புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிப்ரவரி 22 ஆம் தேதி (திங்கள் கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி இதுதான்…
”பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா?”
ஒருவேளை 3 நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதித்தால், தேர்தல் அறிவித்ததும் காபந்து அரசாக செயல்படுவதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்த முடியும். இதன்மூலம் தனது தோழமை கட்சி தலைமையிலோ அல்லது தமது தலைமையிலோ ஆட்சி அமைத்து, தேர்தலில் அராஜகத்தை நிகழ்த்துவது தான் இவர்களது திட்டம்.
ஆனால், நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பற்றி சட்டம் சொல்வது என்ன?
” 16 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆளும் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும். நியமன எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை அமைப்பின் ஓர் அங்கமல்ல. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் தார்மீக அடிப்படையில் அவர்களால் பங்குபெற முடியாது. எனினும், அவர்களை பாஜக எம்எல்ஏக்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கவில்லை. அதனால், நியமன எம்எல்ஏக்களை பாஜக எம்எல்ஏக்களாக கருதமுடியாது. எனவே, இந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ஒருசார்பு நிலையை எடுக்காமல் இருக்க வேண்டும்”.
நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்கள் தான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கொறடா ஆர்கேஆர் அனந்தராமன் கூறும்போது, ” பாஜகவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்கள் சட்டப்பேரவையில் எந்த கட்சியின் உறுப்பினர்களும் இல்லை. அவர்கள் தங்களை பாஜக உறுப்பினர்கள் என்று கூறினால், தானாகவே தகுதி நீக்கத்துக்கு ஆளாவார்கள்”என்றார்.
இது குறித்து திமுகவின் தெற்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா கூறும்போது, ” மத்திய அரசு நியமித்த 3 எம்எல்ஏக்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை என,கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கிரன் பேடியைப் போலவே, பாஜக பிரதிநிதியாகவே தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார். நியமன எம்எல்ஏக்களின் வாக்குகளை வைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தலையெழுத்தை முடிவு செய்வது ஜனநாயக விரோதமானது” என்றார்.
இதற்கிடையே, நியமன எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்களாக கருதப்படுவார்கள் என்று கூறியதை தெளிவுபடுத்தக் கோரி, ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சட்ட விதி சொல்வது என்ன?
”1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின் பிரிவு 3 (3)ல், 3 நபர்களுக்கு மேல் நியமன உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுவர் அரசுப் பணியில் இருக்கக் கூடாது. அரசு ஊழியராக இல்லாதவர் மட்டுமே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
ஆளும் கட்சி அல்லது தோழமை கட்சியினரை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க அரசு பரிந்துரைக்கும். இதன் அடிப்படையில், நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கும். எனினும், வாக்களிப்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது என யூனியன் பிரதேச சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.