21 வயது நிறைந்தவர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில், 1952ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தந்தை பெரியார், அந்தத் தேர்தலில் காங்கிரஸைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். ’60 அடி ஆழக் குழிதோண்டி, அதில் போட்டுக் காங்கிரஸைப் புதைப்பேன்’ என்று கூட்டத்திற்குக் கூட்டம் பிரச்சாரம் செய்தார்.
அந்தத் தேர்தலில், அன்றைய சென்னை ராஜதானியில், காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை . 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திராவிடர் கழகத்தின் கோட்டையாக விளங்கிய தஞ்சை மாவட்டம் போன்ற பகுதிகளில் காங்கிரசின் வீழ்ச்சி, காங்கிரஸ் தலைவர்களைக் கலக்கமடையச் செய்தது. பெரியாரின் ஆதரவு பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.
அந்த அளவிற்குக் காங்கிரஸைத் தமது ஜென்ம வைரியாக நினைத்த பெரியார், 1954இல் முதல் மந்திரி பதவியை ராஜாஜி ராஜினாமா செய்த பிறகு, காமராஜர் சென்னை மாகாண முதல் மந்திரியானபின், மனதை மாற்றிக்கொண்டார்.
பெரியாரின் வாய்மொழிப்படியே, 1937இல் இருந்து 17 வருட காலம், எந்தக் காங்கிரஸை ஒழித்தே தீர்வது என்று பாடுபட்டாரோ, அந்தக் காங்கிரஸை, காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்கத் தாமாகவே முன்வந்தார்.
காமராஜ் ஆட்சி அமைந்த மறுநாளே , ‘விடுதலை’ பத்திரிகையில் பெரியார் கீழ்க்கண்ட தலையங்கத்தை எழுதினார்.
‘சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். திரு. காமராசர் அவர்கள் முதலமைச்சராகியிருக்கிறார். இவருக்குச் சாதியை ஒழிப்பதில் தனி அக்கறையுண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றிப் பல தடவை பேசியிருக்கிறார்.
சுயராச்சியம் வந்தபிறகு , ‘சாதி வெறி பல மடங்கு வளர்ந்துவிட்டது’ என்று பலதடவை கூறியிருக்கிறார். இந்த வெறியை ஒழித்துக் கட்டுவதற்காக, எது வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பல தடவை தெரிவித்திருக்கிறார். இவர் சாதி மாநாடுகளில் கலந்துகொள்வதில்லை என்பது நம் நினைவு.
இப்பேர்ப்பட்டவர், இனி செய்கை மூலம் தம் இலட்சியத்தைப் பெறவேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவே என்று தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றிபெற்ற உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் காங்கிரசு கட்சிக்கு வெண்சாமரம் வீசும் கட்சிகளாக ஆக்கிவிட்ட தனித்திறமைக்காகப் பாராட்ட வேண்டும். அரசியல் துறையில் இக்காரியம் எப்படிக் கருதப்பட்ட போதிலும், ‘தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி’ என்ற அவமானத்தைப் போக்கிவிட்ட வகையில், அதாவது சமுதாயத்துறையில் இக்காரியம் வரவேற்கப்படக் கூடியதுதான் என்பதே நம் கருத்து.
சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு அவருக்கும் இது ஒரு நல்ல தருணம். சுயமரியாதைக்காரர்களுக்கும் இது ஒரு நல்ல தருணம். சட்ட திட்டங்கள் மூலம் முதலமைச்சர் இக்காரியத்தைச் சாதிக்கலாம். வழக்கமான பிரச்சாரத்தின் மூலம் சுயமரியாதைக்காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம்.
புத்தர்கள் , சித்தர்கள், பிரம்ம சமாஜ் தலைவர்கள், சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்கமுடியாத ஒரு காரியத்தை, ஒரு சாதாரண முதலமைச்சர் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டார் என்ற நிலை ஏற்பட்டால், இந்திய வரலாற்றிலேயே இடம்பெறக்கூடிய சாதனை அல்லவா இது?’ விடுதலை (15.04.1954)
பெரியாரின் மன மாறுதலுக்கு என்ன காரணம்?
ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த புதிய கல்வித் திட்டத்தை, ‘குலக்கல்வித் திட்டம்’ என்று பெரியார் கடுமையாக எதிர்த்தார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை எதிர்த்து, திராவிடர் கழகத்தினர் 600 மைல் பாதயாத்திரை நடத்தி, சிதம்பரம் வந்தனர். அங்கு 22.05.1954 அன்று, அவர்களைப் பாராட்டிப் பேசிய பெரியார், தமது மன மாறுதலுக்கான காரணத்தை விளக்கினார். அவரது பேச்சு 01.06.1954 விடுதலையில் முதல் பக்கத்தில் பிரதானமாக வெளியிடப்பட்டது.
தந்தை பெரியாரின் பேச்சு, ‘இந்தப் படையினர் சென்ற மாதம் 29ஆம் தேதி புறப்பட்டவர்கள்; கால்நடையாகவே ஏறக்குறைய 600 மைல் நடந்து சுற்றி இங்கே வந்திருக்கிறார்கள்; வந்ததும், இங்கே வெற்றி கிடைக்கும் என்று கருதி வந்தவர்கள் அல்லர். இங்கே வந்ததும், சிறைக்கூடம் திறந்திருக்கும், நாம் போய் ‘ஜம்” என்று உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று வந்தவர்கள். எப்படியோ இவர்கள் ஏமாந்து போகும்படியான நிகழ்ச்சி நடைபெற்று, எல்லோரும் மகிழும்படியாக ஆகிவிட்டது.
இன்றைக்குக் காமராசர் இந்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளார். இனி பலரும் சொல்லப் போகிறார்கள்; ‘காமராசரும் பெரியாரும் ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துப் பேசுகிறார்கள்’ என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைய தினம், இக்கல்வித் திட்டம் எடுக்கப்படும் படியான செய்தி வந்தது குறித்து, நாம் பெருமைப்பட வேண்டியதுதான். நாடு முழுவதும் பாராட்டுக் கூட்டம் போடவேண்டியுள்ளது. பெரும்பாலும் அந்தப்புகழ் எல்லாம் காமராசருக்கே போகும்.
1924 முதல் 1954வரை ஒரு தமிழன்கூட முதன்மந்திரியாக வரமுடியவில்லை . முதல் முதலாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார். இவர் மந்திரிசபையும் 15 நாளில் தீர்ந்துபோகாத மாதிரி, இவர் வாழ்நாள் பூராவும் இருக்கிற மாதிரி இருக்கவேண்டும். இது நமக்குப் பெரிய வெற்றி. இந்த மகிழ்ச்சியினால், நாம் இந்த மந்திரிசபையைக் காப்பாற்றவேண்டும் என்று கருதுகிறேன். இதைப் பார்த்துச் சிலர், எனக்குக் கொள்கையே இல்லை என்று சொல்லுகிறார்கள்.
எங்களுக்கு இரண்டொரு காரியம் செய்தாலே போதும். அது என்னவென்றால், ‘கல்வித் திட்டம் கேடு பயப்பது’ என்று ஒப்புக்கொண்ட காரியத்தை உடனே சாமாளிக்க வேண்டும் என்பது. இரண்டாவது காரியம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை, சட்டப்படி இருந்ததை ‘அல்லாடி’ கெடுத்துவிட்டார். அதைப்பற்றிப் பெரிய கிளர்ச்சி செய்தோம். அதைக்கண்டு அப்போதிருந்த மந்திரிகள் நடுங்கி, அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தும்படியாக ஆகிவிட்டது.
இதன்படி ஏதோ ஒரு அளவுக்கு நம்முடைய மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கும் வசதி இருந்தது. அதை மீண்டும் இராசகோபாலாச்சாரியார் நன்கு கெடுத்துவிட்டார். அதை மீண்டும் மாற்ற வேண்டும் என்று சொன்னேன். அதற்குக் காமராசரிடமிருந்து என்னிடம் வந்தவர், தமக்கும் அதில் அக்கறை இருப்பதாகவும், தமக்காகவே அதைக் கவனிப்பதாகவும் சொன்னார்கள். அதனால் இதை ஆதரிக்க வேண்டும்.
