சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு முலாயம் சிங் யாதவ் மற்றும் சரத்பவார் போன்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இருப்பினும், இத்தகைய சக்திகளால் அவரை கட்டிப் போட்டுவிட முடியவில்லை. இத்தகையோர் அவரை வெறுத்தாலும், 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பெரும் சக்தி வாய்ந்த பெண்மணியாகவே சோனியா காந்தி திகழ்ந்தார்.
இந்திரா காந்தியின் இத்தாலி மருமகளும், ராஜிவ் காந்தியின் மனைவியான சோனியா மைனோ காந்தி இந்த அமைப்பின் ஒவ்வொரு கட்டமைப்புக்குள்ளும் பொருந்தி, பல கோடி இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்த ஒட்டுமொத்த அமைப்பு அவரை வெளிநாட்டவர் என்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு அவர் பிரதமராவது, முலாயம் சிங் மற்றும் இடதுசாரிகள் மூலம் தடுக்கப்பட்டது. வெளியே உள்ளவர்களை மட்டுமல்ல, தன் கட்சிக்குள்ளேயும் சரத்பவார் போன்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனினும், 1990களில் தேக்கத்தைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்தியதில் ஆகட்டும், கடந்த 10 ஆண்டுகளாக மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து இந்திய அரசியலில் வகுப்புவாதத்தைத் தடுத்ததில் ஆகட்டும் சோனியா காந்தியின் பங்கெடுப்பு மகத்தானது.
அவரை வெளிநாட்டவர் என்று சொன்னது நகைச்சுவையாக இருந்தது. தனது கணவர் அரசியலுக்கு வருவதையே அவர் விரும்பியதில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு அவர் வழியில் ராஜிவ் காந்தி அரசியலுக்கு வருவதை சோனியா காந்தி தடுத்து நிறுத்த முயன்றார். இந்திரா காந்தியைப் போல் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரது பயம் உண்மையானது.
அப்போது சோனியா முன்பு 2 சோதனைகள் இருந்தன. ஒன்று, நேரு-காந்திய அரசியல் குடும்பத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு. மற்றொன்று, காங்கிரஸ் ஒரு கடந்த கால வரலாறாக மாறுவதைத் தடுக்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளிலும் சோனியா நன்றாகவே செயல்பட்டதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.
இந்தியாவை மற்றொரு பாகிஸ்தானாக மாற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குச் சவாலாக இருக்கும் இந்தியர்களில் ஒருவராக அவரது மகன் ராகுல் காந்தி படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறார். கடந்த 2004 மற்றும் 2009 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் இந்திய அரசியலில் பாஜகவின் வளர்ச்சியை சோனியா காந்தி தடுத்து நிறுத்தியுள்ளார்.
19 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் இதற்கு மேல் சோனியாவால் என்ன தான் செய்ய முடியும்? மக்கள் செல்வாக்கு இல்லாத சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அழிவின் விளிம்பில் கட்சி இருந்தது. அந்த சூழலில், கடந்த 1998 ஆம் ஆண்டு சோனியா காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் சுற்று, அவ்வளவு எளிதானது அல்ல. சோனியா காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, தேர்தலுக்கு நாடு தயாராக இருந்தது.
இந்த சூழ்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டிய சூழல் சோனியா காந்திக்கு ஏற்பட்டது. சோனியா வெளிநாட்டவர் என்பதால், காங்கிரஸ் தலைவராகக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சரத்பவார் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகள் தனித்தனியே போட்டியிட்டதால், காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. எனினும், ஒரு சில மாதங்களிலேயே வாஜ்பாய் அரசை சோனியா கவிழ்த்தார். 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வெளிநாட்டவர் என்ற காரணத்தைச் சொல்லி, சோனியா காந்தி பிரதமராவதை முலாயம் சிங் யாதவ் தடுத்துவிட்டார்.
ஆனால், அப்போது அரசியலுக்கு ஏற்றவராக சோனியா மாறியிருந்தார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தனித்து நின்று எதிர்த்தால், அது காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் என்று சோனியா உணர்ந்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக முகாமை எதிர்க்க மதச்சார்பற்ற சக்திகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.
வழக்கமாக ஆட்சி அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிராத காங்கிரஸ்,கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது நல்ல முடிவாக இருந்தது. யாருடனும் கூட்டணி வைப்பதற்கு பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் சரி செய்து, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு தேர்தலை சோனியா காந்தி சந்தித்தார்.
