1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில் விமானப் பயிற்சியைத் தொடங்கினார். பிரிந்திருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். இத்தாலி வருவதற்காக அவர் பணம் சேமித்தார்.
‘‘முன்பே நான் எழுதாததற்கு வருந்துகிறேன். நாங்கள் (ராஜிவும் அவர் நண்பரும்) கட்டடப் பணியாளர்களாகப் பணி செய்கிறோம். ஒருநாளைக்கு 10 மணி நேரம் பணி. பணிக்களத்திற்குப் போய் வர 1.30 மணி நேரம் ஆகும். பணி முடிந்தபின், செத்த மாடுபோல் வீடு திரும்புவோம். என் கைகள் விரைப்பாக உள்ளன. என்னால் மெதுவாகவே எழுத முடிகிறது” என்று ராஜிவ் ஒருமுறை ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.
நவம்பர் மாத இறுதியில் விமானம் ஓட்டும் உரிமம் (லைசன்ஸ்) பெற்றவுடன், தம் திட்டங்கள் பற்றி என் தந்தையுடன் பேச ராஜிவ் இத்தாலிக்கு வந்தார். இந்தியா திரும்பி ஒரு வர்த்தக விமானி உரிமம் (லைசன்ஸ்) பெற்று, ஒரு விமானி வேலை பெற்று, என்னைத் திருமணம் செய்ய எண்ணினார்.
ராஜிவின் நேர்மையில் என் தந்தைக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. ‘‘ஒருவரை அவர் கண்களால் அறியலாம்” என்றார் என் தந்தை. ஆனால், என் தந்தைக்கு அவருடைய மகள் பற்றியே கவலை. ‘அவளுக்கு வயது மிகவும் குறைவு. இந்திய வாழ்க்கை முறையில் ஈடுபடுவது கடினம்! மாறுபட்ட மக்கள் – மாறுபட்ட பழக்க வழக்கங்கள்.’
நான் உரிய வயது பெறும்வரை – சிறிய விடுமுறைக்குக்கூட – என்னை அனுமதிக்க அவர் விரும்பவில்லை. இருப்பினும், ராஜிவும் நானும் ஓர் ஆண்டு பிரிந்திருந்து, அதன் பின்னர் அதேபோல் நான் அவரை விரும்பினால் – இந்தியா செல்ல என்னை என் தந்தை அனுமதிப்பார் என்பதுதான் நிலை.
அப்போதும் நான், என் தந்தையைப் பற்றி ‘அவர் என் வாழ்க்கையைக் குளறுபடி செய்வதாக’ எண்ணவில்லை. ‘ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்’ என என் தந்தை உறுதியாக எண்ணினார். ஆனால், அவர் எண்ணியது நடைபெறவில்லை. அவர் தம் வாக்கைக் காப்பாற்றினார். எனக்கு 21 வயது ஆனவுடன் இந்தியா செல்ல அனுமதித்தார்.
1968 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் நாள், நான் டெல்லியை வந்தடைந்தேன். என்னைக் கூட்டிச் செல்ல தம் சகோதரர் சஞ்சய், நண்பர் அமித் ஆகியோருடன் விமான நிலையத்திற்கு ராஜிவ் வந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஏதோ விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது ராஜிவ் அருகில் நான் உள்ளேன். இனிமேல் எதுவும் யாரும் எங்களைப் பிரிக்க முடியாது!
எங்கள் திருமண நாளான பிப்ரவரி 25க்கு முந்திய நாள்வரை, அலகாபாத்தில் ராஜிவின் குடும்ப நண்பரான பச்சன் வீட்டில் நான் தங்கியிருந்தேன். என்னைச் சுற்றிலும் – நிறங்கள், சுவைகள், மணங்கள், மக்கள் – எல்லாம் புதியவை! மாறுபட்டவை! அங்குள்ளோர் என்னை ஆர்வத்துடன் பார்த்தனர்! என்னை எங்கும் பின்தொடர்ந்தனர். எனக்கு வியப்பளித்தாலும், அது ஒரு எரிச்சலூட்டும் அனுபவம்தான்! தனி ஒதுக்கிடம் இல்லை! என்னைக் கட்டுப்படுத்தி, என் உணர்வுகளை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
எனக்குக் கோபம் ஏற்பட்டது. ‘அவர்களின் கண்கள் என்னையே ஏன் உற்றுக் கவனிக்கின்றன?’ என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ‘நான் அந்நியமானவள் மட்டுமன்றி, வெளிநாட்டவளும்கூட என்பதுமட்டும் காரணம் அன்று! காலம் காலமாக இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பழக்கமாகிவிட்ட ஒரு குடும்பத்தில், நான் ஒரு புதுவரவு என்பதுவும்கூட!’ என்பதைக் காலப்போக்கில் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவர்கள் செய்தது, செய்யாதது, சொன்னது, சொல்லாதது என ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு, அதன் பின்னரே அவை முடிவு செய்யப்பட்டன. இவ்வாறு வாழ்வது எப்படிச் சாத்தியமாகும்!
