மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண டெல்லியிலிருந்து தனி விமானத்தில் இன்று(14.1.2021) ராகுல் காந்தி மதுரைக்கு வருகை புரிந்தார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் ராகுல் காந்தியைப் பார்த்து உற்சாகமாகக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். காளைகள் சீறி வருதையும், அதை காளையர்கள் அடக்குவதையும் கண்டு உற்சாகமடைந்தார். அதேபோல், காளை வெற்றி பெற்றதையும் பார்த்து மகிழ்ந்தார்.
வாடிவாசலில் இருந்து காளைகள் சீறி வருவதைப் பார்த்த அவர், அருகிலிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில தகவல்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்திருந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த பகுதிக்கு வருகை புரிந்து வணக்கம் தெரிவித்து அருகில் அமர்ந்து உரையாடினார். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசினார்.
இந்நிகழ்வில் தலைவர் ராகுல் காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு கே.சி.வேணுகோபால், புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு வி.நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.ஆர்.ராமசாமி, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு பி.மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சஞ்சய் தத் ஆகியோர் உடன் வருகை புரிந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர்.
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.