டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நசுக்க, மத்திய பாஜக அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மூலம் இன்று உலக அளவில் அம்பலமாகியுள்ளது.
விவசாயிகள் மீதான அடக்குமுறை குறித்து நாம் ஏன் பேசக்கூடாது? என்று அமெரிக்க பாப் இசைப் பாடகி ரிஹானா போட்ட ஒரு ட்வீட் இன்று ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.
ரிஹானா ட்வீட் செய்தபிறகு, உலக அளவில் இது ட்விட்டரில் ட்ரெண்டானது. பருவநிலை மாற்றச் செயற்பாட்டாளர் க்ரீடா துங்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் சகோதரி மீனா ஹாரீஸ், மியா காலியா, அமண்டா செர்னி ஆகியோர் ரிஹானாவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர்.
ஆனால், ரிஹானாவும் மற்றவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்தது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் வேறு பலருக்கும் கசப்பாக இருந்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் இவர்கள் இடதுசாரி ஆபாசக்காரர்கள் என்றும், இனவெறியர்கள் என்றும் பலர் ட்வீட் செய்தார்கள். இந்திய வெளியுறவுத்துறையோ, இந்த போராட்டத்தின் மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள சுயநலவாதிகள் முயற்சிப்பது துரதிஷ்டமானது என்றும், அவர்கள் தடம்புரண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதன்பிறகு, ‘இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம்’ என்ற ஹேஸ்டேக்குடன் ரிஹானா மற்றும் ரீட்வீட் செய்தவர்களுக்கு எதிராக இந்தியாவின் பிரபலங்கள் ட்விட்டரில் பாய்ந்தனர். இதில் விளையாட்டு வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் அடங்குவர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடைய சிலர், ட்விட்டர் போர் குறித்தும், ரிஹானா ட்வீட் குறித்தும், அவரைப் பின்பற்றிச் செய்யப்பட்ட ரீட்வீட் குறித்தும் என்ன சொல்கிறார்கள்?
கவிஞர் கே. இக்ரா கூறும்போது, ”மனித உரிமை மீறல்கள் என்றைக்கும் உள்நாட்டு விவகாரமாகாது. விவசாயிகள் போராட்டத்தின் போது, இன்டெர்னெட் துண்டிக்கப்பட்டதால் ரிஹானா தமது கருத்தைப் பதிவிட்டார். இதன்மூலம் இந்தியாவின் கவுரவம் பாதிக்கப்படுவதாகக் அவர்கள் கருதினால், குடிமக்களின் அடிப்படை உரிமையைக் காப்பாற்ற வேண்டியது ஆளும் உங்களது கடமை” என்றார்.
சிங்கு எல்லையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ வாயிலாகத் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் ஆமி கில். இது குறித்து அவர் கூறும்போது, ” போராட்டத்தை ஊடகங்கள் காட்டக்கூடாது என்பதற்காக இணையத்தைத் துண்டித்திருக்கிறார்கள். பாலிவுட் எங்களுக்கு ஆதரவு இல்லை. எங்களை ஆதரிக்கும் மக்களை முட்டாள் என்று அழைக்கிறார்கள். எங்களை ஆதரிக்கும் சில நிருபர்களை, காவல் துறையினர் அப்புறப்படுத்துகிறார்கள். விவசாயிகள் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது” என்றார்.
கவிஞர் அசீம் சுண்டன் கூறும்போது, ” அமெரிக்காவில் கறுப்பர் கொல்லப்பட்ட போது இந்தியப் பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். அப்படியிருக்க, சொந்த நாட்டில் நடக்கும் அடக்குமுறையைப் பற்றி வெளிநாட்டினர் பேசினால் மட்டும் உள்நாட்டு விவகாரம் ஆகிவிடுமா? ஏனிந்த பாசாங்குத்தனம்?
ரிஹான்னா, அமந்தா போன்றவர்கள் விவசாயிகள் மீதான அடக்குமுறையை மனித நேயத்தின் அடிப்படையில் மட்டும் எதிர்க்கவில்லை. விவசாயச் சட்டங்களுக்காக மட்டும் எதிர்க்கவில்லை. அது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கவும் இல்லை. அவர்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே பேசுகிறார்கள்” என்றார்.
இது குறித்து பாடகர் பூஜன் ஷாஹில்ர் கூறும்போது, ” விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் வார்த்தைகளை எவ்வளவோ பேர் கேட்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவான குரலாக உங்கள் இல்லாதபோது அது மதிப்பற்றதாகிவிடும். அதேசமயம், ரிஹானா போன்றோரின் குரல், இந்திய விவசாயிகளின் பிரச்சினையைச் சர்வதேச அளவில் பேச வைக்கும் அளவுக்குத் தட்டி எழுப்பும் குரலாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பிரபலங்களின் கருத்துக்களுக்கு இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட் போட்டனர். இதில், நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டை, ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. இதுதவிர, சாய்னா நேவால், சச்சின் டெண்டுல்கர், அமீர்கான், சுரேஷ் ரெய்னா உள்பட பலர் இந்த விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை டாப்ஸி போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாப்ஸி தனது ட்விட் பதிவில் ” ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்கள் இறை நம்பிக்கையையும், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையையும் படபடக்க வைக்கிறது என்றால், உங்கள் நம்பிக்கை கட்டமைப்பை நீங்கள் தான் வலிமையாக்க வேண்டும். மாறாக, பிறருக்குக் கொள்கை குறித்து பாடம் எடுக்காதீர்கள்” என காட்டமாக போட்டுள்ளார்.
அமெரிக்கப் பாப் பாடகி ரிஹானா தொடங்கி வைத்ததை, பாலிவுட் கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் முடிக்கப் பார்த்தார்கள். ஒரே ட்விட்டில் அனைவரது முகத்திரையையும் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் நடிகை டாப்ஸி.
அமெரிக்கப் பாடகி ரஹானாவை ட்விட்டரில் 10 கோடி பேர் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, அவரின் சொத்து மதிப்பு ரூ.4,500 கோடி.
இவ்வளவு புகழ், வசதி இருந்தும், எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அடக்குமுறையை எதிர்த்து குரல் எழுப்பி உயர்ந்து நிற்கிறார் ரிஹானா.
அடக்குமுறையை ஆதரித்து ஆட்சியாளர்களுக்கு தங்கள் விசுவாசத்தைப் பாலிவுட் நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தலையில் தூக்கி வைத்து இவர்களை கொண்டாடிய நமக்கு, ‘இவர்கள் யார்?’ என்று அடையாளம் காட்டிய அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவுக்கு நன்றியை தெரிவிப்போம்.