என்னுடைய பிறவிக் குணமாகப் பிரதிபலிப்பது, எங்கும் எப்போதும் பின்வாங்கி ஒதுங்குவதாகும். என்னுடைய கூச்ச சுபாவத்தை அறிந்த ராஜிவும் அவரது தாயாரும் என் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். ஆனால், சில பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் எனக்குக் கடினமாக இருந்தது. இந்திய உடைகளை அணிவது எனக்குப் பொருத்தமற்றதாகவும் வசதி குறைந்ததாயுமிருந்தது. இந்திய உணவு வகைகளின் காரச்சுவையை என் வாய் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ராஜிவோ, என் மாமியாரோ இவற்றை என்மீது வற்புறுத்தித் திணிக்கவில்லை. என் தயக்கமும் அவ்வப்போது என்னிடம் தோன்றும் விருப்பமின்மையும் என் மாமியாருக்கு மனத்துயரளித்தாலும், அவர் தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இந்திய உணவு வகைகளை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு ஊக்கம் அளித்தார். நான் நானாகவே இருக்கவும், ராஜிவின் உலகில் என்னை ஒன்றிணைத்துக்கொள்ள விரும்புவதையும் அனுமதித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்ப நடவடிக்கைகளில் படிப்படியாக என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் வீட்டிலும், பிறகு டெல்லியில் ஒரு நிறுவனத்திலும் இந்தி மொழியைக் கற்கத் தொடங்கினேன். குடும்பத்தோடும் குடும்ப நண்பர்களோடும் பேசிப் பழக, இந்தி கற்பது எளிதாகவும் உதவியாகவும் இருந்தது. எல்லாரும் உணவு மேஜையில் சூழ அமர்ந்து சாப்பிடும் போது, பொதுவாக நாங்கள் இந்தியில் உரையாடுவதுதான் வழக்கம்.
தீன்மூர்த்தி இல்லத்தில் வாழ்ந்த காலந்தொட்டு, குடும்பத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அலுவலகப் பணிகள் குறுக்கிட்டாலொழிய, எங்கிருந்தாலும் குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவு அருந்துவதையே வழக்கமாகக்கொண்டு பின்பற்றி வந்தோம். எப்படிப்பட்ட வேலை இருந்தாலும் சிறு பிராயம் முதலே, ராஜிவும் சஞ்சயும் வீட்டிற்குச் சென்று குடும்பதோடு சேர்ந்து உணவு உண்பது என்பதே வழக்கமாய் இருந்துள்ளது. ராஜிவ் தம் தாயாருடன் சேர்ந்து உணவு அருந்திய பின்னர்தான் பிற பணிகளைச் செய்வார். மாலை வேளைகளில் நண்பர்களைக் காண நானும் ராஜிவும் வெளியில் செல்வது உண்டு.
இப்படிக் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவது என்பது ஒரு சுமையான வேலையன்று. உணவு அருந்தும்போது, சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம் பெறுவது உண்டு. சீரிய கருத்துப் பரிமாற்றங்களும் நகைச்சுவைப் பேச்சுகளும் அங்கே வெளிப்படுவது உண்டு. தம் கருத்துக்களைத் தெரிவித்து உரையாடுவதில் என் மாமியார் திறமைசாலி. வினாடி வினா விளையாட்டுக்கள், கதை சொல்லுதல் போன்றவற்றில், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தையாய் இருப்பதில் என் மாமியார் அதிகம் கவனம் செலுத்தினார். கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களைப் பற்றியும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் கூறி, பழைய வரலாற்று நிகழ்ச்சிகளை உயிரோட்டமுடையதாக்குவார். எங்களையும்கூட அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்து மகிழ்ச்சி அடைவார். அவர் பேசும் அனைத்திலும் பங்கு கொள்ளச் செய்வார்.
