சமீபத்தில் 3 விவசாய சந்தை சீர்திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தேசிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா,கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயச் சந்தைகளில் உள்ள நீண்ட காலப் பிரச்சினைகளை மையமாக வைத்துப் பரவலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், விவசாயப் பொருட்கள் வினியோகம் மற்றும் சேமிப்பு முறையை ஒழுங்குபடுத்துகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சேமித்து வைக்க வழிவகை செய்கிறது. விலை உத்தரவாதம் மற்றும் விவசாயி பணிகள் சட்டத்தின் விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், விவசாயம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு வழி ஏற்படுத்துகிறது. அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து, விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யத் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகச் சட்டம் அனுமதிக்கிறது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் நிலைமை:
இந்த விவசாயச் சட்டங்கள் விவசாயச் சந்தையில் போட்டியை ஏற்படுத்தி உங்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தித் தரும் என்று கூறி, விவசாயிகளைச் சமாதானப்படுத்த மத்திய அரசு முயல்கிறது. எனினும், புதிய விவசாயச் சட்டங்களால் தங்கள் பொருளாதார நிலைமையைச் சீர்குலைத்துவிடும் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். இவர்களது அச்சம் எதார்த்தமானது தான். இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கை நிலை தொடர்பான பிரச்சினையில், குறிப்பாக விவசாயத்தில் (1 ஹெக்டேர் அல்லது 2.47 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள) ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் அச்சத்தில் உண்மை இருக்கிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விவசாயக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில், 86 சதவிகிதம் பேர் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தான். இவர்கள் ஏற்கனவே கடன் சுமை, விளைபொருட்களுக்கு குறைந்த விலை, நீர்ப்பாசன வசதியின்மை மற்றும் விவசாய உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் பயிர்ச் சேதம் போன்ற பிரச்சினைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாயச் சட்டங்கள், தங்கள் அடிப்படைப் பிரச்சினைகளை அர்த்தமுள்ள வழிகளில் தீர்த்து வைக்காது என்று நம்புகிறார்கள். அதோடு, தங்களைச் சூழ்ந்துள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் மேலும் மோசமாகும் என்று அஞ்சுகிறார்கள். இருந்தாலும், இந்தச் சட்டங்கள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான இரண்டாவது சுதந்திரம் என்று நரேந்திர மோடி அரசு கூறுகிறது. இந்த வாதத்தின் மீது தான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற்று, கொள்முதலில் உறுதியளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினாலும், பிரதமர் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். விவசாயிகளின் நம்பிக்கை இழப்பைப் புரிந்து கொள்வது கடினம் ஒன்றும் கிடையாது. கடந்த 2019 ஆம் ஆண்டு அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை. மாநில அரசுகளே கொள்முதல் செய்யும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று, 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரும் முன்பே, விவசாயச் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஆகும் மொத்த செலவிலிருந்து ஒன்றரை மடங்கு அதிகம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதும், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ, கொள்முதல் குறித்தோ 3 விவசாயச் சட்டங்களிலும் குறிப்பிடப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தித் தருவதாகக் கூறிக்கொண்டே, இந்த சட்டங்களின் மூலம் தனியார் சந்தையைத் திறப்பதுதான் அரசின் நோக்கம். தனியார் வர்த்தகம் மற்றும் விவசாய உற்பத்தியை விதிமுறைகளை நீக்கி, ஒப்பந்த விவசாயத்தின்படி தனியார் கார்பரேட் நிறுவனங்களை உள்ளே அனுமதிக்க இந்த சட்டங்கள் வழிவகுக்குமோ? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இது, பொது கொள்முதல் முறையை முற்றிலும் அழிக்கும் செயல் என்பதையே விவசாயிகளின் பயம் வெளிப்படுத்துகிறது.
வர்த்தகர்களிடம் போட்டி ஏற்படும்போது, விவசாயிகளுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்பதே, இந்த சட்டங்களை ஆதரிப்போரின் கருத்தாக உள்ளது. இத்தகைய கருத்து அர்த்தமற்றது. இப்போது, விவசாயப் பொருள் வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்கள் இல்லாதது போல் இவர்கள் பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 95 சதவிகித விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தைத் தனியார் நிறுவனங்களே கையாண்டன. வெறும் 5 சதவிகித விவசாய உற்பத்திப் பொருட்களை மட்டுமே, அரசு கொள்முதல் செய்தது. ஏற்கனவே, 95 சதவிகித சந்தையை ஆக்கிரமித்துள்ள தனியாரால், விவசாயிகளுக்கு நல்ல விலையைத் தரமுடியாதபோது, அரசின் 5 சதவீத கொள்முதல் விவசாயிகளுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்?
