”நாம் காணும் பன்முகத்தன்மை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் வலிமை சேர்க்கவில்லை, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வலிமை சேர்க்கிறது…”
– பிரதமர் நரேந்திர மோடி.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை:
”இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இந்தியாவிலும், உலக அளவிலும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்துக்குள் ஒரு நகரமே இருக்கிறது. உள்ளே இருக்கும் விடுதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் குட்டி இந்தியாவையே உருவாக்கியிருக்கிறார்கள். இங்கே உருது, இந்தி, அரபி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
இங்கு நாம் காணும் பன்முகத்தன்மை இந்த பல்கலைக்கழகத்துக்கு மட்டும் வலிமை சேர்க்கவில்லை, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வலிமை சேர்க்கிறது.”
ஆனால்…அவரது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் அப்படி நினைக்கவில்லை…
- கடந்த 2019 ஆம் ஆண்டு ஜின்னா படத்தை வளாகத்துக்குள் வைத்ததற்காக, அலிகார் பல்கலைக் கழகத்தில் அலிகார் பாஜக மக்களவை உறுப்பினர் சதீஷ் கவுதம் தாக்குதல் நடத்தினர். இந்த பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர்களில் ஜின்னாவும் ஒருவர் என்பதை அவர் அறியவில்லை.
- கடந்த 2015 ஆம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் நிறுவிய இந்துத்துவா அமைப்பான இந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் சுனில் சிங், அலிகார் பல்கலைக்கழகத்தை, பயங்கரவாத நர்சரி என்று விமர்சித்தார்.
- கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து யுவ வாஹினி அமைப்பினர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைச் சூறையாடினர்.
- அலிகார் பல்கலைக்கழக விடுதியில் மாட்டுக்கறி பரிமாறப்படுவதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு அலிகார் முன்னாள் மேயரும், பாஜக தலைவருமான சகுந்தலா பார்தி, பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்.
- கடந்த 2019 ஆம் ஆண்டு, உள்ளூர் பாஜக தலைவர் முகேஷ் லோடி அளித்த புகாரின் பேரில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. பின்னர், சத்தமே இல்லாமல் அந்த வழக்கை உத்தரப்பிரதேச காவல் துறையினர் திரும்பப் பெற்றனர்.
- கடந்த 2018 ஆம் ஆண்டு, யோகி ஆதித்யநாத்தும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட்டும், அலிகார் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் இல்லை என்ற தவறான தகவலைத் தெரிவித்தனர்.
- இது பாகிஸ்தான் அல்ல, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஆர்எஸ். கத்தேரியா குறிப்பிட்டார்.
மோடியின் பாராட்டும், பா.ஜ.க. தலைவர்களின் வெறித்தனமும் :
ஒரு பக்கம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைப் பிரதமர் மோடி பாராட்டுகிறார். மறுபக்கம், அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பாஜக தலைவர்கள் சேற்றை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்தை தன் கட்சியினரே விமர்சிப்பதை இதுவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தவில்லை. இப்படி மாறுபட்டு பேசுவதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்கிறாரா?
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொடுத்ததால், பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் முஸ்லீம் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- கடுமையான சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏராளமான இளம் முஸ்லீம் பெண்கள் தற்போது சிறையில் உள்ளனர்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷஹீன் பாக்கில் போராடிய முஸ்லீம் பெண்களை, பணத்தைப் பெற்றுப் போராடுபவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் பல பாஜக தலைவர்கள் விமர்சித்தது ஏன்?
- உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லவ் ஜிகாத் தடைச் சட்டம் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்?. இந்து-முஸ்லீம் திருமணத்தில் மதமாற்றத்தை இந்த சட்டம் தடை செய்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை கலாச்சாரத்துக்கு இத்தகைய சட்டங்கள் எப்படி நன்மை பயக்கும்?
வெறுப்பு கலாச்சாரத்தை நிறுத்த முடியாதது ஏன்?
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என வெறுப்புப் பேச்சுக்கள் எங்கிருந்தாலும், அதனைப் பிரதமரால் ஏன் நிறுத்த முடியவில்லை? அதற்கான பதில் இதுதான்…
- அரசியல் லாபம் அடைய வழிவகுக்கிறது.
- தடுத்து நிறுத்தினால் உங்களை அவர்கள் வெறுக்க ஆரம்பிக்கலாம்.
வெறுப்பூட்டும் பேச்சுகளை முகநூலில் பஜ்ரங் தள் பகிர்ந்து வருகிறது. வன்முறையைத் தூண்டும் விதமாக இந்த பேச்சு இருக்கிறது. ஆனால், நாடாளுமன்ற குழு முன்பு ஆஜரான முகநூலின் இந்திய தலைமை நிர்வாக அஜித் மோகன், பஜ்ரங் தள் வெளியிட்ட பேச்சு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக இல்லை என்று கூறினார். பஜ்ரங்தள் அமைப்போ, முகநூலில் தமக்குக் கணக்கே இல்லை என்று கூறியுள்ளது.
”ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லையேல், போலி என்கவுண்டரைச் சந்திக்க வேண்டி வரும்” என்று முஸ்லீம்களுக்கு எதிரான பஜ்ரங் தள் டிசம்பர் 7 ஆம் தேதி முகநூலில் விடுத்த மிரட்டலை என்ன சொல்வது?
பஜ்ரங் தள் அமைப்பினர் மதச்சார்பற்ற இந்தியாவைத் தெளிவாகவே நிராகரிக்கிறார்கள். தாங்கள் தீவிர இந்துக்களாக இருப்பதையும்,வன்முறையை நோக்கிச் செல்வதையும் விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்.
சீக்கிய விவசாயிகளை தப்ளிக் ஜமாத்தின் மவுலானா தூண்டிவிடுவதாகவும், இதன் மூலம் இந்து மற்றும் சீக்கியர்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்துவதாகவும் அகில இதிய பஜ்ரங் தள் அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளது. இது முற்றிலும் வெறுக்கத்தக்கப் பொய் செய்தி.
இப்போது, இந்திய பள்ளிகளில் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? என்ற கேள்வியை எழுப்பி, சமூக ஊடகங்களில் பஜ்ரங் தள் அமைப்பின் பஜ்ரங்கி சீட்டி பதிவிட்டுள்ளார்.
முகநூல் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்?
இத்தகைய பதிவை தாங்கள் வெளியிடவில்லை என்று பஜ்ரங் தள் தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர்கள் வெளியிடவில்லை என்றால், அவர்கள் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு தொடங்கி வேறு யாராவது வெளியிடுகிறார்களா? அப்படி என்றால், அதை முகநூல் நிர்வாகம் தடை செய்யாதது ஏன்? அல்லது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையைத் தூண்டி வருகின்றன. அவர்களைத் தேசத் துரோகி…தேசத் துரோகி என்று அழைப்பதிலேயே இன்பம் காண்கின்றனர். அலிகார் பல்கலைக்கழகத்தைப் பயங்கரவாதத்தைக் கற்பிக்கும் இடம் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
– இந்த செய்தியின் ஆரம்ப வரியை மீண்டும் சிரிக்காமல் படியுங்கள்.