நான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுவதை தடைச் சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸின் 136 ஆவது தொடக்க விழாவில் சீதாராமையா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது;
மாட்டுக்கறி சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். எந்த உணவைச் சாப்பிடுவது என்பதைத் தேர்வு செய்வது என் உரிமை. மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஏற்கனவே ஒரு முறை சட்டப்பேரவையில் தெரிவித்தேன். மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் சாப்பிடவில்லை என்றால் விட்டுவிடுங்கள். மாட்டுக் கறியைச் சாப்பிடுங்கள் என்று நான் உங்களை வலுக்கட்டாயப்படுத்தப் போவதில்லை.
பசு வதைத் தடுப்புச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினரே மாறுபட்ட நிலை எடுக்கின்றனர். தங்களுக்கு ஏதும் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். முதலில் குழப்பத்திலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டும்.
புதிய சட்டம் தனிப்பட்ட உணவுத் தேர்வை மட்டும் பாதிக்கவில்லை. விவசாயிகளையும் பாதிக்கிறது. வயதான மாடுகளை விவசாயி எங்கே அனுப்புவார்? தினமும் ரூ.100 செலவழித்து அவர்களால் வயதான மாடுகளைப் பராமரிக்க முடியுமா? விவசாயிகளுக்கு இந்த தொகை அதிகம் இல்லையா? இந்த பணத்தை விவசாயிகளுக்கு யார் தருவது. பசுக்களை விவசாயிகளும்தான் தெய்வமாக நினைத்து வணங்குகிறார்கள். அதற்காகப் பயன்தராத மாடுகளை இறைச்சிக்கு அனுப்பாமல், தாங்களே வைத்துக் கொண்டு இழப்பைச் சந்திக்கவேண்டுமா? என்றார்.