இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, ‘MY RAJIV’ என்ற ஆங்கில நூலை 1992இல் அன்னை சோனியா காந்தி தொகுத்து வெளியிட்டார். அரிய புகைப்படங்களுடன் இந்நூல் அமைந்துள்ளதே இதன் தனிச் சிறப்பு! தமிழ் வாசகர்கள் இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள் இத்தொடரில் வெளிவர உள்ளன. இத்தொடரில் ராஜிவ் காந்தியோடு சோனியா காந்தியின் முதல் சந்திப்பிலிருந்து அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள்வரை நிகழ்ந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்து அன்னை சோனியா காந்தி அவர்களின் 74வது பிறந்த நாளை (டிசம்பர் 9) முன்னிட்டு இன்று தொடங்கி ஞாயிறு தோறும் desiyamurasu.com இணையத்தில் தொடராக வெளிவரும். அனைவரும் படித்து பகிர்வீர். – ஆ .கோபண்ணா
முதல் சந்திப்பு
1965ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாள், நான் கேம்பிரிட்ஜ் வந்து சேர்ந்தேன். அப்போது என் வயது பதினெட்டு. வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பள்ளியில் நான் சேர்ந்தேன். அப்பள்ளி எனக்கு ஒதுக்கிய ஒரு ஆங்கிலக் குடும்பத்தில், பணம் செலுத்தித் தங்கும் விருந்தாளியாகத் தங்கி வாழ்ந்தேன். என் வாழ்க்கையில் முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியே தங்கினேன்!
அந்த ஆண்டில், அந்தப் பருவத்தில் கேம்பிரிட்ஜில் மிகுந்த குளிர். வெளிச்சம் குறைவு. அப்போது என்னால் சரளமாக ஆங்கிலம் பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. இதற்கும்முன் வேகவைத்த முட்டைக் கோசையோ குழைவாகச் சமைக்கப்பட்ட ஒருவகையான இடியாப்ப உணவையோ சாப்பிட்டுப் பழக்கமில்லை. ஒவ்வொரு நாளும் குளிப்பதற்குப் பணம் செலுத்தியும் பழக்கமில்லை. மிகவும் அந்நியமான அத்தகைய இடத்தில், நான் படிக்க வேண்டியிருந்தது என்ன சோதனை! எனது நிலை மிகவும் தர்மசங்கடமாய் இருந்தது.
வீட்டை விட்டு வெளிவந்ததே எனக்கு மிகவும் பயங்கரமான அனுபவம். வெளிநாடு செல்லும் பெரும்பாலான இத்தாலியர்கள் போன்று, எனக்கும் இத்தாலிய சமையல் உணவு கிட்டவில்லை. வீட்டுச் சமையல் போன்ற உணவு கிடைக்கும் ஒரே இடம், வர்சிடி (Varsity) எனும் கிரேக்க விடுதி ஒன்றுதான். கேம்பிரிட்ஜில் அதைத் தவிர வேறு இடம் இல்லை. மதிய உணவுக்காக, வழக்கமாகத் தினமும் அங்கே போகத் தொடங்கினேன்.
அந்த விடுதியில், ஒரு நீளமான மேஜையில், எனக்கு எதிரில், ஒரு பெரிய மாணவர் கும்பலாக உட்கார்ந்து கும்மாளமடிப்பதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அந்தக் கும்பலிலிருந்த இளைஞன் ஒருவன் மட்டும் அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாகத் தோன்றினான். தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் அவன் தனித்துத் தோன்றினான். மற்றவர்களைப்போல் அவன் கிளர்ச்சிக் கூச்சல் போட மாட்டான்; கூச்சமும் அடக்கப் பண்பாடும் மிக்கவன். அவனுடைய கண்கள் பெரிதாகவும் கருமையாகவும் இருந்தன. வியக்கத்தக்க, களங்கமற்ற, எவரையும் கவரக் கூடிய புன்சிரிப்புடையவன்.
