73 சதவிகிதம் சொத்துக்களை வைத்திருக்கும் 1 சதவிகித்தினருக்கான பட்ஜெட் என, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார்.
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் பேசிய ப.சிதம்பரம், பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, இந்த பட்ஜெட் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கான பட்ஜெட் என்று கடுமையாக விமர்சித்தார். அதாவது நாட்டின் 73 சதவிகித சொத்துக்களை வைத்திருக்கும் 1 சதவிகித பெரும் பணக்காரர்களின் பட்ஜெட் என்று குறிப்பிட்டார். அதோடு, திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை இந்த பட்ஜெட் பிரதிபலிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது:
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத் தான் இந்த பட்ஜெட் வழிவகுக்கிறது. ஏழைக்காக இந்த பட்ஜெட்டில் ஏதுமில்லை. பொருளாதார மந்தநிலையை ஏற்க அரசு மறுக்கிறது. பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சினை சுழற்சியானது என்றும், கட்டமைப்பு ரீதியானது அல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தது எதார்த்தமான உண்மை. திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தைக் கடந்த 3 ஆண்டுகளாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
நான் பயன்படுத்திய ‘திறமையற்ற’ என்ற வார்த்தையை விதிவிலக்காக மாண்புமிகு நிதி அமைச்சர் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கும் மென்மையான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறேன். 2020-21 இறுதி வரையிலான காலகட்டத்தையும் சேர்த்துத்தான் 3 ஆண்டு திறமையற்ற பொருளாதார நிர்வாகம் என்று கூறுகிறேன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 2017-18 ஆம் ஆண்டிலிருந்து என்று எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்த மாநிலமான தமிழ்நாடு உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தேவை குறைந்து போயிருக்கிறது. அப்படியென்றால், பின்தங்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவின் நிலைமை என்ன என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் நீங்கள் கண்டுகொள்வதில்லை. பட்ஜெட் யாருக்காக? ஏற்கனவே அடைந்த வளர்ச்சியைத் திறமையற்ற நிர்வாகம் தடுக்கும். கடன் வாங்குவது, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களை நிரப்பவே பயன்படும். நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வளர்ச்சி கணிப்புகள் வீழ்ச்சியடையும். ஜிடிபி வளர்ச்சி 14.8 சதவிகிதமாக இருக்கும் என்பது அரசின் கணிப்பாக இருக்கிறது. ஆனால், அவர்களே 11 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள்.
வரும் ஆண்டில் குறைந்தது 5 அல்லது 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், உங்கள் வளர்ச்சி 9.4 சதவிகிதம் அல்லது 8.4 சதவிகிதமாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிந்தைய மந்தநிலைக்குப் பிறகு ஏற்படும் இயற்கையான மற்றும் இயந்திரத்தனமான வளர்ச்சியாகும். வெறும் எண்களை வைத்து பெருமை கொள்ள வேண்டாம். நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெற உங்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். நல்ல அர்த்தமுள்ள விமர்சனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாதார கட்டமைப்புப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, ஏழைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதைவிட்டு, இந்த எண்களின் பின்னே செல்லாதீர்கள்.
பெரும்பாலான எண்ணிக்கை யூகத்திலேயே இருப்பதால், இந்த நிதிநிலையைத் திரும்பப் பெறுங்கள். மொத்த கூடுதல் மூலதனச் செலவு ரூ. 51,000 கோடி என்கிறீர்கள். மீதத் தொகை எங்கே போனது?
வருவாயைப் பொறுத்தவரை, உங்கள் செலவினம் ரூ. 4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஆண்டுக்கான வருவாய் கணிப்புகள் உங்களுக்கு லட்சியமாக இருக்கிறது. ஆனால், நிச்சயம் பற்றாக்குறையாக இருக்கும். மூலதன செலவினத்திலிருந்து இந்த அரசு போதுமான செலவைச் செய்யவில்லை. சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்ட போதிலும், பட்ஜெட்டில் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிடாதது முதல் முறை நிகழ்வாகும். பட்ஜெட் உரை மீதான பேச்சு புத்திசாலித்தனமாகவும், அதிகாரத்துவமாகவும், சாக்குப்போக்கு சொல்வதாகவும் அமைந்துள்ளது.
கொரோனா வந்ததற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. கொரோனா போவதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது. எங்களது வலுவான எதிர்ப்பையும், கருத்தையும் பதிவு செய்துள்ளோம்.
இந்த கருத்தைப் பதிவு செய்வதால், ‘போராடுவதற்காகவே வாழ்பவர்கள்’ என்றும், ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் நாங்கள் அழைக்கப்படலாம்.
மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும். இதனைப் பணமாகவோ, உணவுப் பொருட்களாகவோ வழங்க வேண்டும். இல்லையென்றால், ஏழை மக்கள் விழித்தெழுந்து வன்முறையின்றி, அமைதியாகச் செய்ய வேண்டியதைச் செய்வார்கள் என்று எச்சரிக்கிறேன்.
விவசாய செஸ் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயராது என்று 3 நாட்களுக்கு முன்பு சொன்னீர்கள். கெட்டிக்காரன் புழுகு 8 நாளைக்கு என்பதற்குப் பதிலாக, 3 நாட்களிலேயே வெளிப்பட்டு பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தால் 3 ஆண்டுகளுக்கு முந்தைய ஜிடிபி விகிதத்துக்குப் பொருளாதாரம் திரும்பியுள்ளது.
தேவையை அதிகரிக்க வேண்டும் என்று உலகின் ஒவ்வொரு பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். தேவையை அதிகரிக்க மக்களின் கையில் பணத்தைக் கொடுப்பதுதான் சிறந்த வழி. இதனைக் கவனத்தில் கொள்ள இந்த அரசு தவறிவிட்டது. நான் மீண்டும் குற்றஞ்சாட்டுகிறேன். கடந்த 36 மாதங்களில் கிடைத்த அனுபவங்களில் இன்னும் நீங்கள் பாடம் கற்கவில்லை. அடுத்த 12 மாதங்களுக்கும் நீங்கள் பாடம் கற்காவிட்டால், ஏழை மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் என் பயம்.
கடந்த 2004-05 ஆம் ஆண்டில் ஜிடிபி ரூ.32.42 லட்சம் கோடியாக நிலையாக இருந்தது. 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியை நிறைவு செய்து வெளியேறிய போது, 3 மடங்கு அதிகமாகி ரூ. 105 லட்சம் கோடியாக இருந்தது.
அதன்பிறகு என்ன ஆனது? 2017-18 ஆம் ஆண்டு ரூ. 131 லட்சம் கோடியாகக் குறைந்தது. 2018-19 ஆம் ஆண்டு மீண்டும் 139 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2019-20 ஆம் ஆண்டு ரூ. 145 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 60 லட்சம் கோடியாக ஜிடிபி இருந்தது. ஆண்டு முடியும்போது ரூ.130 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, மீண்டும் 2017-18 ஆம் ஆண்டு இருந்த இடத்துக்கே ஜிடிபி திரும்பிவிட்டது என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.