தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். விவசாயிகள் நடத்த இருந்த டிராக்டர் பேரணியை முடக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் காவல்துறையினர் சதித் திட்டம் தீட்டி விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டனர். காவல்துறையினரின் அனுமதியுடன் அமைதியாக சென்ற பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதனால் கடும் வன்முறை வெடித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து டிராக்டர் பேரணி நடத்தி போராடுகிற விவசாயிகள் மீது வரலாறு காணாத வகையில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் 46 வயது நிரம்பிய நவ்ஜித் என்ற விவசாயி உயிரிழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகரில் போராடுகிற விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள்தான் பொறுப்பாகும்.
தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகள் மீது விழுந்த அடி, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் மீதும் விழுந்த அடியாகும். காவல்துறையினர் நடத்திய தாக்குதல், பா.ஜ.க. ஆட்சியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட அராஜக தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காந்திய வழியில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா முழுப் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.