பிரதமர் மோடி அறிவித்த 60 நாள் பொது முடக்கம் இந்திய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் என, பிரபல மனித உரிமை ஆர்வலர் ஹர்ஸ் மந்தேர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
‘தி வயர்’ இணைய தளத்துக்காக கரான் தாப்பருக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும் நாட்டின் உயர்ந்த எயம்ஸ் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்ற போது, மரணத்தின் விளிம்புக்குச் சென்று வந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதாகவும் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, ”பெரும்பாலான மக்கள் வீட்டில் வேலையின்றி இருக்க முடியாது என்பதையும், அடிக்கடி கை கழுவ எத்தனை மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளாமல், 4 மணி நேரத்துக்கு முன்பு பொது முடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்தார்.
முக்கியமாக, வேலைக்குச் செல்லாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடப்பார்களே என்ற சிந்தனை கூட அவருக்கு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடும், நிவாரணமும் போதுமானதாக இல்லை.
இதன்விளைவாக, தனியார் கொடுத்த உணவுக்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று, தங்கள் சுய கவுரத்தையும் பார்க்காமல் லட்சக்கணக்கான மக்கள் உணவைப் பெற்றுச் சென்றனர்.
யாரைப் பாதுகாப்பதற்காக இந்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது? கொரோனாவை உள்ளே நுழைய விட்டுவிட்டு, அதற்கான கஷ்டத்தை ஏழைகள் அனுபவிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமா?
யார் பாதுகாக்கப்பட வேண்டும், யார் தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்தது. யாருடைய வாழ்க்கை முக்கியமானது. யார் செலவு செய்யக்கூடியவர்கள் என்பதிலும் அரசு தெளிவாக இருந்தது. மரணம் தவிர்க்க முடியாது என்ற சூழலை உருவாக்கி, பலரைத் திட்டமிட்டே கொலை செய்து இருக்கின்றனர் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
கொரோனாவை கையாளுவதில் இந்திய பிரதமர் மோடியை விட, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இம்ரான் பார்த்துக் கொண்டார். இந்தியாவைப் போல், பொது முடக்கத்தை அமல்படுத்த இம்ரான் மறுத்ததை உதாரணமாகச் சொல்லலாம்.
கொரோனா விஷயத்தில் இந்தியா மோசமாகச் செயல்பட்டுள்ளது. மோடி அறிவித்த பொது முடக்கத்தால் ஒரு தலைமுறையே மோசமான விளைவுகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவாக இருக்குமோ? என்ற அச்சத்தில் கடந்த அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொது வார்டில் அனுமதிக்கப்பட்டேன். மாற்றிக் கொள்ள உடை கூட யாரும் தரவில்லை. அனுபவம் இல்லாதவர்களே பணியிலிருந்தனர். கழிப்பறைக்குச் செல்லக் கூட என்னை அனுமதிக்கவில்லை.
நோயாளிகளின் ஆக்ஸிசன் அளவு குறித்து யாரும் கவலைப்படவில்லை. சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலர், நாம் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே இருந்தனர். மரண பயத்தில் பலர் கதறி அழுதனர். மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிருக்குப் பயந்தபடியே வார்டுகளுக்குள் வந்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் 10 நாட்கள் நினைவு இழந்த நிலையிலேயே இருந்தேன். போனில் பேச எனக்குத் தடை விதிக்கப்பட்டதாக என் மனைவி பின்னர் தெரிவித்தார்.
சரியாக சிகிச்சை அளிக்காததால் பயந்துபோன என் மனைவி, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அந்த தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில், என் மூளைப் பகுதி சேதமடைந்திருப்பதும், உள்ளே ரத்தக் கசிவு இருப்பதும் தெரியவந்தது. இது தெரியாமல் என்னை கொரோனா நோயாளியாக எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தியிருப்பது மட்டும் புரிந்தது. இனி என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.
நான் இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். என் மனைவி மட்டும் சரியான நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யாமல் இருந்திருந்தால், கொரோனாவில் நான் இறந்ததாகச் சொல்லி கதையை முடித்திருப்பார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர், ஏனைய மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குத் தான் சிகிச்சைக்காக சென்றனர். ஆனால், ஒருவர் கூட எய்ம்ஸ் போன்ற அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. இவர்களே அரசு மருத்துவமனையை நம்பவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார்.