மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, முதல்வர் பழனிசாமியின் அதிவேக நலத்திட்ட அறிவிப்புகள், திமுகவின் தேர்தல் வியூகம்ஆகியவற்றால் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், பெங்களூருவில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வென்றது. அதனால் காங்கிரஸுக்கு இம்முறை குறைவான இடங்களே ஒதுக்க வேண்டும் என்ற பேச்சு திமுகவில் அடிபடுகிறது. அதிலும் பிஹார் தேர்தல் முடிவுக்கு பின் இந்த வாதம் அதிகரித்துள்ளதே?
பிஹார் தேர்தலையும், தமிழக தேர்தலையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. 2019 மக்களவைத் தேர்தலில் பிஹாரில்காங்கிரஸ் ஓர் இடத்தைக் கூட பிடிக்கவில்லை. ஆனால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 19 இடங்களில் வென்றுள்ளது. 45 தொகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவின் சதியால் எங்கள் கூட்டணிக்கு வெற்றி சாத்தியப்படாமல் போய்விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 8 இடங்களை வென்றுள்ளோம். 90 இடங்களில் திமுகவின் வெற்றிக்கு உதவியுள்ளோம். அதில் 25 இடங்களில் காங்கிரஸின் உதவியால் திமுக வென்றதை மறந்துவிடக் கூடாது. 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை கைப்பற்றினோம். அப்படிப் பார்த்தால் காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றுதானே அர்த்தம்?
அப்படியென்றால் வரும் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களை எதிர்பார்க்கிறது?
இப்போதைக்கு அதுபற்றி நான் வெளிப்படையாக பேச விரும்பவில்லை. இதுபற்றி எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எத்தனை தொகுதிகளில் காங்கிரஸுக்கு பலம் உள்ளது, எந்தெந்த தொகுதிகளை பெறுவது, எத்தகைய வியூகங்களை வகுப்பது, யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்பது பற்றியெல்லாம் ஆராய புதிய குழுவை உருவாக்கி உள்ளோம். அண்மையில் எங்கள் கட்சியில் இணைந்த முன்னாள்ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்உள்ளிட்டோரை கொண்டு உயர்நிலைநிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள் ளோம்.
இதுதவிர தமிழகம் முழுக்க மூன்று வெவ்வேறு குழுக்களைக் கொண்டு முறையான சர்வே எடுத்து வருகிறோம். அதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் எண்ணிக்கையை முடிவு செய்வோம்.தற்போதைய அரசின் மீதான அதிருப்தியை மட்டும் வைத்து தேர்தலில் வெல்ல முடியாது. பிஹாரைப் போல தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் பட்சத்தில் 100 இடங்களில் காங்கிரஸால் திமுகவின் கூட்டணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். எனவே திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே சரியான முறையில் தொகுதிகளை பங்கிட்டு, நன்றாக பிரச்சாரம் மேற்கொண்டால்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும்.
திமுகவிடம் தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பேரம் பேச மாட்டோம் என கூறியுள்ளீர்களே?
தொகுதிகளின் எண்ணிக்கைக்காக பிடிவாதமாக, நியாயமற்ற முறையில் நாங்கள் பேரம் பேச மாட்டோம் எனக்கூறினேன். அதேவேளையில் வெளிப்படையான, நேர்மையான பேச்சுவார்த்தையை திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். காங்கிரஸுக்கு இருக்கும் யதார்த்த பலத்தையும், அறிவியல்பூர்வமான புள்ளி விவரத்தையும் கொண்டு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவோம். கடந்த தேர்தல்களை காட்டிலும்இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிரமாகபணியாற்றும் என்பதை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். வாக்குச்சாவடியில் தொடங்கி மாநில கமிட்டி வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களை கண்காணித்து இயக்க தனிக்குழு ஒன் றையும் உருவாக்கியுள்ளோம்.
கோஷ்டி பூசலால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறதே?
இந்த தேர்தலுக்கு முன்பாக கே.எஸ்.அழகிரியை மாற்றும் எண்ணம் இல்லை.மாநில, மாவட்ட, தொகுதி கமிட்டியில் நிர்வாகிகளை மாற்ற உள்ளோம். தேர்தலுக்காக கட்சியின் அமைப்பில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளோம். காங்கிரஸ் ஜனநாயகப்பூர்வமான கட்சி என்பதால் அனைவரும் தங்கள் கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள். அதை கோஷ்டிப் பூசலாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. பிற கட்சிகளில் எந்த சுதந்திரமும் இல்லாததால் நிர்வாகிகளின் மோதல் வெளியே தெரிவதில்லை.
தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவதை போல நீங்கள், ஏர் கலப்பை யாத்திரை நடத்த இருக்கிறீர்களே?
பாஜகவின் வேல் யாத்திரை, மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதற்காக நடத்தப்படுகிறது. அந்த யாத்திரையில் மக்கள்பிரச்சினை எதுவும் பேசப்படவில்லை.ஆனால் எங்களின் ஏர் கலப்பை யாத்திரைமக்களின் பிரச்சினைகளுக்காக நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் செல்லும்இந்த யாத்திரையில் மத்திய அரசின் வேளாண் மசோதா மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார சிக்கல் பேசப்பட உள்ளது. இது தவிர ஜனவரி, பிப்ரவரியிலும் இரு யாத்திரைகளை நடத்த உள்ளோம்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எப்போது வரப் போகிறார்?
அமித் ஷா வருவதால் தமிழகத்தில் எதுவும் மாறிவிடாது. ராகுல் காந்தி டெல்லியில் இருந்தாலும் தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். அவரது இதயத்தில் தமிழகத்துக்கென்று மிக உயர்ந்த இடம் உள்ளது. தமிழகத்தில் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும், அவர் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். ஒவ்வொரு முறை என்னிடம் பேசும்போதும் தமிழகத்தைப் பற்றி உயர்வாகவே பேசுகிறார். தேர்தல் நெருங்கும் போது ராகுல் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்வார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போன்றோர் மூன்றாம் அணி குறித்து வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை காங்கிரஸுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணிக்கு மாறுவீர்களா?
திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே பல தேர்தல்களை சந்தித்து, மக்களின் ஆதரவை பெற்றதன் மூலம் வெற்றிகரமான கூட்டணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது. இந்தக் கூட்டணி மிக வலுவாக இருப்பதால், மூன்றாவது அணி பற்றி பேச விரும்பவில்லை.