அப்போது யாதவ் மற்றும் பஸ்வானின் கட்சிகள் காங்கிரஸ் குடையின் கீழ் வர மறுத்துவிட்டன. கடைசிவரை இந்த கட்சியினர் காங்கிரசுக்கு எதிரான அரசியலையே செய்தனர். இருப்பினும், வாஜ்பாய் ஆட்சியை அகற்ற, மறைந்த ஜோதிபாசுவும், வி.பி.சிங்கும் சோனியாவுக்குப் பின்னே இருந்து உதவினர்.
2004 ஆம் ஆண்டு தேர்தல், பழம்பெரும் தலைவர் வாஜ்பாய்க்கு எதிரான சோனியாவின் முதல் வெற்றியாக இருந்தது. இதன்மூலம் அவரை வெளிநாட்டவர் என்று கூறி வந்த இந்த அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றி பெற்றதும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டதும், சோனியாவுக்கு எதிராக வெளிநாட்டவர் என்ற பிரச்சாரம் தலைதூக்கியது. இதனைக் கண்டு சோனியா அதிர்ந்தார். மன்மோகன் சிங்கை பிரதமராக்கிவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரானார்.
பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று நட்வர்சிங் வேண்டிக் கேட்டுக் கொண்டும், பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த நேரத்தில் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தால், சோனியாவை யாராலும் தடுத்திருக்க முடியாது. இன்றைக்கு அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தாலும், பிரதமர் பதவியை அவர் நிராகரித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.
இப்போது சோனியாவின் போக்கு ஏழை மக்களுக்காகவே அமைந்தது. நாட்டை வழிநடத்துவது குறித்த குழப்பம் ஏதும் அவரிடம் இல்லை. அவரது மாமியார் இந்திரா காந்தியைப் போலவே, இந்தியாவின் ஏழை மக்களுக்கான ஆதரவு நிலையை எடுத்தார். ஏழைகளின் மீதான கரிசனத்துக்கு முதலில் பாதை அமைத்துக் கொடுத்தவர் நேரு என்பதை மறக்க முடியாது.
உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை மக்களை விடப் பெரிதாக நினைத்தாரா? இல்லை. தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராகி, அருணா ராய் மற்றும் ஜீன் ட்ரென் போன்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி, ஏழைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் முதல் படி தான், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கான 100 நாள் வேலை உறுதித்திட்டம். சந்தைச் சக்திகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. தமது சொந்த அரசாங்கத்திலேயே இதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டபோதும், அதையும் மீறி மக்களுக்குக் கொண்டு சென்றவர் சோனியா காந்தி.
சோனியா காந்தியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலை உறுதித் திட்டம்) ஏழைகள் மக்கள் மத்தியிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் மாயாஜாலத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் 10 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. சோனியாவின் ஏழைகளுக்கு ஆதரவான பொருளாதார நடவடிக்கை, சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியக் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது.
இது அடுத்து வந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றியைச் சுவைக்கக் காரணமாக இருந்தது. இதற்கு சோனியா காந்திக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், 2015 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தோல்வியை ஏற்படுத்தியதன்மூலம், இந்திய அரசியல் வரலாறு மாறுபட்டது என்பது உணர்த்தப்பட்டது.
19 ஆண்டுகள் அவரை பிரதமராக விடாமல் தடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு சோனியா காந்தி உடல் நலிவுற்றார். தன் மகன் ராகுல் காந்தியை கட்சிக்குத் தலைமையேற்க வைத்தார்.
தமது 71 ஆவது வயதிலேயே அரசியலிலிருந்து ஓய்வு பெற சோனியா காந்தி நினைத்தார். கட்சிக்குத் தலைமை பொறுப்பேற்கும் முன், அவர் முன்னே இருந்த 2 சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிரூட்டினார்.
கட்சியை வழி நடத்த ராகுல்காந்திக்கு வழிவிட்டுள்ளார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி தயாராக உள்ளார்.
சோனியாவின் அரசியல் ஆளுமை குறித்து இனி வரலாறு தீர்ப்பளிக்கும். ஏழைகளைப் பற்றிச் சிந்தித்து கோடிக்கணக்கான மக்களை வறுமைப் பிடியிலிருந்து அவர் மீட்டார். இது எந்த அரசியல்வாதியும் செய்யாதது. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில், அரசியல் தரகர்கள் இருக்கும் நாட்டில் ஒரு பெண் நிகழ்த்திய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.