தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும் என்கிற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை ஆகிய நகரங்களில் சிறு, நடுத்தர பஞ்சாலைகள் மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகின்றன. பருத்தி நூல் ஏற்றுமதி 39 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இதனால் ஜவுளி தொழில் கடுமையான பொருளாதார முடக்கத்திற்கு ஆளாகியிருக்கிறது.
நலிவடைந்த நிலையிலிருந்த 14 தனியார் பஞ்சாலைகளை நிர்வாகம் செய்வதற்காக, 1968 ஆம் ஆண்டு தேசிய பஞ்சாலை கழகம் துவக்கப்பட்டது. இந்த ஆலைகளின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி உள்ளிட்ட காரணங்களுக்காக 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதிலும் இருந்த 123 பஞ்சாலைகளை தேசியமயமாக்கி, தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்ற அமைப்பின் கீழ் கொண்டு வந்தார். மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின்கீழ் பொதுத்துறை நிறுவனமாக என்.டி.சி. செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகத்திலிருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் தற்போது நஷ்டம் ஏற்பட்டு மூடப்பட்டுள்ளன. மீதியுள்ள 23 பஞ்சாலைகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன.
கொரோனாவுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த இந்த ஆலைகள் பொது முடக்கத்திற்குப் பிறகு திறக்கப்படவில்லை. என்.டி.சி. நிர்வாகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சகத்திடம் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பினர். மேலும், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 7 ஆலைகளில் 3 மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. மற்ற ஆலைகளைத் திறக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும், தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, ஒவ்வொரு ஆலைகளாக மூடி வருகிற என்.டி.சி. நிர்வாகம், அதே காரணத்தைக் கூறி அனைத்து ஆலைகளையும் மூடிவிடுமோ? என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தேசியமயமாக்கப்பட்ட ஆலைகளின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் கோடி. இதனை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பொதுத்துறை சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துவிடுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினை குறித்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாராக இல்லை. அதேபோல், தமிழகத்தில் என்.டி.சி. ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களாக வேலை இழந்து, ஊதியத்தையும் பறிகொடுத்துள்ளனர்.
இந்தியாவில், உற்பத்தி சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகித பங்களிப்பையும்,ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.3 சதவிகிதம் பங்களிப்பையும் ஜவுளித் தொழில் அளிப்பது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சகமே கவலை தெரிவித்துள்ளது. தொழில்துறை உற்பத்தியில் 7 சதவிகிதமும் மற்றும் ஏற்றுமதி வருவாயில் 15 சதவிகிதமும் ஜவுளித்துறையின் பங்காக இருக்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 11 சதவிகிதமாகும். விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அதாவது, 4 கோடியே 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 2 ஆவது பெரிய துறையாக ஜவுளித்துறை திகழ்கிறது.
ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் தவறான ஜவுளி கொள்கை காரணமாக அதிகளவிலான வேலை வாய்ப்பையும், ஏற்றுமதியையும், அந்நிய செலாவணியையும் வழங்குகிற ஜவுளித்துறை நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, காப்பாற்ற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, பிரதமர் மோடி அவர்கள் திருக்குறளையோ, பாரதியார் கவிதைகளையோ மேற்கோள் காட்டி பேசுவதால் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. தமிழர்கள் மீது உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமேயானால், அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித் துறையைக் காப்பாற்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டுமெனப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.