அரசியல் மற்றும் வகுப்புவாதம் என நீதித்துறை பிளவுபட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கவலை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் மேலும் கூறியதாவது:
நீதித்துறைக்குள் இருப்பவர்களாலும், பல்வேறு காரணங்களாலும் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. ஒரு நீதிபதி என்பவர் உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பவராகவும், அரசியலமைப்புக்கு விசுவாசமானவராகவும் இருக்க வேண்டும்.
அதாவது, நீதிபதிகளுக்கு அரசியல், வகுப்புவாத, தத்துவார்த்த மற்றும் பாரபட்சம் என்ற சாயம் பூசப்படக்கூடாது என்று அர்த்தம்.
இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நீதித்துறை பிளவுபட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் அரசியல் ரீதியாகவும் வகுப்புவாத ரீதியாகவும் பிளவுபட்டு நிற்பதை நான் இதுவரை பார்த்ததில்லை.
இதே நிலை நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நீதித்துறை தமது தார்மீகத்தை இழந்துவிடும். அரசியல் சானத்துக்கு எதிராக ஒன்று நடக்கும்போது, வழக்குரைஞர்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே?
தங்கள் சுயநலனுக்காக அவர்களும் அரசியல் ரீதியாகவும் வகுப்புவாத ரீதியாகவும் பிளவுபட்டு நிற்கிறார்கள். மதம் என்பது நம்பிக்கை மற்றும் மனசாட்சி தொடர்புடையது. வலுக்கட்டாயப்படுத்தி, மயக்கி ஒருவரை மதமாற்றம் செய்வது தவறு. ஒருவர் மதம் மாற விரும்பினால், களங்கப்படுத்தப்படுவோமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
எந்த மதத்தை வேண்டுமானாலும் ஒருவர் தேர்வு செய்வது அவரது உரிமை. அதனைத் தடுப்பது தவறு, ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார்.
இந்து பெண்களைக் காதலித்து திருமணம் செய்து முஸ்லீம்கள் மதம் மாற்றம் செய்வதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து, மதமாற்றத் தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்தது. இதன்படி 10 ஆண்டுகள் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.