ராஜிவ் கலாரசனையுள்ளவர் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும். எங்கள் உறைவிடத் தோட்டத்திலிருந்த, சற்று வேறுபட்ட செடி கொடிகளை வைத்து வளர்த்ததிலிருந்து பிள்ளைகளது உயர்ந்த பார்வையையும் புலனுணர்வையும் வளர்க்கும் வழிவகைகளைப் பிரித்து உணர்த்தினார். புகைப்படம் எடுக்கும் அவர்களது கலை ஆர்வம் வளர்ந்ததும், அக்கலையின் தொழில் நுட்பம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். ராகுல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘‘நீ புகைப்படங்களை எடுக்கிறாய் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார். அதில் ‘‘நீ புகைப்படம் எடுக்கும்போது, இருக்கிற வெளிச்சம், புகைப்படச் சுருளுக்கு நீ தரும் ஒளி ஆகியன பற்றி ஒரு குறிப்பு எழுத முயற்சி செய். அதன்மூலம் படம் காட்சியாக வெளியாகும்போது, அதில் நீ தவறு செய்திருந்தால், அந்தத் தவற்றை உணரலாம். நீ இதற்காக ஒரு குறிப்பேடோ, அல்லது ஒரு கையேடோ வைத்திருத்தல் வேண்டும். அதில் இதுபோன்ற செய்திகளைக் குறிக்கலாம். அதாவது, படம் & 1 சூரிய ஒளி, வேகம் 250, எஃப் 16 என்றோ, அல்லது நீ கொடுத்த அளவையோ குறித்துக்கொள். இதன் மூலமாக உன் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” என அறிவுரை வழங்கியிருந்தார்.
ராஜிவிடமிருந்த மற்றொரு அளவிடமுடியாத ஆர்வம், ஒருவகைப் பொழுதுபோக்கு, ‘ஹாம் வானொலி’ நிலையத்தை இயக்குவது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஹாம் வானொலி (Radio Ham) வைத்திருப்பவர்களோடு தொடர்புகொள்வதை, இரவில் வெகுநேரத்திற்குப்பின் அவரருகில் உட்கார்ந்து கவனித்திருக்கிறேன். 1974இல் ‘நீயே செய்து கற்றுக்கொள்’ என்னும் அடிப்படையில் ‘ஹாம் வானொலிக் கருவிகள் கொண்ட பெட்டி’ ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி, கடினமாக உழைத்து, முதன்முதலாக அவர் ஹாம் வானொலியைத் தாமே உருவாக்கிக் கொண்டார். என்னையும் குழந்தைகளையும் பொழுதுபோக்காக இந்த ஹாம் வானொலியை இயக்கிப் பழக வலியுறுத்தினார்.
தம் தாத்தாவுடன் வாழ்ந்த காலத்தில், பல்வேறு விலங்குகளை வளர்த்தார். பாண்டா கரடி, புலிக்குட்டிகள் போன்றன அவற்றில் சில. வேறு நாட்டு விலங்கினங்களும் அவற்றில் உண்டு. அவைகளுள் குறிப்பாகப் பொன்னிற வேட்டை நாய்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவற்றுள் ஒன்று ‘சோனா’ என்ற கலப்பின நாயாகும். சிறுவனாக இருந்தபோது, பஹல்காம் சென்றபோது அதை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தார். குழந்தைப் பருவத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் பலவும், நாய்கள் பற்றியனவாகவே இருந்தன.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ராகுலுக்கு ராஜிவ் ஒரு கடிதம் எழுதினார். அது தம் மகனை எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என ஆயத்தப்படுத்தும் அறிவுரைக் கடிதமாக இருந்தது எனக் கூறலாம். அதன் உள்ளடக்கத்தைச் சற்றே கவனியுங்கள். ‘‘1969இல் எங்களிடம் ஒரு நாய்க்குட்டி தரப்பட்டது. அதனை ‘ரெஷ்மா’ என நாங்கள் அழைத்தோம். அந்தப் பெண் நாய், எனக்கு மிகவும் விருப்பமான வளர்ப்பு நாயாக மாறியது. ஆனால், 1982இல் அது இறந்தபோது, நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ராகுல், நீ இந்தக் கடிதத்தைத் திறக்கும்போது, உனக்குத் தெரிந்திருக்கும். இன்று பிற்பகல் 12.25க்கு ரெஷ்மா இறந்துவிட்டது. நீண்ட காலமாக, புற்றுநோயால் அது பாதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அதனால் மிகவும் மனச்சோர்வு அடைந்தோம். ஆனால் இதுபோன்ற நேரத்தில், ரெஷ்மாவோடு நாங்கள் கழித்த மகிழ்ச்சியான