”தலைவர்கள் மக்களிடமிருந்து தான் உருவாகிறார்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல…”என்பதைப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது ராகுல் காந்தியின் தமிழகப் பயணம்.
இது ஒரு தலைமுறையின் வழக்கம் அல்ல. ஜவஹர்லால் நேரு,இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரும் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள். மக்களிடம் நெருங்கினால் தான் அவர்களது வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை உள்வாங்கியவர்கள். இதில் ராகுல் மட்டும் மாறுபடுவாரா என்ன?
தொழிற்துறையினர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களிடம் நெருங்கி, அவர்களுடன் பேசிய விதம் அவருக்கு இயற்கையாகவே அமைந்த பாசப் பிணைப்பைக் காட்டியது. பல ஆண்டுகளாகப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, கலங்கரை விளக்கமாக ராகுல் காந்தி தெரிகிறார்.
தமிழகத்தின் கலாச்சாரம்,தமிழர்களின் வாழ்வுரிமை,தமிழர்களின் பண்பாட்டை இந்த அளவுக்கு சமீபகாலமாக உரக்கச் சொல்லியவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவரது குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஊருக்கு ஒரு பேச்சு பேசும் அரசியல் வியாபாரி அல்ல அவர். தமிழகத்தில் திருக்குறளையும், மேற்கு வங்கத்தில் மார்க்ஸியத்தையும், நாக்பூரில் மதவாதத்தையும் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் உண்மை பேசும் ஒரே தலைவராக ராகுல் காந்தி மிளிர்கிறார்.
‘பஞ்சாபியர்களும் தமிழர்களும் சுயமரியாதை மிக்கவர்கள்’ என்று சொன்னார். மற்ற மாநிலத்தவர் வாக்குகள் போய்விடுமே என்று நினைக்கவில்லை. ஊருக்கு ஒரு வேடம் போட அவருக்குத் தெரியாது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் தொடங்கிய அவரது பயணம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவையான சம்பவம். இவ்வளவு எளிமையான தலைவரை, அதுவும் மிக அருகில், தங்களுக்காகக் குரல் கொடுத்துக் கட்டி அணைக்கும் தலைவரைத் தமிழக மக்கள் மிகவும் நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்.
‘ராகுல் என்று அழையுங்கள், சார் வேண்டாம்…’ என்ற சொன்ன போது, ‘எங்கள் ஊரில் பெரியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை…’ என்று ஒரு மாணவி கூறுகிறார். அதற்கு,’ ராகுல் அண்ணா என்று அழையுங்கள்’ என்கிறார். அங்கே மாணவிகள் எழுப்பிய கரவொலி அடங்க வெகுநேரமானது.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்தி, 12 ஆம் வகுப்பு படிக்கும் கிளாடிஸ் ருபெல்லாவுடன் மேடையிலேயே நடனம் ஆடினார். கேள்வி கேட்க ருபெல்லா தயாரானபோது, நீங்கள் என்னுடன் சேர்ந்து பாட விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று சிரித்துக் கொண்டே. உடனே பதில் அளித்த ருபெல்லா, ”நண்பர்களே! ராகுலுக்காக நான் பாட்டு எழுதியுள்ளேன். நான் பாடும்போது நீங்கள் நடனம் ஆடுகிறீர்களா?என்று கேட்டார். அதனை ராகுலும் ஏற்றுக் கொண்டார். ருபெல்லாவின் 3 தோழிகள் நடனம் ஆட மேடைக்கு வந்தனர். அப்போது ராகுல், ”ஒரு நொடி பொறுங்கள்”என்றார். மேடையைச் சுற்றிப் பார்த்தவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவையும் மேடைக்கு அழைத்தார்.