அந்தக் குடும்பத்தின் அச்சாகவே அவர் திகழ்ந்தார். இந்நிலை அவரது அதிகாரத்தால் ஏற்பட்டதன்று. அன்பாலும் அதைக் கொடுக்கும் தன்மையாலும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களைப் பொறுத்தவரை, எங்கள்மீது அவர் ஆர்வம் காட்டினார்; அன்பு செலுத்தினார்; அக்கறை காட்டினார். பொதுவாகச் சொல்வதானால், பல்வேறு வகையில் குடும்பத்தில் மட்டுமல்லாமல், தம் தாய் நாட்டின்மீதும் ஈடுபாடு கொண்டவராக அவர் வாழ்ந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவரின் சந்திப்புக்கள் குறித்தும், அனுபவங்கள் பற்றியும் எங்களுக்கு எழுதுவார். தமக்குப் பல்வேறு பணிகள் இருக்கும் நாள்களிலும், வீட்டுப் பணிகள் குறித்து நாங்கள் ஒன்றாக இருக்கையில் எங்களுக்கு நினைவூட்டுவார். இங்கே ஒரு நிகழ்ச்சியைக் கட்டாயம் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
என் திருமணம் முடிந்தபிறகு, என் தாயார் இத்தாலி செல்லுகையில், அந்த நாளில் – அத்தகைய முதல் குறிப்பு ஒன்றை, என் மாமியார் அலுவலகத்திலிருந்து பெற்றேன். அந்தக் குறிப்பு என்ன தெரியுமா? ‘‘சோனியா! உனக்கு ‘ஹலோ’ கூறத்தான்! உன்னை நேசிக்கிறோம் என்பதைக் கூறத்தான்!” என்பதேயாகும் அது. இன்னொன்றையும் சொல்லலாம்! ராஜிவுக்கு அவர் அனுப்பிய ஒரு குறிப்பு, புகைப்படக் கலை பற்றியது. ‘‘ராஜிவ் ஒரு அழகிய படத்தை எடுக்கும் வாய்ப்பை நீ நழுவவிட்டுவிட்டாய்! இன்று காலையில், அக்பர் சாலையில் ஒரு மரக்கிளையில் வால் நீண்ட கிளிகள் இரண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தன. ஒரு ஜோடி அழகான மரங்கொத்திப் பறவைகளும் இருந்தன. அவை ஏதோ பரப்பரப்புடன் சிறகடித்தன” என்பதே அந்தக் குறிப்பாகும். எப்போதாவது எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், இதே வழிமுறையைக் கையாண்டு, ஒரு குறிப்புச் செய்தியை அனுப்பியே தீர்த்து வைத்து விடுவார். ‘‘நாளை நவ்ரோஸ். ஆனால் நாளை அதிகாலையே நான் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இப்போதே வந்து அன்பு முத்தம் தரலாமா?”
என் மாமியாரிடம் நான் அறிந்தமட்டில், போலி கௌரவமே கிடையாது. அவர் மிகவும் இயல்பானவர். புறத்தூண்டுதலுக்கு ஆட்படாதவர்.
இந்திய நாட்டு வரலாற்றில் தம் குடும்பத்தின் பெருமைமிகு பணிப் பங்கை நன்கு அறிந்தவர். அந்த விழிப்புணர்வைத் தம் மகன்களுக்கும் உணர்த்தி, அவர்களையும் அந்தப் பொறுப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.
பள்ளியில் படித்தபோது ராஜிவுக்கு எழுதிய கடிதங்களை நான் கண்டபோது, இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டது. குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் செய்த தவறைப் பற்றி 1958 இல் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஒருவர் தம் நடை உடை பாவனை பற்றி அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் தம் குடும்பத்திற்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் அவப்பெயர் பெற்றுத் தந்தவராகிவிடுவார்” என்று குறிப்பிட்டிருந்த செய்தி எவ்வளவு சிறந்த அறிவுரை, காலத்தால் அழிக்க முடியாத உண்மை என்பதை உணர்த்தியது.
என் மாமியாரின் திருமணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருப்பினும், ஃபிரோஸைத் தவிர வேறு யாரையும் தம்மால் திருமணம் செய்திருக்க முடியாது என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அவர் நேசித்த ஒரே மனிதர் அவர்தான். பலமுறை அவரைப் பற்றி நேச பாவத்தோடு பேசியுள்ளார். அவரது மரணத்துக்குப்பின் நான் கண்ட ஒரு கடிதத்தில், ‘‘சோனியா, உனக்கு நான் ஏன் எழுதுகிறேன் என்றால், நீ இந்தக் குடும்பத்தில் பாசம் கொண்டுள்ளாய். மேலும் உன்னில் என்னைக் காண்கிறேன். உன் கணவரும் என் மகனுமாகிய ராஜிவிடம் என் கணவரின் பல பண்புகள் அப்படியே உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் படித்துச் சுவைத்தேன். தோற்றத்திலும் மனோபாவத்திலும் ராஜிவ், ஃபிரோஸை நினைவூட்டுவதை அடிக்கடி குறிப்பிடுவார்.
‘‘தந்தையைப் போலவே ராஜிவும் சாதுவானவன். அலட்டிக்கொள்ளாதவன். கோபப்படாதவன். ஒருவேளை கோபப்பட்டால், உடனே அதற்காக வருந்துபவன். ராஜிவ், சஞ்சய் ஆகிய இருவரும் இயற்கையிலும் இசையின்பாலும் நாட்டமுடையவர்கள். முழுவதும் பிரத்தியக்ஷ உலகில் வாழ்பவர்கள். கைவினை விற்பன்னர்கள்” என்றெல்லாம் கூறியதை எண்ணிப் பார்த்தேன்.
