ஜனவரி 30: அண்ணல் காந்தி நினைவுநாள்
மதவெறியர்களால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட 30.01.1948 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்தி, வானொலி மூலமாக ஆற்றிய ` The Light has gone out ’ என்னும் ஆங்கில உரையின் தமிழாக்கம் : என் அருமை நண்பர்களே! இனிய தோழர்களே!
நம்முடைய வாழ்க்கையின் ஒளிவிளக்கு அணைந்தது! எங்கும் இருள் சூழ்ந்தது. உங்களுக்கு என்ன சொல்லப் போகிறேன், எப்படிச் சொல்லப் போகிறேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நமது பேரன்புக்குரிய தலைவர், நாம் எல்லோரும் ‘பாபுஜி’ என்று பேரன்போடு பெருமைபொங்க அழைத்த தேசத்தந்தை, இப்பொழுது இல்லை! ஒருவேளை நான் இப்படிச் சொல்வது தவறாக இருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், நாம் மிகப்பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெருமகனை, இனிமேல் மீண்டும் பார்க்க முடியாது. இனிமேல் ஓடோடிச் சென்று அவரிடம் அறிவுரைகளைக் கேட்க முடியாது. கருணை பொங்கும் ஆறுதல் மொழியை அவரிடமிருந்து பெறமுடியாது. இது ஒரு பேரிடி! எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் லட்சோப லட்சம் மக்களுக்கும் இது ஒரு பேரிடி! நானோ, வேறு எவரேனுமோ கொடுக்கக் கூடிய வேறு எந்த அறிவுரையையும் கொண்டு நம்மீது விழுந்த இந்தப் பேரிடியின் வேதனையைத் தணிப்பது முடியாத காரியம்.
‘ஒளிவிளக்கு அணைந்தது’ என்று சொன்னேன். என்றாலும், நான் அப்படிச் சொன்னது தவறுதான். ஏனென்றால், இந்த நாடெங்கிலும், ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிய அந்த விளக்கு, சாதாரண விளக்கு அன்று! இங்கே மிக நீண்ட காலமாக இந்நாட்டின்மீது ஒளி பாய்ச்சி வந்த அந்த விளக்கு இன்னும் பல்லாண்டுகளுக்கு இந்நாட்டின்மீது பிரகாசித்துக்கொண்டேயிருக்கும்! ஓராயிரம் ஆண்டுகள் சென்ற பின்பும் அந்த ஒளியை இந்நாட்டின்மீது பார்க்க முடியும். ஏன், உலகமே அதைப் பார்க்க முடியும்! அந்த ஒளி எண்ணிலடங்காத இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஏனென்றால், அந்த விளக்கு ‘மிக அருகிலிருந்தது’ என்பதற்கும், அதிகமாகவே, வேறு பெரிய பொருளுக்குப் பிரதிநிதியாக இருந்தது. அது, நம் வாழ்விற்கும் சாகாவரம் பெற்ற உண்மைகளுக்கும் பிரதிநிதியாக விளங்கி நமக்கு எப்போதும் சத்தியத்துடன் பாதையை நினைவூட்டிக்கொண்டு, நாம் தவறுகள் செய்தால் அதிலிருந்து நம்மை விலகச்செய்து, இந்தப் பாரத நாடாம் பழம்பெரு நாட்டினை விடுதலை உதயத்தை நோக்கி வழிநடத்திச் சென்றது.
இன்னும் அவர் எத்தனையோ அருஞ் சாதனைகளை நிகழ்த்த இருக்கும்போதே, இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அவர் இனிமேல் தேவையில்லை யென்றோ, அவர் தம்முடைய பணியை முடித்துவிட்டார் என்றோ நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. நம்மிடையே அவர், இன்று இல்லை என்பது நம்மீது இறங்கிய பேரிடி! நம்மால் தாங்கவொண்ணாத பேரிடி!
ஒரு பைத்தியக்காரன் அவருடைய வாழ்க்கையை முடித்து வைத்துவிட்டான். இந்தச் செயலைச் செய்தவனை, நான் ‘பைத்தியக்காரன்’ என்றுதான் கூறுவேன். என்றாலும், கடந்த சில மாதங்களாக, சில ஆண்டுகளாக, இந்த நாட்டில் போதுமான அளவிற்கு நஞ்சு தூவப்பட்டுள்ளது. இப்படித் தூவப்பட்ட நஞ்சு, பெருமளவில் பரவி, மக்கள் மனத்திலேயும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நஞ்சு ஊட்டிய பாதிப்பினை நாம் எதிர்கொண்டேயாகவேண்டும். பரவியுள்ள இந்த நச்சுத்தன்மையை அடியோடு அகற்றியாக வேண்டும்.
