குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 140 வழக்குகள் ஓராண்டாகியும் இன்னும்ii விசாரணைக்கு வரவில்லை.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தாக்கல் செய்த மனுவில், சமத்துவத்தை மீறும் வகையிலும், மத ரீதியாக வெளியேற்றப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதில் உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் மற்றும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது என்றும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் இருப்பதாகவும், முஸ்லீம்கள் பாகுபாடாக நடத்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் குறிப்பிட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில்,அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான அடிப்படை உரிமை மீது நடத்தப்பட்ட வெட்கக்கேடான தாக்குதல் என்று குறிப்பிட்டிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சமத்துவம் சமத்துவமின்மையாக மாறியிருப்பதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். ஒருவருக்குக் குடியுரிமை மறுக்க மதத்தைக் காரணம் காட்டக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் 1955 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், குடியுரிமை திருத்தச் சட்டம் மத அடிப்படை மற்றும் பூகோள ரீதியிலான அடிப்படை என்ற 2 கூறுகளாக வரையறுக்கப்படுகிறது. இந்த இரண்டு கூறுகளுமே தேவையற்றவை. மத ரீதியாக சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அடைக்கலம், பாதுகாப்பு மற்றும் குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் பகுத்தறிவின்படி இல்லை என்று கூறியிருந்தார்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத இந்து, சீக்கியர், புத்த மதத்தின், கிறிஸ்தவர், ஜெயின் மற்றும் பார்சி சமுதாயத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்வதை 140 -க்கு மேற்பட்ட மனுக்களிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த 2019 ஆம் டிசம்பர் மாதம் தலைமை நீதிபதி எஸ்ஏ. பாப்டே மற்றும் நீதிபதிகள் எஸ், அப்துல் நஜீர், சஞ்சீவ் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதன்பின்னர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோதும், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் சார்பில், மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் ஆஜாராகி வாதாடினார். அதன்பின்னர், கொரோனா போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பிறகு ஓராண்டாக 140க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு தாமதிக்கப்படுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.