நம்மைப் பொருத்தவரையில் லட்சியம்தான் முக்கியம். எந்தெந்தக் காரியத்தில் காமராசருக்கு உற்சாகம் கொடுக்க வேண்டுமோ, அதிலெல்லாம் அவருக்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்கிறேன்” என்றார் பெரியார்.
காங்கிரஸ் கட்சி அவரது ஆதரவைக் கோரவில்லை . காமராஜர் முதல்வர் ஆனதும் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது பெரியார் தாமாகவே முன்வந்து காமராஜருக்கு ஆதரவு தந்தார். இதனை 21.11.1955 அன்று, சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு பிறந்தநாள் விழாவில், பெரியார் ஆற்றிய உரையால் அறியலாம்:
‘காமராசருக்கும் எனக்கும் அரசியல் கருத்துகளில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும், தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதேயொழிய, மற்றப்படி எனது சுயநலத்தை முன்னிட்டோ, அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது.
குடியாத்தம் சட்டசபைத் தேர்தலில், நான் அவரை ஆதரித்தேன் என்றால், அப்பொழுதும் அவரிடம் சொல்லிவிட்டு அவரை ஆதரிக்கவில்லை. அவரும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று என்னைக் கேட்கவும் இல்லை. திடீரென்று எனக்குத் தோன்றிய எண்ணத்தின் பேரில்தான், நான் வலிய சென்று அவரை ஆதரிக்கும்படியாகியது. நானும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவனுமல்ல அவர் விரும்புவார் என்று கருதினவனுமல்ல. விடுதலை (03.12.1955)
1937 முதல் 1954வரையில் எந்த அளவிற்குக் காங்கிரசைப் பெரியார் தீவிரமாக எதிர்த்தாரோ, அதே அளவு தீவிரமாக 1954 முதல் 1967வரை காமராஜர் பெயரால் காங்கிரஸை ஆதரித்தார்.
தந்தை பெரியாரின் மரண வாக்குமூலம் :
1961 இல் தேவகோட்டையில் தந்தை பெரியார் பேசும் போது, மரண வாக்குமூலம் போல தம் உள்ளக் கிடக்கையை கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார் :
‘தோழர்களே, எனக்கு வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம், இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்த நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யவில்லை.
தோழர்களே, நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது’
பெரியாரின் மரண வாக்குமூலம் வரலாற்றில் கல்வெட்டு சொற்களாக பதிந்து விட்டது. இதை எவரும் அழித்துவிட முடியாது. பெருந்தலைவர் ஆட்சிக்கு பெரியார் கொடுத்த சான்றிதழ், ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ கிடைத்தது போலாகும்.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைவிட்டு விலகி, கட்சிப் பணியாற்ற முன்வர வேண்டும் என்ற யோசனையைக் காமராஜர் வெளியிட்டபோது, விடுதலையில் 10.08.1963 அன்று கீழ்க்காணும் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது :
‘காமராசரைப்போல மொட்டை மரமாக நின்று, நாட்டுப் பணியையே தமது ஒரே லட்சியமாகக்கொண்டு காரியம் ஆற்றும் ஒரு சிறந்த பொதுத்தொண்டரைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும்கூட வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்நிலையில், அவர் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது எந்த வகையிலும் விரும்பத்தக்கதல்ல.
அவருடைய இடத்தில் வேறு எவர் உட்கார்ந்தாலும், அவரைப்போல் நீடிக்கமுடியாது என்பதோடு, அவரைப் போன்று இன உணர்ச்சியுடன் செயலாற்றவும் முடியாது. இதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளலாம்.