நான் மட்டும் தனியாக நடனம் ஆடினால் மோசமாக இருக்கும் என்று தெரிவித்த ராகுல், வலது பக்கம் ருபெல்லா தோழிகளின் கைகளைக் கோர்த்தும் வலதுபுறம் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டவர்களின் கையைப் பிடித்தவாறு காலை அசைத்தவாறு நடனம் ஆடினார். ராகுல் குறித்து ருபெல்லா பாடி முடிந்ததும், அங்கிருந்த மாணவ, மாணவிகள், ராகுல், ராகுல் என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
நன்றாகப் பாடினார் என்று ருபெல்லாவை பாராட்டிய ராகுல், ‘என் நடத்தை விட அவரது பாடியது சிறப்பாக இருந்தது’ என்றார். ருபெல்லா பாட்டுப் பாடுவதில் மாநில விருதைப் பெற்றவர் என்று கூறிய பாதிரியார் டோமினிக், நீங்களும் அருமையாக நடனம் ஆடினீர்கள் என்று ராகுலைப் பாராட்டினார்.
முன்னதாக, கருத்துச் சுதந்திரத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ராகுல் காந்தியிடம் ருபெல்ல கேள்வி எழுப்பினார். மற்றொரு சுதந்திரப் போராட்டத்துக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதா? என்றும் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல், ” ஆம். இந்தியாவுக்கு மற்றொரு சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது. அத்தகைய போராட்டம் வன்முறை அல்லாத நேசத்துடனான போராட்டமாக இருக்க வேண்டும் .நாடு முழுவதும் கோபமும் அச்சமும் விரிவுபடுத்தப்படுகிறது. அச்சம், கோபம், பிளவுபடுத்தும் சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்போது தான் மகிழ்ச்சியான, அச்சமில்லாத, ஒன்றுபட்ட இந்தியாவைக் காண முடியும்”என்றார்.
கடலில் குதித்தார் ராகுல், நடனம் ஆடினார் ராகுல். இந்த நிலையில், மெரோலின் என்ற மாணவி, நீங்கள் ‘புஷ் அப்’ எடுப்பீர்களா என்று கேட்டார். அந்த மாணவியையும் அழைத்து தன்னோடு சேர்ந்து ‘புஷ் அப்’ செய்யச் சொன்னார்.
அந்த மாணவியைவிட வேகமாக புஷ் அப் செய்தார் ராகுல். அதோடு ஒரு கையை தாங்கியவாறும் ‘புஷ் அப்’ செய்தார். இதனைப் பார்த்த அனைவரும் கரகோஷம் எழுப்பினர். பாதிரியார் டோமினிக் கட்டிப்பிடித்து ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தார். ராகுல் ப்ரூஸ்லீயைப் போல் செய்ததாகப் பாதிரியார் டோமினிக் கூறினார். மெரோலினை அழைத்து தன்னுடன் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ராகுலுடன் புகைப்படம் எடுக்கும் முன்பு, வறுமை ஒழிப்பு குறித்து சைஷானியா என்ற மாணவி கேள்வி எழுப்பினார். கடந்த மக்களவை தேர்தலில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவி வழங்கும் நியான் திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாகக் காங்கிரஸ் அறிவித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழித்திருப்போம்” என்றார்.
‘புதுக்கோட்டையில் உள்ள குறிப்பிட்ட சமையல் குழுவினருடன் இணைந்து சமையல் செய்ததில் முக்கிய காரணம் ஏதும் உண்டா?’ என ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த ராகுல், ”அந்த சமையல் குழுவினர் சுவாரஸ்யமானவர்கள். இவர்களைப் போல மற்ற குழுவினரின் உணவு, மொழி மற்றும் மாநிலத்தின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
ஓவியர் அசோக்கிடம் பயிற்சி பெற்ற 7 ஆம் வகுப்பு மாணவர் சன்னி வரைந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஓவியத்தை, ராகுலிடம் பாதிரியார் டோமினிக் நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ராகுல் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறியபோது, அந்த சூழல் இறுக்கமாக மாறியது.
மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் இதய சிம்மாசனத்திலும் ராகுல் இடம்பிடித்துவிட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் நடத்தும் உரையாடல்கள் மாற்றத்துக்கான விதைகளை தூவிக் கொண்டிருக்கின்றன. நல்லதை மக்கள் அறுவடை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.