கடந்த 2017 டிசம்பர் 31 இல் தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியலுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் நான் முதல்வராக மாட்டேன். நல்லவர் ஒருவரை முதல்வராக அமர்த்தி ஆட்சியை வழிநடத்துவேன் என்று கூறியது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்புகள் அனைத்துமே ஏதோவொரு அழுத்தத்தின் காரணமாகவே வெளிவந்ததால் தனது நிலையை மனப்போக்கின்படி அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு ஒரு கட்டத்தில் மக்களிடையே எழுச்சி உருவாக வேண்டும். அதை ரசிகர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும். அது தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையொட்டி, அண்ணாத்தே படப்பிடிப்பில் ஈடுபட்ட போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, ஹைதராபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர், உடல்நலனை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று இறுதியாக அறிவித்துவிட்டார். இது ரஜினியை வைத்து அரசியல் நடத்தி ஆதாயம் பெறலாம் என்ற உள்நோக்கத்தில் ஈடுபட்ட சில சுயநலமிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக ரஜினி கூறவில்லை என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி சப்பைக் கட்டு கட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. முடிவெடுக்க வேண்டியவர் முடிவெடுத்துவிட்டார். தமிழகத்தில் எந்த நிலையிலும் வேறூன்ற முடியாத அளவிற்கு மக்கள் விரோத கட்சியாக இருக்கிற பா.ஜ.க. விற்கு உயிர் கொடுப்பதற்கு முனைந்த குருமூர்த்திகளின் முயற்சி, கடும் தோல்வியை சந்தித்துள்ளது. திரைக்குப்பின்னாலே சதித்திட்டம் தீட்டி தி.மு.க. – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் கொண்ட குதர்க்கவாதிகளான குருமூர்த்தி போன்றவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள். ரஜினி என்கிற சுவற்றில் சுலபமாக சித்திரம் வரைய முற்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த காரணத்தாலும் அவரது மனசாட்சியின் குரல் இன்று ஒலித்திருக்கிறது. பா.ஜ.க. விரித்த வலையில் விழாமல் அவர் தம்மைப் பாதுகாப்போடு காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இத்தகைய துணிச்சலான முடிவெடுத்ததன் மூலம் தமிழ்நாட்டில் அரசியலில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் படுதோல்வி அடைந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்துக் கொண்டு அவரோடு கூட்டணி அமைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறையை ஏவி விட்டு அ.தி.மு.க. வை உடைப்பதற்குக் குருமூர்த்திகளின் ஆலோசனையின் பேரில் அமித்ஷாக்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். அதனால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர், அரசு விழா என்றும் பாராமல் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதுகுறித்து பேசுவதைத் தவிர்த்தார். அ.தி.மு.க. வின் சுயமரியாதையை இழந்த, சரணாகதி அரசியலுக்கு இதுவரை பா.ஜ.க. தலைமை பதில் கூறவில்லை. இதற்குப் பின்னாலே மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது. ரஜினிகாந்த் என்கிற மையப்புள்ளியில் அடிப்படையில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க. வின் சதித்திட்டம் தவிடுபொடியாகி இருக்கிறது.
எனவே, ரஜினியை அரசியலில் நுழைத்து தமிழக பா.ஜ.க. வை தமிழ் மக்களிடம் விற்பனை செய்து விடலாம் என்கிற அணுகுமுறைக்குக் கடுமையான மரண அடி கிடைத்திருக்கிறது. கொள்கையைச் சொல்லி கட்சியை வளர்க்காமல் மதவாத அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவு படுத்தலாம் என்று தமிழக பா.ஜ.க கனவு கண்டது. ஆனால், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் பா.ஜ.க. அரசியல் விலை போகவில்லை. இந்த பின்னணியில் தான் ரஜினியின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்ற கனவு, பகற்கனவாக முடிந்து விட்டது.
எனவே தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்டுக்கோப்பாக, கொள்கை சார்ந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டணியாகக் கம்பீரமாக பீடு நடைபோட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் பேராதரவு குவிந்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அ.திமு.க. வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கான பிரகாசமான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைந்தாலும், வகுப்புவாத பா.ஜ.க. வோடு இணைந்து வந்தாலும் அந்த சந்தர்ப்பவாத கொள்கையற்ற சுயநலக் கூட்டணியை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டுவதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தயாராக செயல்பட்டு வருகின்றன. எனவே, தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைவது உறுதி.