நேரத்தை நினைவுகூர்தல் வேண்டும். அதை வெளியே அழைத்துச் சென்றபோது, அதனுடன் நீ எப்படி விளையாடினாய், அது எப்படி எல்லாம் வேடிக்கை செய்தது என்பதை எண்ணிப் பார்! முதல் தடவை அது நோயுற்றது, இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது! அன்று இரவு முழுவதும் அதனுடன் உட்கார்ந்து இருந்தோம். சொட்டுக் குழாய் மூலம் அதற்கு உணவு அளித்தோம். அது வளர்ந்த காலத்தில், சிறு குட்டியானாலும், ஒரு எஜமான விசுவாசமுடையதாக மாறியது. நாமெல்லாரும்கூட ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்து வாழவேண்டும். உயிரோடிருப்பவர்களுக்கு நான் கூறுவது கசப்பாக இருக்கலாம். இதுபோன்ற சமயத்தில், கடந்த காலத்தை நினைவுகூரும்போது, அவைகளிடம் ஒருவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உண்மையாகவே கடந்த காலம்பற்றி வருத்தம் இல்லையானால், நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளலாம். அதற்கு மாறாக இருந்ததாக நீங்கள் எண்ணினால், உங்களைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் அத்தகைய துயரம் உங்களுக்கு வராது” என்று அந்தக் கடித்தில் எழுதியிருந்தார்.
சப்தர்ஜங் சாலை வீட்டின் ஜன்னல்மூலம், ராஜிவ் ‘புல்புல்’ என்னும் பறவை ஒன்றின் கூட்டைக் கவனிப்பது வழக்கம். புதிதாகச் சிறகு முளைத்ததுபோன்ற அந்தப் பறவை எப்போதாவது வந்தால், அதை விருப்பத்தோடு பேணிப் போற்றுவார். அது காயமடைந்திருந்தால், சாந்தினி சவுக்கில் உள்ள பறவைகள் மருந்தகத்துக்கு அனுப்புவார். ‘ரேஸ் கோர்ஸ்’ சாலையில் ஒருமுறை ஒரு மரப்பொந்தில் ஒரு நாகப்பாம்பைக் கண்டபோது, அதற்குத் தீங்கிழைக்க எவரையும் அனுமதிக்கவில்லை. தோட்டத்தில் பறவைகளுக்கு ஒரு மண் கலத்தில் சாமை, தினை போன்றவற்றை அவை சாப்பிடப்போட்டு வைத்திருப்பார்.
ஜன்பத் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தபோது, எங்கள் வீட்டு அறைகளில் சிட்டுக் குருவிகள் கட்டிய கூடுகளைக் கலைக்கக் கூடாதென்று கட்டளையிட்டார். எங்கள் படுக்கை அறைக் கதவைத் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாலையிலேயே எழுந்திருப்பார். அப்போது பறவைகள் குஞ்சுகளுக்கு இரைதேட வெளியே பறந்து செல்லும். அப்போதெல்லாம் மின் விசிறியைச் சுழலவிட மாட்டார். சுற்றுச்சூழல் வெப்பமாக இருந்தாலும் அவற்றிக்கு மின் விசிறியால் காயம் ஏற்படுமாகையால் அவை வெளியே பறந்துபோகும்வரை மின் விசிறியை இயக்க மாட்டார்.
பயணம் செய்யும்போது வழியில் சாலை விபத்து ஏதேனும் ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி தேவைதானா எனக் கேட்காமல் மேலே செல்ல மாட்டார். தேவைப்பட்டால் அவர்களை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்று தனிக் கவனமும் செலுத்துவார். இத்தகைய சிறந்த குணமுடையவர் ராஜிவ். ராஜிவின் வெளிப்படையான அன்பு, இயல்பான பரிவு, நகைச்சுவை உணர்வு, படாடோபமான பகட்டுத்தனம் இல்லாமை ஆகியவை பலரை அவரிடம் ஈர்த்தன. தூரத்து உறவினர்கள், நண்பர்கள், பழக்கப்பட்டவர்கள் எனப் பரந்துவிரிந்த குழாத்தோடு அவர் அன்போடும் அக்கறையோடும் கலந்து உறவாடினார். அவருக்குள்ளே அடங்கியிருந்த மனநிறைவின்மூலம், அவரது கனிவு, பரிவு, அன்புடைமை, கருணை முதலிய பண்புகள் வெளிப்பட்டமையை இப்போதும் என்னால் எண்ணிப் பார்க்கத்தான் முடிகிறது. அதை விவரிக்க முடியாத அமைதியான தன்னிறைவு என்பேன். நட்பு வட்டத்தின் ஆழ்ந்த தன்மையின் தேவையைத் தாம் மட்டும் அனுபவித்தார் எனலாம். தம் குடும்பத்தாரைத் தவிர, அவருக்கிருந்த மகிழ்ச்சி யுணர்வையோ, துக்கத்தையோ, பரபரப்பையோ அவர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டது கிடையாது.
