நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் இந்தியாவை 4 பேர் வழி நடத்துகின்றனர் என மக்களவையில் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது, விவசாயச் சட்டங்களின் பாதகங்களைத் தோலுரித்துக் காட்டினார்.
ராகுல் காந்தி : போராட்டத்தைப் பற்றி மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள், விவசாயச் சட்டங்களின் உள்ளடக்கத்தையும் நோக்கத்தையும் பற்றி யாரும் பேசுவதில் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவரை மகிழ்ச்சிப் படுத்தும் நோக்கில், விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். முதல் விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசுகிறேன். இந்தியாவில் விளையும் அனைத்து விளைபொருட்களையும் வாங்கும் உரிமையைத் தனது (பிரதமரின்) நண்பர் ஒருவருக்கு அளிப்பது. இதனால் பாதிக்கப்படப்போவது யார்? மண்டிகளை நம்பியுள்ள சிறு வணிகர்கள் தான். மண்டிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படப் போகிறார்கள். இந்தச் சட்டம் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூர் மண்டிகளையும் அழித்துவிடும்.
(பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம்.)
சபாநாயகர் ஓம் பிர்லா : பட்ஜெட் தொடர்பாகப் பேசுங்கள்.
ராகுல் காந்தி: பிரதமர் விருப்பப்படி, இரண்டாவது விவசாயச் சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பேசுகிறேன். விவசாயிகளுக்கு 2 வாய்ப்புகளை அளித்ததாகப் பிரதமர் பேசினார், ஆம். அதில் ஒன்று பட்டினி. மற்றொன்று வேலை இழப்பு. ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது விவசாயத்துறை. இதற்கு வேட்டு வைப்பது தான் இந்த இரண்டாவது சட்டத்தின் நோக்கம். பெரும் தொழிலதிபர்கள் உணவு, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கலாம் என்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம்.
பிரல்ஹாத் ஜோஷி (நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்): விதிமுறைகளின் படி பட்ஜெட் விவாதத்தின் போது, பட்ஜெட் பற்றித்தான் பேச வேண்டும்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி : விதி 214 ன் படி, பொது விஷயங்களையும் பேசலாம். விவசாயமும் பட்ஜெட் தொடர்புடையது தான்.
சவ்காட்டோ ராய் (திரிணாமுல் காங்கிரஸ்) : ஓர் உறுப்பினர் பேசும்போது குறுக்கிடக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது ராகுல் காந்தியின் உரையில் ஏன் குறுக்கிடுகிறீர்கள்?
ராகுல் காந்தி : 3 ஆவது சட்டத்தின் நோக்கத்தையும் சொல்கிறேன். அரசின் முதல் நண்பர்களான பெரும் முதலாளிகளிடம் சென்று தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைக் கேட்கவேண்டும். அவர்கள் தராவிட்டால், விவசாயிகள் நீதிமன்றத்துக்குப் போக முடியாது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், இடைத்தரகர்களை ஒழித்து, அதாவது நாட்டின் முதுகெலும்பை முறித்து தங்கள் முன்னணி தொழிலதிபர் நண்பர்களுக்கு (அம்பானி, அதானி) உதவ முயல்வது தான் 3 ஆவது விவசாயச் சட்டத்தின் நோக்கம்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்பது, அரசின் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமாக இருந்தது நினைவில் இருக்கலாம். அதேபோல், 4 பேர் சேர்ந்து, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என இந்த நாட்டை வழிநடத்துகின்றனர். இவர்கள் யார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு என்ன ஆகும்? விவசாயிகளின் நிலம் பறிபோகும். சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் உணவு பாதுகாப்பு சீர்குலையும். நாட்டின் முதுகெலும்பை முறித்துவிட்டு உங்களால் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என எதையும் உருவாக்க முடியாது. டெல்லியில் நடப்பதை விவசாயிகள் போராட்டம் என நீங்கள் நினைப்பது தவறு. இது இந்தியாவின் போராட்டம். விவசாயிகளும், தொழிலாளர்களும் உங்களை அழித்துவிடுவார்கள். அவர்களை உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் விவசாயச் சட்டங்களை ரத்து செய்தே ஆகவேண்டும். உங்களுக்குத் தோல்வியே மிஞ்சும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏழைகளிடமிருந்து பணத்தைப் பறித்து, 2 நண்பர்களின் பாக்கெட்களை நிரப்புவது பிரதமருக்குப் புதிதல்ல. இப்போது மீண்டும் ஏழைகள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். கொரோனா பொது முடக்கத்தின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடக்கவிட்டு, பிச்சை எடுக்க வைத்தீர்கள்.
சபாநாயகர் ஓம் பிர்லா : இது பட்ஜெட் குறித்த விவாதம். அதைப் பற்றி மட்டும் பேசுங்கள்.
ராகுல் காந்தி : பட்ஜெட் விவாதத்துக்கு நான் வருகிறேன். அதற்கு முன்பு என் விவாதத்துக்கு அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறேன். முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதன்பிறகு ஜிஎஸ்டி, தொடர்ந்து பொது முடக்கத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்களைத் துன்பத்தில் தள்ளியது தான் நீங்கள் செய்த சாதனை. இவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும், விவசாயிகளையும், சிறு கடைக்காரர்களையும் பாதிப்படையச் செய்துவிட்டது. வேலை வாய்ப்பை உருவாக்கும் திறனையும் அழிந்துவிட்டது. நாம் இருவர் நமக்கு இருவருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே எதிர்த்து நிற்கிறது. விவசாயிகள் பின்வாங்கிவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது நடக்காது. இப்போது பட்ஜெட்டுக்கு வருகிறேன். குடியரசுத் தலைவர் உரையின் போது, விவசாயிகள் பிரச்சினை குறித்த தனி விவாதம் நடத்த அனுமதி கேட்டோம். அது மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் மட்டுமே விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி பேசுவேன். பட்ஜெட் பற்றி பேசமாட்டேன். உயிர்நீத்த விவசாயிகளுக்கு இவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. அவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துகிறேன். என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.
(காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.)
சபாநாயகர் ஓம் பிர்லா : இந்த அவையை நடத்த வேண்டியது என் பொறுப்பு. எந்த சோக நிகழ்விலும் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தச் செய்வது எனது பொறுப்பு. ஆனால், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் தவறாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் (ராகுல் காந்தி) எழுத்து மூலமாகத் தாருங்கள், அதற்கான அனுமதியைத் தர வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி : பிரதமர் நேற்று பேசும்போது, போராடுவதற்காகவே வாழ்பவர்கள் என்று எங்களைப் பார்த்துச் சொன்னார். பட்ஜெட்டுக்கான உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தைப் பேச வேண்டும் என்றார். அவர் சொன்னபடியே பேசிவிட்டேன். இப்போது பிரதமர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன்.