காமராசர் பதவி விலகுவதை நாம் விரும்பவில்லை . காரணம், ‘மற்றவர் வந்தால் கேரளா மாதிரி இதுவும் நிலையற்ற ஆட்சி உள்ள நாடாகத்தான் ஆகிவிடும்’ என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளனர். அதனால் இன்றுள்ளது போல கல்வி, தொழில்துறையில் வளர்ச்சி ஏற்படாவண்ணம் குந்தகம் விளையும். ஆகவே, காமராசரின் இந்த யோசனை, கோளாறுகள் பெருகிக் குழப்பங்கள் மலிந்த கட்சி அமைப்புகள் உள்ள மாநிலங்களுக்குத்தான் தேவையே தவிர, தமிழ் நாட்டிற்கல்ல.
‘யோசனை கூறிவிட்டு, நாமே பதவியிலிருந்தால் மற்றவர்கள் என்ன நினைக்கக்கூடும்’ என்று காமராசர் எண்ணக்கூடாது. நோயாளிதான் மருந்து சாப்பிடவேண்டுமே தவிர, டாக்டரே ஏன் சாப்பிட்டுக் காட்டக்கூடாது என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
இத்தனை ஆண்டுகளாக, காமராசர் ஆட்சி சாதித்துள்ள காரியங்கள் மகத்தானவை. அவைகளை உடைக்கக்கூடிய ஒருவர் வந்துவிட்டால், தமிழர்களுக்கு அதைவிடக் கேடு வேறு இருக்கமுடியாது.
‘நெருக்கடியான இந்நேரத்தில், நீடிக்க வேண்டியது நேருவின் தலைமையே’ என்று பலர் கருதுவதுபோல, தமிழகத்தைப் பொருத்தவரை, காமராசரின் தலைமையும் நீடிக்க வேண்டியது அவசியமாகும்.
இதைக் காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணரவேண்டும். ஒரு பிரச்சினையைத் தீர்க்கப்போய், புதிதாகப் பல பிரச்சினைகளை உண்டாக்கிக்கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது.
கடைசியாகச் சொல்கிறோம். தமிழ்நாட்டின் நலனைத்தான் காமராசர் பெரிதாக நினைக்க வேண்டும்; கட்சி நலன் பிறகுதான். மூன்றரை கோடி தமிழர்களின் நல்வாழ்வைக் கருதியே நாம் இதை வலியுறுத்திக் கூறுகிறோம். ஒளிவீசும் தமிழகம் மீண்டும் இருளுக்கு ஆளாகக்கூடாது. அது கேடு! பெருங்கேடு !’ என்று எழுதப்பட்டிருந்தது.
1967 தேர்தலுக்கு முன்பு காமராஜர் ஆட்சி பற்றித் தலையங்கம் எழுதிய பெரியார், ‘புத்தர் காலத்திற்குப்பின்பு இப்போதுதான் காமராசர் காலம் வந்திருக்கிறது. புத்தன் கையில் ஆட்சி இருந்தும், புத்தன் பிரச்சாரத்தினாலேயேதான் சில காரியங்களைச் சாதித்தான். ஆனால், காமராசர் தம் கையில் சர்வாதிகார ஆட்சி இல்லாதிருந்தும், ஆட்சியினாலேயே காரியம் சாதிக்கத் திட்டமிட்டு, மனித தர்மம் செழிக்கக் காரியம் செய்து வருகிறார் என்று மனம் திறந்து பாராட்டினார்.
பிரதிபலன் பாராது வலியவந்து, காமராஜர் பெயரால் காங்கிரஸை ஆதரித்து, காமராஜர் ஆட்சியை பாதுகாத்து, சாதனைகள் குறித்து அந்த 13 ஆண்டுகளில் பெரியார் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிற ஒவ்வொரு எழுத்தும், காமராஜர் ஆட்சியின் பொற்காலத் தன்மையைப் பொன் ஏடுகளில் பொறித்து வைத்ததுபோல மின்னிக்கொண்டிருக்கிறது.
காமராஜர் ஆட்சியின் பொற்காலப் பெருமைகளுக்குப் பெரியார் தந்த இந்தச் சான்றிதழ்களைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
(நன்றி : ஆ. கோபண்ணா எழுதிய பெரியாரும், பெருந்தலைவரும் என்ற நூலில் இருந்து சில பகுதிகள்)