தூரத்து உறவினர்களில் தம் தாயோடு நெருங்கிய அன்புடையவர்களிடம் அவர் சற்று அணுக்கமாகவே இருந்தார். தம் தாயார் போலவே காந்தி குடும்பம், கவுல் குடும்பம், நேரு குடும்பம் ஆகியவற்றோடு மிகவும் நெருக்கமாகப் பழகினார் எனலாம்.
இனக் கூட்டங்களில் கலந்துகொள்வதை அவர் விசேஷமாகக் கருதவில்லை. ஆரம்ப காலத்தில், வீட்டைவிட்டு வெளியில் சென்று, ஒத்த வயதுடையோருடன் பொழுதைக் கழித்த ராஜிவ், தம் காலத்துப் பிற இளைஞர்களைப் போன்றே காணப்பட்டார்.
பள்ளியில் படித்த காலத்திலோ, கல்லூரியில் கற்ற காலத்திலோ, அல்லது தொழிலில் ஈடுபட்ட காலத்திலோ ராஜிவுடன் பழகியவர்களே ராஜிவின் நண்பர்களாக இருந்தார்கள். 1982இல் ராகுலுக்கு எழுதிய கடிதங்களுக்குள் ஒன்றில், நட்பு பற்றிய தீர்க்க தரிசனமான கருத்தை அவர் கூறி இருக்கிறார். ‘‘நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம் என்பதை நீ உணர்வாய்! உனக்கு அதிர்ஷ்டம் இருக்குமானால், நீ ஓரிரு நல்ல, நம்பத்தக்க நண்பர்களைப் பெறுவாய்! அவர்கள் உன் சுகதுக்கங்களில் உன்னோடு இருப்பார்கள்! அப்படி இல்லையெனில், மனம் கலங்காதே! நீ வயது முதிர்ந்தபின், உன்னுடைய நண்பர்கள் என்று நினைத்தவர்கள், அப்படி இல்லையே என்பதை உணர்வாய். நீ நல்ல நண்பர்களை அடைய விரும்பினால், நீ அப்படியிருக்கக் கற்றுக்கொள்! எதையும் கொடுத்து மகிழ்வடையக் கற்றுக்கொள்!” என்று ராஜிவ் அக்கடித்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜிவ் மிகவும் ஆழ்ந்து உணர்ந்து நம்பிய ஓர் அரிய வாசகம் இது!
‘‘ஒன்றைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் நீ மற்றொருவருக்கு ஒன்றைக் கொடுத்தால், அது பயனற்றதாகும். சுயநலமின்றி, எதிர்பார்ப்பின்றி ஒன்றைக் கொடுப்பதிலேதான் மனநிறைவை ஒருவன் அடையலாம்”.
இப்படி எண்ணியதன் விளைவாகத்தான் தம்மை ஏமாற்றிய நண்பரிடம்கூட ராஜிவ் வெறுப்புணர்வு கொண்டதில்லை. தாம் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்டதாக ராஜிவ் மனத்தளவில் காயப்பட்டார். ஆனால், அதற்குத் தாமே காரணம் என்று எண்ணிக் கொள்வார். தம்மை வஞ்சித்த நண்பரைக் குறைகூறுவதற்குப் பதில், தம்மிடம் உள்ள தீர்மானிக்கும் திறனை நொந்து கொள்வார். பிற்காலத்தில் அரசியல் உலகில் கருத்து வேறுபாடுகள் காரணத்தால் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தபோதுகூட, ராஜிவ் இவ்வாறே எண்ணித் திருப்தி அடைந்துகொண்டார். இதுவே அவருடைய இயல்பு. ஒருவேளை ராஜிவ் இத்தகைய மனச் சமநிலையைப் பெற்றிருந்த காரணத்தால்தான், தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் சமாளிக்க முடிந்திருக்குமோ என இப்போதும் நினைக்கிறேன்.
