தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கட்டுக்கட்டாக பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவே ?
கடந்த இரண்டு மாதங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 6.96 கோடி ரொக்கமும், 7 கிலோ தங்கமும், 10 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் ரூ. 25 லட்சம், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டிலிருந்து ரூ. 3.25 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு அதிகாரிகளிடமும், அலுவலகத்திலும் எவ்வளவு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இது ஏதோ அதிகாரிகள் மட்டத்தில் நடப்பதாக யாரும் கருத முடியாது. இதற்கு மேலாக அமைச்சர்களின் ஆசியோடு, ஆதரவோடு தான் இத்தகைய லஞ்ச லாவண்யங்கள் நடைபெற முடியும். இதுவரை 33 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கிற அமைச்சர்கள் குறித்து விசாரிக்காமல் அதிகாரிகளிடம் விசாரிப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது ? தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெற்று வருகிற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டாலொழிய மக்களுக்கு விமோசனம் இல்லை.
15 நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 வரை பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறதே ?
மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தது முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பதில்லை. அதற்கு மாறாகக் கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விலை ரூ. 72.42. இதில் மத்திய – மாநில அரசுகளின் வரி ரூ. 42.47. அதேபோல, டீசல் விற்பனை விலை ரூ. 82.34. இதில் மத்திய – மாநில அரசுகளின் வரி ரூ. 51.98. கலால் வரி விதிப்பின் மூலமாகக் கடந்த ஆறரை ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 9 லட்சம் கோடியை வருவாயாகப் பெற்றிருக்கிறது.
மக்கள் மீது சுமையைக் குறைக்க அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஆண்டுதோறும் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையைக் குறைப்பதற்காக மானியம் வழங்கியிருக்கிறது. ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமை ஏற்றுகிற மக்கள் விரோத அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.
மதுரைக்கு அருகில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 2019 இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லையே ?
எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழக அரசு கையகப்படுத்திய 180 ஏக்கர் நிலத்தை இதுவரை மத்திய அரசிடம் வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் அமையும் இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டதைத் தவிர, எந்த பணிகளும் நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஜப்பான் நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வருமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளனவே ?
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இருந்த போது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தார். இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர் அவர்மீது இருபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளைத் தொடுத்தனர். இதை எதிர்கொள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் அடக்குமுறையை வீரத்துடன் எதிர்கொண்டவர் இளங்கோவன். அன்று தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் ஆதாரமில்லாத காரணத்தால் இன்றைக்கு நீதிமன்றங்கள் ரத்து செய்து வருகின்றன. இது தலைவர் ஈ.வி.கே.எஸ். அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி அமைக்கப் போவதாக ரஜினியும், கமலும் கூறியிருக்கிறார்களே?
அ.தி.மு.க. வை நிறுவிய எம்.ஜி.ஆரின் ஆட்சி என்று கூறாமல், இன்றைய அ.தி.மு.க. வினர் அம்மாவின் ஆட்சி நடப்பதாகவே கூறுகிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கவே அ.தி.மு.க.வினர் அஞ்சி நடுங்கினார்கள் என்பதை எவரும் மறந்திட இயலாது. அ.தி.மு.க.வினரே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மறந்துவிட்ட நிலையில் ரஜினியும், கமலும் அவர் மறைந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிப்பிடிப்பது ஏனோ?
தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம் என்று கூறி புதிய அவதாரம் எடுத்திருக்கிற ரஜினிகாந்த் மனைவி மீது அவமதிப்பு வழக்குத் தொடுக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறதே?
ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் சார்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்கள். இதில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை பாக்கித்தொகை 1 கோடியே 99 லட்சம் ரூபாய். இதைச் செலுத்தத் தவறிய லதா ரஜினிகாந்த் மீது தான் அந்த இடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட்டு கடுமையான நிலை எடுத்து எச்சரித்துள்ளது.
ஆஸ்ரம் பள்ளி இருக்கும் உரிமையாளருக்கு உரிய வாடகை செலுத்தாமல் சண்டித்தனம் செய்கிறவரை மனைவியாகப் பெற்றிருக்கிற ரஜினிகாந்த், ‘அதை மாத்துவோம் இதை மாத்துவோம்’ என்கிறாரே, எதை மாற்றப் போகிறார்? முதலில் மனைவியின் போக்கை மாற்றட்டும். பிறகு சமூகத்தை மாத்துவது குறித்து ரஜினி சிந்திப்பது நல்லது. ஊருக்கு உபதேசம் செய்கிற ரஜினி முதலில் தனது மனைவிக்கு செய்யட்டும்.
சமஸ்கிருத மொழியில் கட்டாயமாகச் செய்தி வாசிக்க வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசின் பிரச்சார் பாரதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதே?
கட்டாயமான சமஸ்கிருத ஒளிப்பரப்புக்கான உத்தரவு இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மொழியை மத்திய பா.ஜ.க. அரசு திணிக்க முயல்வதை எவரும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் போது வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்? அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளைப் புறக்கணிப்பது நியாயமா? 14 ஆயிரம் பேர் மட்டுமே அறிந்த மொழிக்குக் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்குவது அவசியம் தானா? சமஸ்கிருத கலாச்சாரத்தை இந்திய மக்கள் மீது திணிக்க முயலும் மோடி அரசின் சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.