வடசென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்கள் குறைந்து போனதால், மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் குறைந்த கட்டணத்தில் உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், சில ஆண்டுகளாக அம்மா உணவகங்களை மூடுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசும் மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் வடசென்னையில் அம்மா உணவகங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வடசென்னையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. இந்த உணவகங்களில் தினமும் குறைந்தது 2 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்தனர். இன்றைக்கு 100 பேருக்கும் குறைவானவர்களே சாப்பிடுகின்றனர். அதாவது, ஒரு அம்மா உணவகத்தில் ஒருவர் தான் சாப்பிடுகிறார். கொரோனாவின் போது அரசு இலவச உணவு வழங்கியதால் ஏற்பட்ட இழப்பும் அம்மா உணவகத்தை நடத்த முடியாமல் போனதற்குக் காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நேரத்தில் இலவசமாகச் சாப்பிட்ட மக்கள், இப்போது பணம் கொடுத்துச் சாப்பிடத் தயாராக இல்லை என்பதையும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சென்னையில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. ஒரு மண்டலத்துக்குக் குறைந்தது 2 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. பெரும்பாலான உணவகங்கள், குடிசைப்பகுதிகள், ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்ளே, டாஸ்மாக் மதுபானக்கடைக்கு அருகே இயங்குகின்றன. ஒரே உணவைத் தினமும் வழங்குவதால் வெறுத்துவிட்டதாக வடசென்னை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த 407 அம்மா உணவகங்களில், 200 உணவகங்களில் தினமும் 1,000 பேர் சாப்பிடுகின்றனர். இவற்றில், 100 அம்மா உணவகங்களில் 500 பேர் முதல் 700 பேர் சாப்பிடுகின்றனர். மீதமுள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களே வரவில்லை.
ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம், கேஸ் கட்டணம், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் என, ஒரு அம்மா உணவகத்தை நடத்த ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. ஒவ்வொரு உணவகத்திலும் 8 முதல் 12 ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்குத் தினமும் ரூ.300 வரை சம்பளம் வழங்கப்படுகிறது என்கிறார்கள் அதிகாரிகள். மாநகராட்சியின் தரவுகளின்படி, 2020&21 ஆம் ஆண்டில் இலவச உணவு வழங்கியது உட்பட மொத்தம் ரூ.83 கோடி அளவுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறும்போது,” அம்மா உணவகங்களை கம்பெனிச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என அரசு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்த முயன்று வருகிறோம். கம்பெனிக்கான கட்டமைப்பை அமைக்கவும், இயக்குனர்கள், பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய போர்டை உருவாக்கவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு இறுதியானவுடன், அம்மா உணவகங்கள் கம்பெனியால் நடத்தப்படும். உணவு வகைகளை மாற்றுவது, ஸ்பான்ஷர், நன்கொடை வழங்குவது போன்றவை செயல்பாட்டுக்கு வரும்”என்றனர்.