ராஜிவுடன் விமானம் ஓட்டிய சகதோழர்கள், அவரின் திட்டமிடுதல், அட்டவணைப் படுத்துதல், விமானத் தொழில் நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் காட்டும் நுணுக்கமான கவனம் ஆகியவற்றை விரும்பாமல் எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாடு கொண்டவர் எனப் போற்றி மதித்தார்கள். அரைகுறையாகச் செய்யப்படும் பணி ராஜிவுக்குப் பிடிக்காது. அவருடன் பணிபுரிந்த சக விமானிகள், ஏதாவது அசௌகரியம் காரணமாக முன்வைக்கும் அவர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வார். பதவி உயர்&தாழ்வு முறைமை பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார். தொழிலை மதிப்பதை அவர் தம் தந்தையிடம் கற்றார். சில நேரங்களில் ‘‘தொழில் செய்யும்போது கையில் எண்ணெய் அழுக்குப்படிவதை எண்ணி, பணி செய்யத் தயங்காதே” என்று அறிவுரை கூறுவார். வேலை நேரத்தில், சட்டையை மடித்து விட்டுக்கொண்டு, தொழிலின் தவற்றைத் திருத்த, பொறிகளைப் பொறுத்தப் பொறியாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வார். செய்யும் தொழில்மீது அவர் கொண்டிருந்த மதிப்பு காரணமாக வேலையில் கவனமின்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
எதிர்பாராத விமான விபத்தொன்றில், 33 வயது சஞ்சய் இறந்த சோக சம்பவத்தின்போது, ராஜிவும் நானும் என் பெற்றோரைக் காணக் குழந்தைகளுடன் இத்தாலி சென்றிருந்தோம். குடும்பத்திலிருந்த ஒவ்வொருவரையும் பெரிதும் பாதித்த இந்த நிகழ்வு, ஒரு ஈடுசெய்ய முடியாத, கொடுமையான சோக நிகழ்வாகவே அமைந்தது. குறிப்பாக, ராஜிவின் தாயார், தைரியமும் நிதானமுமுடைய என் மாமியார் மனம் நொறுங்கிப் போனார். அவர் இனி உதவி என்று நாடுவதற்கு ஒரே ஒரு மனிதர்தான் உலகில் உண்டு!
பதினைந்து ஆண்டு காலம் தெளிவாக, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டிருந்த எனக்கும் ராஜிவுக்கும் இப்போது ஒரு மன இருக்கம்! அவருக்காக, எங்களுக்காக, குழந்தைகளுக்காக, நாங்கள் ஒருவரையொருவர் விரும்பும் வாழ்க்கைக்காக, அவர் நேசிக்கும் தொழில் விமானம் ஓட்டுதல்! நாங்கள் கட்டிக்காத்த நட்புக்காகவும் மனித உரிமை காப்பாற்றப்படவும் அச்சிக்கலான தொழிலை நான் எதிர்த்தேன்; புலி போலச் சீற்றத்தோடு எதிர்த்தேன்.
இதுவரை, தூரத்திலிருந்தே உலக அரசியலை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆசைக்கும் நோக்கத்திற்கும் இடையே இடப்பட்ட ஓர் இக்கட்டான கோட்டை, இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அரசியல், பண்பாடு பற்றிய பாரம்பரியம் காப்பாற்றப்படவும், வாழும் சமுதாயம் முன்னேறவும் சிலருக்கு அதிகாரம் ஒரு முக்கியக் கருவி! லட்சியம் நிறைவேற மிகவும் தேவையான ஒன்று அதிகாரம்! சிலருக்குத் தனிப்பட்ட, அல்லது குழு ஆதிக்கத்திற்கு இது தேவையான ஆயுதம். முதல் வகையில் கிட்டும் பலன் தன்னிறைவு தரும்! இரண்டாம் வகையில், ஆதிக்க வலை & வெளியுலக மாயை, முகஸ்துதி, டம்பம், ஆடம்பரமே மிஞ்சும்!
ராஜிவுக்கு அதிகாரத்தின் சுமை நன்கு தெரியும். வேண்டுமென்றே திரித்துப் பேசி ஏற்பட்டதால் உண்டான கருத்து வேறுபாட்டால் உருவாகும் தனிமனிதனின் இயலாநிலையை அவர் நன்கு அறிவார். எனவே, அமைதியாக இருக்கத் தேவையான மனோபலத்தைப் பெற ராஜிவ் வேண்டினார். முடியாத ஒன்றை எதிர்த்துத் தேச முன்னேற்றத்திற்காக நாள்தோறும்-, ஆண்டாண்டாகவும் தம் தாய் நடத்திய போராட்டத்தை அவர் அருகிலிருந்து கண்கூடாக் கண்டுள்ளார். என் மாமியார், அவரைப் பதவிப் பித்தர்போல எண்ணியோரை எதிர்த்துத் துணிந்து நின்றதை ராஜிவ் நேரில் கண்டவர் அல்லவா?
… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்