ஒருநாள், நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நான் முன்பு குறிப்பிட்ட அந்த இளைஞன் ‘கிறிஸ்டியன்’ என்ற எனது ஜெர்மானிய நண்பனுடன் நான் இருந்த இடத்திற்கு வந்தான். கிறிஸ்டியனுக்கு இத்தாலிய மொழி நன்கு தெரியும். வழக்கமான வரவேற்பு உபசாரங்களுக்குப் பிறகு, என்னை அந்த இளைஞனுக்குக் கிறிஸ்டியன் அறிமுகப்படுத்தினான். அந்த இளைஞன் பெயர் ராஜிவ். முதல் தடவை அவனை என் கண்கள் கண்டபோது, என் இதயம் அவன்பால் ஈர்க்கப்பட்டது. இருவருமே ஒருவரை ஒருவர் வரவேற்றோம். என்னைப் பொறுத்தவரை அந்த முதல் சந்திப்பே ஒரு ‘கண்டதும் காதல்தான்’. பிறகு அந்த இளைஞனும் அதுபோலவே தானும் காதல் கொண்டதாகக் கூறினான். உண்மையில் அந்த இளைஞன் கிறிஸ்டியனிடம் தன்னை எனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கூறியிருக்கிறான்.
எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு க்கவ்வளவு தடவை நாங்கள் சேர்ந்திருப்பதை விரும்பினோம். எங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒன்றாக இருப்போம். அந்த நாள்களில், எனக்கு இந்தியாவைப் பற்றி ஒரு தெளிவற்ற எண்ணமே இருந்தது! அது உலகில் எங்கோ உள்ளதென்றும் அங்குப் பாம்புகள், யானைகள், காடுகள் அதிகமென்றும் எண்ணினேன். அது திட்டவட்டமாக எங்குள்ளதென்றோ, அது எப்படிப்பட்டதென்றோ எனக்குத் தெரியாது. ஆனால் விரைவிலேயே என் பள்ளி நண்பன் ஒருவன்மூலம் இந்தியாவைப் பற்றி அறியும் வாய்ப்பு கிட்டியது. என்னைவிட அவனுக்குப் பூகோள அறிவு சற்று அதிகம். அவன்மூலம், உலகின் மறுமுனையில் இந்தியா உள்ளதென்பதையும் வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்தேன்.
கேம்பிரிட்ஜ் வாழ்க்கை இப்போது எளிதாக, இனிதாக இருந்தது. எனக்குப் பல நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் ராஜிவ் விசேஷமானவர்! எல்லாருக்கும்போல எனக்கும் வீட்டைவிட்டு வெளிவந்த எண்ணம், தனிமைப் பயம் மறைந்தது. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டபின், ராஜிவும் நானும் எங்களைப் பற்றியும் எங்கள் குடும்பங்கள் பற்றியும் எங்கள் அபிலாஷைகள் பற்றியும் பேசுவோம். எங்கள் குடும்பங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. என் தந்தையை, அவரது மாகாணச் சூழலில் மட்டும், திருவாளர் மைனோ எனப் பிறர் அறிவர்.
இத்தாலியில் கட்டுமான வேலை ஓங்கியிருந்த அந்தக் காலத்தில், அவர் ஒரு கட்டட நிறுவன உரிமையாளராக வசதியுடன் இருந்தார். திறமையால் கண்டிப்பால், ஒவ்வொரு பைசாவையும் கடின உழைப்பால் சம்பாதித்தார். அவர் ஒரு நேர்மையான கறார் பேர்வழி.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ராஜிவ் குடும்பத்தின் பங்கு, இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திற்கே தெரியும். ராஜிவ்மூலம், அவரது தாத்தா ஜவஹர்லால் நேரு, ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்ததை அறிந்தேன். அவரது தாயார் இந்திய அமைச்சர்களுள் ஒருவர் என்பதையும் அறிந்தேன். அந்த ஆண்டு இறுதியில், அவர் தன் தாயாருக்கு லண்டனுக்கு வரும்போது என்னைப் பார்க்கும்படி கடிதம் எழுதினார். என்னைப் பொறுத்தவரை, அந்த இளைஞன்பால் எனக்குள்ள ஈடுபாட்டை என் பெற்றோரிடம் கூறும் தைரியம் எனக்கு வரவில்லை. என் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு அந்நியர் மட்டுமன்றி, ஒரு வெளிநாட்டவருங்கூட.