குறைந்தபட்ச ஆதரவு விலையும் கொள்முதலும் :
விலை நிர்ணயக் கொள்கையைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயத்தில் அதிக முதலீடு செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதேசமயம், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பொது வினியோக முறையின் மூலம் அவர்களுக்கு நியாய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு விதைப்பு பருவத்தின்போதும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கிறது. அரசு ஏஜென்சிகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் அரசு நிர்ணயித்த ஏஜென்சிகள் மூலம் கொள்முதல் செய்யும் போது, குறிப்பிட்ட விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கீழே போகாது.
விவசாயச் செலவு மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரையின்படியே குறைந்தபட்ச ஆதரவு விலை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் கற்பனையான செலவையே சிஏசிபி கணக்கில் கொள்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயிக்காமல், கற்பனை விலையை சிஏசிபி நிர்ணயிப்பதே உண்மை. மாநில அரசுகளே அதிக அளவு கொள்முதல் செய்வதால், கோதுமை மற்றும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயிப்பதே சரியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு தொடராது என்று புதிய சட்டங்களில் சொல்லப்படவில்லை என்றாலும், விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் மூலம் நடைபெறும் கொள்முதல் ரத்து செய்யப்படும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையும் தானாக ரத்தாகி விடும் என்பதே விவசாயிகளின் அச்சம்.
நெல் மற்றும் கோதுமையைத் தவிர, மற்ற பயிர்களுக்கான பொது கொள்முதல் கொள்கை வலுவற்ற நிலையில் தான் உள்ளது. கோதுமை மற்றும் நெல் 40 சதவீதம் அரசால் கொள்முதல் செய்யப்படும் போது, தானியங்கள் 5 சதவிகிதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. தானியங்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலான பயிர்கள் குறைவாகக் கொள்முதல் செய்யப்படுவதால், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. அக்மார்க்நெட் தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டு கரிப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாகவே பருப்பு வகைகளை விற்றுள்ளனர். வலுவான கொள்முதல் கொள்கை இல்லாமல், குறைந்தபட்ச ஆதரவு விலையை சம்பிரதாயம் போல் அறிவிப்பது, அனைத்துப் பயிர்களின் விலையை அதிகரிக்க நிச்சயம் உதவாது.
3 புதிய விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரும் முன், கடந்த 2015 ஆம் ஆண்டு விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களின் கட்டுப்பாடுகளை நீக்கவும், அரசின் கொள்முதலைக் குறைக்கவும் சாந்த குமார் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. விவசாய உற்பத்திச் சந்தைக் குழுவின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முதலீடு செய்யாததும், அரசின் கொள்முதல் குறைந்ததாலும், ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அரசு கொள்முதலில் இருந்த வெற்றிடம் தனியாரைக் கொண்டு நிரப்ப அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களால் விவசாயிகளுக்குப் பிரச்சினை இருப்பதையோ அல்லது இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையோ மறுப்பதற்கில்லை. அதேசமயம், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவில் சீர்திருத்தம் கொண்டு வருவது வேறு; அதனை முற்றிலும் அழிப்பது வேறு. இத்தகைய நடவடிக்கையால், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்குமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயப் பொருட்களை வாங்க விவசாய உற்பத்திச் சந்தைக் குழுக்களுக்கு வெளியே அனுமதி கொடுத்தால், விவசாயிகளுக்குத் தேவையான நல்ல விலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.
குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதலை விவசாயிகள் ஏன் கோருகிறார்கள்? :
குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாகவே விவசாயப் பொருட்கள் விற்கப்படுவதுதான் எதார்த்தமான உண்மை. பயிர் உற்பத்திச் செலவை விடக் குறைந்த விலைக்கே, விளைபொருட்களை விவசாயிகள் விற்கின்றனர். இதுவே வெளிச்சந்தையில் விலை, ஏற்ற இறக்கத்தால் ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவானது. விளைபொருட்களுக்கு அரசே கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. மேலும், அறுவடையின் போது செலவை விட விலை குறைவாக இருந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் விருப்பமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு விளைபொருட்களைச் சேமித்து வைக்கும் வசதி இல்லை. அதோடு, விவசாயிகளுக்கு உடனே பணம் கிடைத்தால்தான், மீண்டும் அடுத்த சாகுபடி செய்யவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும் முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்ய அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என்பதையே, இத்தகைய சட்டங்கள் முன்கூட்டியே தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்கி, பொது வினியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுப்பதுதான் அரசுக்கு இப்போது பிரச்சினை.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பொது வினியோகத்துக்குத் தேவையான உணவு தானியங்களைத் தனியார் வர்த்தகர்களிடம் நேரடியாக வாங்கவேண்டும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, உணவு தானியங்களைச் சேமிக்க வேண்டிய தேவை இருக்காது. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின்படி, விவசாயப் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவர்களிடம் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கலாம். தேசிய உணவு பாதுகாப்புக்காக உணவு தானியங்களைச் சேமிக்கவோ, அதனைப் பராமரிக்கவோ வேண்டிய அவசியமும், செலவும் அரசுக்கு ஏற்படாது.