இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போர் பெயர்கள் வெளியிடப்பட்டாது. இதன்பின்னர், 2017-18 பட்ஜெட்டிலும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையான நிதி நிலையை மேம்படுத்தவும் தேர்தல் நன்கொடை பத்திர முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.
தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியில் 12 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20 நாட்கள் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 20 வரை (9 ஆவது கட்டம்) அதிகபட்சமாக ரூ.2,256.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 மார்ச் 1 முதல் மார்ச் 15 வரை( 8 ஆவது கட்டம்) ரூ.1,365.7 கோடி மதிப்புள்ள் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி முதல் மே 10 ம் தேதி வரை (10 ஆவது கட்டம்) ரூ.822.25 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.
இந்த 3 கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டியே நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலின் போது, 3 கட்ட விற்பனையிலும் ரூ.4,444.32 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கட்டங்களில் 73 சதவீத தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன.
2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 3,355.93 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. கடந்த நிதியாண்டு முழுவதும் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூ.2,550.78 கோடியை விட இது அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 2018 மார்ச் மாதத்தில் முதல் கட்ட தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடியாகும்.
ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம் , ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி வரிசையில் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, பல்வேறு வரிசைகளில் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ரூ. 1 கோடி மதிப்பிலான 5,624 தேர்தல் பத்திரங்கள் விற்றுள்ளன. விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் இது 45.68 சதவீதமாகும்.
2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்த ஆவணத்தின்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் விற்பனையான தேர்தல் பத்திரங்களில். 95 சதவீத தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.