நம்மை நாற்புறமும் சூழ்ந்துள்ள எல்லா ஆபத்துகளையும் நாம் துணிவோடு எதிர்கொள்வோம். ஆபத்துக்களை எதிர்கொள்ளும்போது, நாம் பைத்தியக்காரத்தனமான முறையில், அல்லது மோசமான முறையில் நடந்துகொள்ளக் கூடாது. அதற்கு மாறாக, இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று நம்முடைய பெருமைக்குரிய ஆசான் அண்ணல் காந்தியடிகள் கற்பித்திருந்தாரோ, அந்த முறையில்தான் நாம் அதனை அணுகவேண்டும். முதலில், நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அவர் கோபப்பட்டு விடுவார் என்பதற்காக, நாம் ஒருபோதும் தவறாக நடக்கத் துணிந்ததில்லை. வலிமையும் உறுதிப்பாடும் உடைய மக்களாக நாம் இப்போது நடந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஆபத்துக்களையும் நேருக்குநேர் எதிர்கொள்ள உறுதிபூணவேண்டும். நம்முடைய பேராசான், நமது பெருந்தலைவர் நமக்கிட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்றவேண்டும் என்று உறுதிபூணவேண்டும்.
அப்படிச் செய்கையில், ஒன்றை நீங்கள் எப்போதும் நினைவில் வைக்கவேண்டும். அதாவது, நான் நம்புவதைப்போல், அவரது ஆன்மா மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்குமானால், நம்மை நேருக்குநேர் கண்டுகொள்ளுமானால், நாம் எந்த ஒரு சிறிய தவறான செயலையும் செய்யவில்லை, வன்முறையில் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அவருடைய ஆன்மா உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த ஆத்மா வருத்தப்படாத வகையில் நம் செயல்கள் அமையவேண்டும்.
ஆகவே, நாம் அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாமல் இருப்போம். ஆனால், அதற்காக நாம் வலிமையற்றவர்களாக இருக்கவேண்டுமென்று பொருள்கொண்டுவிடக்கூடாது. நம்முடைய வலிமையாலும், ஒற்றுமையாலும், நாம் நேருக்குநேரே சந்திக்கிற எல்லாத் தொல்லைகளையும், இடர்ப்பாடுகளையும் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும். இங்கே நாம் ஒற்றுமையோடு இருக்கவேண்டுமென்பது மிகவும் இன்றியமையாதது. பெரிய துயரத்தை எதிர்கொண்டுள்ள இந்தச் சமயத்தில், நமக்கிடையே உள்ள சின்னச்சின்ன மனத்தாங்கல்கள், தொல்லைகள், இடையூறுகள், கருத்துவேறுபாடுகள் எல்லாவற்றிற்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
‘பேரிடர்’ அல்லது ‘பெருந்துயரம்’ என்பது, வாழ்வின் எல்லாப் பெரிய விஷயங்களையும் நமக்கு நினைவூட்டி, நாம் எதிலும் முக்கியத்துவம் கொடுத்துவந்த எல்லாச் சிறிய விஷயங்களையும் மறக்கச் செய்வதற்காக, நம் முன்னேவந்து நிற்கும் `குறியீடு’ என்று கொள்ளவேண்டும். அவர் தமது மரணத்தின்மூலம் வாழ்வின் மிகப்பெரிய விஷயங்களை, உயிரோட்டமாக விளங்கும் சத்தியத்தை நமக்கு நினைவூட்டியுள்ளார். இதை நாம் எல்லோரும்
நினைவில்கொண்டால், இந்திய நாட்டிற்கு இதுவே சிறந்த நன்மையைத் தரும்.
தேசப்பிதாவின் மறைவிற்காக, நாம் எல்லோரும் அஞ்சலி செலுத்திப் பிரார்த்தனை செய்வோம். அப்படிப் பிரார்த்தனை செய்யும்போது, அவருக்கு நாம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய பெருமைக்குரிய பிரார்த்தனை இதுதான். “உண்மைக்கும் சத்தியத்திற்கும் நம்மை நாமே அர்ப்பணிப்போம்” என்று சபதமேற்போம். “எந்த உன்னத லட்சியத்திற்காக இந்நாட்டின் தலைமகன் வாழ்ந்திருந்தாரோ, எந்த உயர்ந்த குறிக்கோளுக்காகத் தம் உயிரையும் கொடுத்தாரோ, அந்த லட்சியங்களுக்காக, அந்தக் குறிக்கோளுக்காக நம்மை
அர்ப்பணிப்போம்” என்றும் நாம் சபதமேற்போம். அவருக்காக வழிபட்டு, அவர் நினைவைப் போற்றுகின்றவகையில் செய்யக்கூடிய உயர்ந்த அஞ்சலி இதுவே ஆகும். இந்தியாவுக்கும் நமக்கும் நாம் அளிக்கின்ற உன்னதனமான பிரார்த்தனை இதுவேயாகும். ஜெய்ஹிந்த்!”