என் மாமியாருடைய கணவருக்குத் தோட்டக்கலையில் உள்ள ஆர்வம் குறித்து, சிறையிலிருந்தபோது, தம் தந்தைக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றிற்கு, ‘‘டிசம்பர் மாத ரம்மியமான குளிரில் வீட்டில் இதமான சூரிய ஒளி நுழையும்போது, ஆனந்தபவன் எப்படி இருக்கும் என்பதை எண்ணுகிறேன். தோட்டத்தில் நீயும் ஃபிரோஸும் மகிழ்ச்சியாக இருப்பதையும் வீட்டினுள் மாற்றங்கள் செய்து வாழ்வை மகிழ்வோடு அனுபவிப்பதையும் எண்ணுகிறேன்” என்று பதில் எழுதியதில் ஜவஹர் தத்ரூபமாகக் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியின் புறநகர்ப் பகுதியில் 1950 இன் பிற்பகுதியில் ஃபிரோஸ் வாங்கிக் கொண்டுவந்து நட்ட மரங்கள் பல மண் தரையில் நன்கு வளர்ந்துள்ளன. அழகிய தோட்டங்களில் தகப்பனாரோடு ராஜிவ் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொண்டவர் என்பதை நான் அறிந்தேன். தமக்கு விருப்பமான மரங்களையும் செடி கொடிகளையும் நாங்கள் எங்கு வசித்தாலும் நட்டுப் பேணுவதில் இன்பம் கண்டவர். வீட்டின் முறைமையையும் தூய்மையையும் உயர்வையும் ராஜிவ் விரும்பினார். வீட்டின் புறத்தே இயற்கையாய் அமைந்த தன்மையைப் பெரிதும் விரும்பினார். அங்கெல்லாம் செயற்கைத் தோட்டங்களை, வெட்டிக் கத்தரித்து முறைப்படுத்தப்பட்ட செடிகளை அவர் விரும்பவில்லை. ராஜிவின் பேணிப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்கள் சில. அவற்றில் அவருடைய தகப்பனாரின் திரைப்படக் கருவியும் குடும்பத் திரைப்படச் சுருள்களும் அடங்கும்.
ராஜிவ் தம்முடைய தகப்பனாரின் தொழில் பட்டறையைக் கவனமாகவும் முறையாகவும் பராமரித்தார். பொறிகளையும் எந்திரங்களையும் பழுது பார்ப்பதிலும் சுத்தம் செய்வதிலும் அதனைப் பொருத்துவதிலும் ராஜிவுக்கு ஆர்வம் மிகுதி. சில சமயங்களில் வீட்டுப் பொருள்களில் ஏதாவது ஒன்றை நான் தேடும்போது, அது அவருடைய ‘பணிமனை’யில் காணப்படும்.
எங்கள் மணவாழ்க்கையின் தொடக்க நாள்கள் முதலே, இசையும் புகைப்படக் கலையும் முக்கியப் பங்கு வகித்தன. கீழ்த் திசை மற்றும் மேற்கத்திய இசை ஆகிய இரண்டிலுமே எங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. தரமான ஒலி, இந்திய இசை ஆகியவற்றில் சீரிய ஆர்வம் காரணமாக ராஜிவ் தாமே பல சிறந்த இசைக் கலைஞர்களின் பாடல்களை ஒலிப்பதிவு செய்வார். சிறப்பாக, ஜாஸ் எனப்படும் ஒருவகை இசையை அவர் விரும்பிக் கேட்பார். சில சமயங்களில் ‘பாப்’ இசையையும் ரசிப்பார். பல ஆண்டுகளாக அவர் தமக்கு விருப்பமான இசைப் பாடல்களைச் சேர்த்து வைத்தார். அந்தப் பாடல் தொகுப்பை எல்லாம் கவனத்துடன் பாதுகாத்தார். தம்மைப் போலவே பிறரும் அவற்றைக் கவனமாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, யாரையும் தம் இசைக் கருவியையோ அல்லது இசைத்தட்டுக்களையோ தொட அனுமதிக்க மாட்டார்.
தம்மிடம் உள்ள புகைப்படங்களிலும் இசைத் தகடுகளிலும் அவருக்கு அளவற்ற ஈடுபாடு காணப்பட்டது. பாரம்பரிய ஒழுங்குமுறையில் அவற்றைப் பட்டியலிட்டுப் பேணிக் காத்து வந்தார். தம் குழந்தைகளையும் புகைப்படம் எடுக்கும் கலைத்துறையில் ஈடுபாடுகொள்ள ஊக்குவித்தார்.
… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்