சமூக வலைத்தளங்களில் கிரெட்டா தன்பெர்க்கின் கருத்துகளைத் திருத்தி வெளியிட்ட சூழலியாளர் திஷா ரவி மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுச் சுமத்தி, டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு போராட்டக் குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திஷா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்துவருவதும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன், பிரைடே ஃபார் பியூச்சர் என்ற பெயரில் செயல்படும் போராட்டக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாகப் பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகக் கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக டெல்லி காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திஷா ரவியை, 5 நாட்கள் சிறப்புக் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்துள்ளார்.
சர்ச்சையான டூல்கிட்
கிரெட்டா தன்பர்க் தன் ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு, அதை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.
பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பதிவுகள் மூலம் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புகைப்படம், காணொலிகளில் வெளியிடுவது ஆகியவை கிரெட்டாவின் டூல்கிட்டில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராகச் செயல்படுவது, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, அரசு அதிகாரிகள் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், அவரவர் இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் இந்திய தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் அருகே போராட்டம் நடத்துவது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும், தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சதித் திட்டத்தில் கிரேட்டா தன்பர்க் ஈடுபட்டார் என்று டெல்லி காவல் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்தது.
இதற்கிடையே திஷா ரவி கைது செய்யப்பட்டதைக் கொடுமையானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தேவையில்லாத கொடுமை. என் ஆதரவு திஷா ரவிக்குத்தான் என அவர் கூறியுள்ளார்.
சூழலியலாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.