழ்நாளில் பாதியை செலவழிக்கப் போகிறோம் என்பதையும் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவரது 63 ஆவது நினைவு தினம் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது, 21 ஆம் நூற்றாண்டின் அவரது தேவையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். சுதந்திரப் போராட்டத்தின்போது உயர்ந்த தலைவராக இருந்தவர். மகாத்மா காந்திக்கு தோள் கொடுத்தவர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஆசானாக இருந்தவர். தலைவர்களின் தலைவர் என்று நேருவால் வர்ணிக்கப்பட்டவர். இதெல்லாம் பெரிய விஷயமல்ல…
இன்றைக்கு இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் பெரும் நோயான வகுப்புவாத வைரசை குணப்படுத்தும் மருந்து அவரிடமிருந்தது. என் நாட்டின் நாட்டின் உடல் உறுப்புகளுக்குள் வகுப்புவாத வைரஸ் பரவிவிட்டதாகவும் அதனைக் குணப்படுத்த வேண்டும் என்றும் அப்போதே தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நம்மைத் தாக்கிய கொரோனா வைரசை விட, வகுப்புவாத விஷம் கொடியதாக இருந்திருக்கிறது.
இந்து-முஸ்லீம் ஒற்றுமை :
1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக இருந்த ஆசாத் பேசிய வார்த்தைகளைக் கேட்டால், தேசவிரோதிகள் என்று சொல்லி பயமுறுத்தும் தைரியம் யாருக்கும் வராது.
அவரது வார்த்தைகள் இங்கே…
” பரலோகத்திலிருந்து குதித்து வந்த தேவதை, குதுப்மினாரின் உச்சியில் அமர்ந்து கொண்டு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை கொள்கையைக் காங்கிரஸ் கைவிட்டதாக அறிவித்தால், 24 மணி நேரத்தில் சுதந்திரம் கிடைத்தாலும், அதனை ஏற்க மாட்டேன். சுதந்திரத்துக்கு விலையாக நமது ஒற்றுமையைக் கைவிடுவது எல்லோருக்கும் ஆபத்தானதாகும்” என்று எச்சரித்தார்.
ஆசாத்தின் இந்து-முஸ்லீம் ஒற்றுமை இயக்கம் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. கொல்கத்தாவில் தந்தையின் கண்டிப்பில் வளர்ந்தார். தன் தந்தையைப் பின்பற்றாமல், 17 வயதிலேயே கொரில்லா இயக்கத்தினருடன் ரகசியமாகப் பங்கெடுத்தார். ராஷ் பெஹாரி கோஷ் மற்றும் ஷ்யாம் சுந்தர் சக்கரவர்த்தி போன்ற புரட்சியாளர்களுடன் கை கோர்த்தார்.
1912 ஆம் ஆண்டில் தமது 24 வயதில், அல் ஹிலால் என்ற வாராந்திர பத்திரிக்கையைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்துக்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, முஸ்லீம்களை அவர் பத்திரிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக இந்துக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக குரானிலிருந்த சில வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், ஆசாத்தை முஸ்லீம் தலைவர் என்றே அழைத்தனர். அவர் ஒரு சமுதாயத்துக்கான தலைவர் அல்ல. அவர் அனைத்து இந்தியர்களுக்கான தலைவர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் முன்பு நின்று கொண்டு, தமது கொள்கைகளாலும், பேச்சுத் திறமையாலும் அவர்களை வசீகரிக்கக் கூடியவராக இருந்தவர்.
பொதுவான தேசியம்:
1946 ஆம் ஆண்டு, மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராம்கர் மாநாட்டில் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ஆற்றிய உரை, பல கலாச்சார கலவைகளிலிருந்து இந்தியா என்ற வண்ணமயமான கட்டமைப்பை உருவாகியுள்ளதாகச் சிறந்த உதாரணத்தைக் குறிப்பிட்டார்.
” இந்து என்ற முறையில் ஒருவர், ‘தான் இந்தியன் என்றும் இந்து என்றும் பெருமையுடன் சொல்லலாம். அதேபோன்று சரிசமமாக, ‘நாங்கள் இந்தியர்கள் என்றும் இஸ்லாமை பின்பற்றுகிறோம்’ என்றும் முஸ்லீம்கள் பெருமையுடன் கூறலாம். கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்களும் தாங்கள் இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டார். வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கான கூட்டு வாழ்க்கையைப் பற்றி அவர் பேசினார். ”கற்பனையாகவோ, செயற்கையாகவோ எங்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தவோ, வேறுபடுத்தவோ முடியாது” என்பதை உரக்கச் சொன்னார்.
உடைந்த தேசத்துக்கு சிகிச்சை:
ஆசாத் இன்றைக்கு இருந்திருந்தால், எடுக்கப்படும் பல அரசியல் நிலைப்பாடுகள் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். இன்றைய அரசியல் விளையாட்டுக்கு அதிகார வெறி என்று பெயர். ஆனால், அன்றைய காலகட்ட அரசியல், நிச்சயம் விளையாட்டாக இருந்ததில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில், அவர் நினைத்திருந்தால், விரும்பிய துறையைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் கல்வித் துறையைத் தேர்வு செய்தார். ஏனென்றால், உடைந்த தேசத்தின் வளர்ச்சிக்குக் கல்வி முக்கியமானது என்பதை அறிந்ததால் அவர் கல்வி அமைச்சரானார்.
இசை நாடகக் கலை, லலித் கலா காட்சிக் கலை மற்றும் இலக்கியத்துக்கான சாகித்யா என்ற 3 கல்விக்கூடங்களை உருவாக்க ஆசாத் உதவினார். உலகெங்கிலும் உள்ள பரஸ்பர கலாச்சாரத்திற்கான இந்தியக் கவுன்சிலை உருவாக்கவும் அவர் உதவினார். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானிய ஆணையம், அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சில், ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பொது நூலகங்கள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சராக இருந்தபோது உருவாக்கினார்.
வகுப்புவாத வெறுப்புகளால் இன்று இந்தியா பாதிக்கப்படுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில், விவசாயிகள் போராட்டம், அமைதியில்லாத மாணவர் சமுதாயம், தங்கள் ஜனநாயக உரிமைகளைக் குடிமக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காலனித்துவ வரலாற்றை நாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்டத்தில் வீரர்கள் தான் மாறியிருக்கிறார்கள். காலனி ஆதிக்கம் புதிய அவதாரம் எடுத்துள்ளது அவ்வளவுதான்.
டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் உள்ள எனது வீட்டில் அமர்ந்தவாறு இந்த பகுதியை நான் எழுதும்போது, இத்தகைய பிளவு சக்திகளை எல்லா இடங்களிலும் காண்கிறேன். இந்தியர்களின் ஒரு பகுதியினரின் குடியுரிமைப் பறிக்கும் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடியதால், ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்வி நிறுவனம் இன்று பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் வாயில்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆசாத் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார். அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட அவரது தீர்க்கதரிசனத்தை மறுத்ததில்லை. அவர் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற அறிவுரைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும்.
கட்டுரையாளர் : சயீதா (இந்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். ‘இந்தியாவின் மவுலானா அபுல் கலாம் ஆசாத்’ என்ற புத்தகத்தையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் முத்திரை உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியவர்.)