ராஜிவின் தாயார், லண்டன் வரும் நாள் நெருங்கியது. அவரைப் பார்க்கும் சமயத்தை எண்ணும்போதே, எனக்கு மனத்தில் ஒருவகைக் கலக்கம். அவரை நான் சந்திக்கவும் அவர் என்னைப் பார்க்கவும் நேரம் குறிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜிலிருந்து அவரிடம் என்னை ராஜிவ் கூட்டிச் சென்றார். அவர் இருந்த இடத்திற்குச் சென்றதும் எனக்கு ஒரே அச்சம். என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னிடம் அவர் என்ன சொல்வாரோ, அல்லது என்ன செய்யச் சொல்வாரோ & கடவுளே அதை அறிவார். (அந்த இளைஞனின் தாயின் சக்தி இந்தியாவுக்கு மட்டும் உரித்தானது அன்று.) ராஜிவ் என்னைச் சமாதானப்படுத்தித் தைரியமூட்டினார். அதனால் ஏதும் பயன் விளையவில்லை. எனவே, தன் தாயிடம் நான் அவர்களைச் சந்திக்க முடியாது என்பதைக் கூறினான். அந்தச் சந்திப்பு ரத்தாயிற்று.
மீண்டுமொரு நாள் அந்த இளைஞனால் தன் தாயுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறை நான் முன்புபோல் செய்யக் கூடாது என மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டேன். இந்தியத் தூதரகத்தில் இருந்த அறையில் ராஜிவின் தாயாரைச் சந்தித்தேன். அவர் இயல்பாகவும் அன்போடும் நடப்பதைக் கண்டு எனக்குள் பயம் அகன்றது. என்னை அச்சப்படாதிருக்குமாறு கூறினார். அவர் மிகவும் அன்போடு இருந்தார்.
ஆங்கிலத்தைவிட, பிரெஞ்சு மொழியில் நான் சரளமாகப் பேசுவேன் என்பதை அறிந்து, பிரெஞ்சு மொழியில் பேசினார். என்னைப் பற்றியும் நான் கற்கும் கல்வி பற்றியும் விசாரித்தார். எனக்குப் பயப்படாதிருக்க அறிவுரை வழங்கினார். இளம் வயதில் தாமும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததைப் பற்றிக் கூறினார். காதலிப்பது பற்றியும் அவர் மனம் திறந்து பேசினார். என்னை முழுமையாக அறிந்து கொண்டார்.
அன்று மாலை நானும் ராஜிவும் ஒரு மாணவர் விருந்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. முகப்பு அறைகளுள் ஒன்றில் என் மாலை உடையை அணிந்தேன். என்னுடைய காலணி ஆடை விளிம்பில்பட்டுச் சற்றுத் தையல் பிரிந்துவிட்டது. அமைதியாக (பிற்காலத்தில் அருகிலிருந்து இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்) ராஜிவின் தாயார், ஒரு கறுப்பு நூல், ஊசியைக்கொண்டு எந்த ஆரவாரமுமின்றி என் ஆடையில் தையல் பிரிந்ததைச் சரி செய்தார். இதுபோல்தானே என் தாயாரும் செய்திருப்பார்! அந்த நேரத்தில், அவர் பற்றி இருந்த சில சிறுசிறு ஐயப்பாடுகளும் நீங்கின.
… மீண்டும் அடுத்த ஞாயிறு தொடரும்