டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவலநிலையைப் பார்க்க முடியவில்லை என்று கூறி, டெல்லி எல்லையில் சீக்கிய மத போதகர் பாபா ராம் சிங் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் கூட்டமைப்புக் குழுவின் நிர்வாகி சத்யவன் கூறும்போது, ”போராட்டத்தில் விவசாயிகள் படும் வேதனையை எண்ணி அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதிவைத்துள்ள கடிதம் மூலம் தெரியவருகிறது” என்றார்.
ராம் சிங் எழுதிவைத்துள்ள கடிதத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசு நீதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் உரிமைகளுக்காகச் சாலையில் போராடும் விவசாயிகளைப் பார்த்து எனக்கு வலி ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடக்குவது ஒரு பாவம். அடக்குமுறையை அனுபவிப்பது ஒரு பாவம் என்று குறிப்பிட்டுள்ள அவர். விவசாயிகளுக்காக ஒவ்வொருவரும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். கடவுளின் சேவகனாகிய நான், என் உயிரையே தருகிறேன். விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்தும், கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
65 வயது சீக்கிய மத போதகரான ராம் சிங், பஞ்சாப் மாநிலம் பட்டலாவைச் சேர்ந்தவர். கர்னாலில் உள்ள நானாக்ஸர் சிங்காராவில் மத போதகராகும் முன்பு, ஜக்ரோவில் நானாக்ஸர் கலேரனில் போதகராக பணியாற்றியிருக்கிறார். போராடும் விவசாயிகளுக்காக. ஏற்கனவே அவர் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி எல்லையில் அமைந்துள்ள குண்ட்லி என்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட ராம் சிங்கின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிங்காரா கிராமத்தில் உள்ள நானாக்ஸர் குருத்வாராவுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோடி அரசின் 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் 23 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு 20 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிந்துள்ளனர். இதுவரை, மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு எதிரான அந்த சட்டங்களை இன்றும் பிரதமர் மோடி நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.